Wednesday, November 20, 2013
இறைவனின் இயல்புகள்!
Monday, August 19, 2013
திருமந்திரம்-சூனிய சம்பாஷணை--”வழுதலை வித்திட......”
பகுதி உள்ளது.இதில் மொத்தம் எழுபது பாடல்கள் (மந்திரங்கள்) உள்ளன. எளிதில் பொருள் விளங்காத குறியீட்டு மொழியில் இப்பாடல்கள் அமைந்துள்ளன.
இங்கு நான் சில பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளேன்.ஒரு சிறிய முயற்சி.
”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.”
இதை அப்படியே பொருள் கொண்டால்” தோட்டத்தில் புழுதியைத் தோண்டினேன். அக்குழியில் கத்தரிக்காய்(வழுதல்) விதை விதைத்தேன்.அதிலிருந்து பாகற்கொடி படர்ந்தது.அதில் பூசணி பூத்தது.அதைக் கண்ட,அங்கிருந்த தோட்டக் குடிகளெல்லாம் பயந்து,தம் சிறு தெய்வங்களைத் தொழுது கொண்டு ஓடினார்கள்.அதன் பின் அக்கொடி யில் வாழைக்கனி முற்றிலுமாகப் பழுத்தது”
நேரடியாகப் பார்த்தால் பொருளற்ற ஒரு பாடல்.ஆனால் அறிஞர்கள் இதன் கருத்தை அனுபவ பூர்வமாக விளக்கும்போது வியப்பாக இருக்கிறது. நடக்கமுடியாத ஒரு நிகழ்ச்சி மூலம் தத்துவங்கள் விளக்கப் படுகின்றன..
இங்கு தோட்டம் என்பது நமது உணர்வாகிய நெஞ்சக் கமலம். புழுதியைத் தோண்டுத லாவது,அவ்வுணர்வுகளைப் பயந்து வரும் தத்துவங்களின் இயல்பை ஆராய்ந்து காணுதல்.வழுதலை வித்திடல் என்பது ஐந்தெழுத்தை உள் ஊன்றி நிறுத்துதல்.பாகல் என்பது நிலையில்லாப் பொருள்களில் பற்றற்று இருத்தல்.பூசனி பூத்தது என்பது திருவருள் விளக்கம்.தோட்டக் குடிகள் என்பது நம் அஞ்ஞானம்.வாழை பழுத்தது என்பது இறை அருட்பேறு.
இதையே வேறு முறையில் காணும்போது இவ்வாறு கொள்ளப் படுகிறது...... வழுதலை வித்திடல்-குண்டலினி யோகப் பயிற்சி;பாகல் முளைத்தது-வைராக்கியம் கிடைத்தது;புழுதியைத் தோண்டினேன்-ஆன்மா பற்றிய தத்துவ விசாரம்;பூசனி பூத்தது-சிவ தத்துவத்தைத் தெரிந்து கொள்ளல்;தோட்டக் குடிகள் ஓடினர்-புலனுணர்வுகள் அகலுதல்;பழுத்தது வாழைக்கனி--சிவானுபவம் கிட்டல்.
குண்டலினி யோகமாவது,மூலாதரத்தில் உறங்கும் சக்தியை மேலேற்றி சஹஸ்ராரத்தை அடையச் செய்தல்......சிற்றின்பத்தில் செலவிடும் சுக்கிலத்தை மூலக்கனல் ஆக்கிப் புருவ மத்தியாகிய ஆக்ஞைக்கு ஏற்ற,அங்கு தோன்றும் அருட்சக்தி அருளால், தத்துவப் பிணிப்பு நீங்கி உணர்வுகள் தூய்மை அடைந்து, சஹஸ்ராரம் அடைகிறது.சீவ கரணங்கள்,சிவ கரணங்களாகி சிவானுபவம் விளைகிறது.
வேறு விதமாகச் சொன்னால்...வழுதல் என்பது துறவையும்,பாகல் என்பது உலக மறுப்பையும்,பூசனி என்பது சிவபெருமானையும், தோட்டக் குடிகள் என்பது, ஐம்புலன்களையும்,மும்மலங்களையும்,வாழை பழுத்தல் என்பது முத்தியையும் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது.
சித்தர்களின் கருத்தை யாரால் அறிந்து கொள்ள முடியும்? //
Monday, December 10, 2012
சிவனின் கண்டம் கறுத்ததேன்?
சிவனின் கழுத்து கறுத்ததற்குக் காரணமாக ஒரு கதை உண்டு.பாற்கடலைத் தேவர்களும் அசுரரும் சேர்ந்து கடைந்தபோது அதிலிருந்து நஞ்சு தோன்ற, மற்றவர் நலன் கருதிச் சிவன் அதை உண்டதாகவும்,பார்வதி தேவி அவர் கழுத்தைப் பிடித்து நஞ்சு உள்ளே செல்லாமல் நிறுத்த,சிவனது கழுத்து கறுத்ததாகவும் கதை சொல்வர்.
இது பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார்--
”அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடையோற்கே”
வெண்மையான தலைமாலையை அணிந்த சிவபெருமானுக்கு அண்டங்களையும் எட்டுத் திசைகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் அதோ முகத்தின் கழுத்து கரிய நிறம் உடையதாய் இருப்பதை அறியார் எவருமிலர்.அவர் நஞ்சை உண்டதால் கருமை அடைந்தது என்று உரைப்பவர் அறிவற்றவர்.
பாடலின் பொருள் இவ்வளவே.
ஆனால் இது மட்டுமா திருமூலர் சொல்வார்?
உட்கருத்து என்ன எனப் பார்த்தால்,---
சுக்கிலத்தை கீழ்நோகிச் செலுத்தி வீணாக்குவது கருமையின்,அறியாமையின் குறியீடு. ஆனால் அதை மேல் நோக்கிச் செலுத்துதல்,விந்து மறித்தல் அறிவின் குறியீடு .தொண்டைக் குக் கீழ் உள்ள உடற்பகுதி அறியாமைக்கும்,தொண்டைக்குமேல்,புருவ நடுவும் அதற்கு மேலும் உள்ள பகுதி ஒளிமயமான அறிவின் குறியீடு ஆகும்.நஞ்சு உண்ணுதல் என்பது சுக்கில சக்தியை மடைமாற்றி ஆக்ஞாசக்கரத்திற்கு மேல் செலுத்துதல் என்பதே இதன் உட்பொருள். இதுவே சிவன் உண்ட நஞ்சின் தத்துவம்
ஆனால் இக்கருத்து குண்டலினி பயிலும் மனிதர்க்குப் பொருந்தினும்,தலைவனான சிவனுக்குப் பொருந்துமா?
எனவே பஞ்சாக்ஷர தீபத்தில் வேறு பொருள் கொள்ளப் பட்டிருக்கிறது
பாற்கடல் என்பது மூவகையாருயிர் வர்க்கம்;
தேவர்கள் என்பது நல்வினை
அசுரர்கள் என்பது தீவினை
ஆன்மபோதம் என்னும் மலையினால் பாச ஞானம் என்னும் அமுதம் பெறும் பொருட்டுக் கடையும்போது ஆணவத்தின் காரியமாகிய,அஞ்ஞானம்,மோகம்,மதம்,மாற்சரியம் ஆகிய நஞ்சு திரண்டு உயிர்கள் மறைக்குங்காலத்து இறைவன் அந்த நஞ்சை விழுங்கி,”இவ்வண்ணம் எப்போதும் காப்போம்”என்பதற்கு அறிகுறியாகக் கண்டத்தில் வைத்தான்,எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
அதோ முகம் என்பது இறைவனின் ஆறாவது முகம்.அவனது முகங்கள் பற்றிப் பிறிது ஒரு சமயம் பார்ப்போம்.
Tuesday, February 1, 2011
சூனிய சம்பாஷணை-வழுதலை வித்திட...
என்று ஒரு பகுதி உள்ளது.இதில் மொத்தம் எழுபது பாடல்கள் (மந்திரங்கள்) உள்ளன. எளிதில் பொருள் விளங்காத குறியீட்டு மொழியில் இப்பாடல்கள் அமைந்துள்ளன. இம்மந்திரங்களின் கருத்து இதுதான் என்று வரையறுக்கமுடியாதபடி அவை அவரவர் அனுபவத்துக்குத் தக்க வெவ்வேறு பொருள்களைக் கொண்டுள்ளன. சூனியம் என்பது ஒன்றும் இல்லாதது.இங்கு இதுதான் பொருள் என்று வரையறுக்க முடியாத நிலையைக் குறிக்கிறது.சித்தர்களின் குறியீட்டு மொழி புரிவது கடினம்.இங்கு நான் புரிந்துகொண்டு எழுதுகிறேன் என்று சொன்னால் அது பொய்.அந்த அளவுக்குப் பக்குவமும் ஞானமும் எனக்கில்லை.பல உரைகளில் படித்ததை அடிப்படையாகக் கொண்டே இதை எழுதுகிறேன். இதைப் படிக்கும் உங்களுக்குப் புதிய கருத்துக்கள் தோன்றலாம்.வேறு சில விளக்கங்கள் படித்திருக்கலாம்.அவ்வாறெனில் தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
இங்கு நான் சில பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளேன்.ஒரு சிறிய முயற்சி.
மந்திரம்.2868.
”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.”
இதை அப்படியே பொருள் கொண்டால்” தோட்டத்தில் புழுதியைத் தோண்டினேன்.அக்குழியில் கத்தரிக்காய்(வழுதல்) விதை விதைத்தேன்.அதிலிருந்து பாகற்கொடி படர்ந்தது.அதில் பூசணி பூத்தது.அதைக் கண்ட,அங்கிருந்த தோட்டக் குடிகளெல்லாம் பயந்து,தம் சிறு தெய்வங்களைத் தொழுது கொண்டு ஓடினார்கள்.அதன் பின் அக்கொடியில் வாழைக்கனி முற்றிலுமாகப் பழுத்தது”
நேரடியாகப் பார்த்தால் பொருளற்ற ஒரு பாடல்.ஆனால் அறிஞர்கள் இதன் கருத்தை அனுபவ பூர்வமாக விளக்கும்போது வியப்பாக இருக்கிறது. நடக்கமுடியாத ஒரு நிகழ்ச்சி மூலம் தத்துவங்கள் விளக்கப் படுகின்றன..
இங்கு தோட்டம் என்பது நமது உணர்வாகிய நெஞ்சக் கமலம். புழுதியைத் தோண்டுதலாவது,அவ்வுணர்வுகளைப் பயந்து வரும் தத்துவங்களின் இயல்பை ஆராய்ந்து காணுதல்.வழுதலை வித்திடல் என்பது ஐந்தெழுத்தை உள் ஊன்றி நிறுத்துதல்.பாகல் என்பது நிலையில்லாப் பொருள்களில் பற்றற்று இருத்தல்.பூசனி பூத்தது என்பது திருவருள் விளக்கம்.தோட்டக் குடிகள் என்பது நம் அஞ்ஞானம்.வாழை பழுத்தது என்பது இறை அருட்பேறு.
இதையே வேறு முறையில் காணும்போது இவ்வாறு கொள்ளப் படுகிறது...... வழுதலை வித்திடல்-குண்டலினி யோகப் பயிற்சி;பாகல் முளைத்தது-வைராக்கியம் கிடைத்தது;புழுதியைத் தோண்டினேன்-ஆன்மா பற்றிய தத்துவ விசாரம்;பூசனி பூத்தது-சிவ தத்துவத்தைத் தெரிந்து கொள்ளல்;தோட்டக் குடிகள் ஓடினர்-புலனுணர்வுகள் அகலுதல்;பழுத்தது வாழைக்கனி--சிவானுபவம் கிட்டல்.
குண்டலினி யோகமாவது,மூலாதரத்தில் உறங்கும் சக்தியை மேலேற்றி சஹஸ்ராரத்தை அடையச் செய்தல்......சிற்றின்பத்தில் செலவிடும் சுக்கிலத்தை மூலக்கனல் ஆக்கிப் புருவ மத்தியாகிய ஆக்ஞைக்கு ஏற்ற,அங்கு தோன்றும் அருட்சக்தி அருளால், தத்துவப் பிணிப்பு நீங்கி உணர்வுகள் தூய்மை அடைந்து, சஹஸ்ராரம் அடைகிறது.சீவ கரணங்கள்,சிவ கரணங்களாகி சிவானுபவம் விளைகிறது.
வேறு விதமாகச் சொன்னால்...வழுதல் என்பது துறவையும்,பாகல் என்பது உலக மறுப்பையும்,பூசனி என்பது சிவபெருமானையும், தோட்டக் குடிகள் என்பது,ஐம்புலன்களையும்,மும்மலங்களையும்,வாழை பழுத்தல் என்பது முத்தியையும் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது.
சித்தர்களின் கருத்தை யாரால் அறிந்து கொள்ள முடியும்?
Friday, August 7, 2009
அம்மாவை வணங்காது உயர்வில்லயே !
ஸ்லோகம்-1
எனது தாயார் என்னைக் கர்ப்பத்தில் வைத்து ஒவ்வொரு நிமிஷமும் என்னைத் தாங்கும் போது பட்ட கஷ்டத்துக்கு நான் பிரதியுபகாரம் ஏதாவது செய்திருக்கிறேனா?
அது இருக்கட்டும்.பிரசவ சமயத்தில்,போக்க முடியாததும்,பொறுத்துக் கொள்ள முடியாததுமான சூலைவலி என்கிற கொடுமையான ஒரு வலிக்கு நான் பதில் உபகாரம் செய்திருக்கிறேனா?
அதுவுமிருக்கட்டும்.என்னைப் பெற்றதும்,என்னை ரட்சிக்க ருசியில்லாத பொருட்களைச் சாப்பிட்டு வாழ்ந்த என் தாய்க்கு ஏதாவது செய்திருக்கிறேனா?
தனது உடலை இளைக்கச் செய்தும்,தூக்கமில்லாமலும்,எனது மலத்திலேயே படுத்து ஓராண்டு என்னை காத்த தாயாருக்கு ஏதாவது செய்திருக்கிறேனா?
யாராலும் தாய்க்குப் பிரதியுபகாரம் செய்ய முடியாது.எனவே அம்மா, உனக்கு நமஸ்காரம் செய்கின்றேன்,ஏற்றுக்கொள்.
ஸ்லோகம்-2
நான் கல்வி கற்கச் சென்றிருந்த சமயம்,தன்னை மறந்து தூங்கிய தாங்கள் நான் சன்னியாசியானதுபோல் கனவு கண்டு,அழுதவண்ணமாய் குருகுலம் வந்து கதறி,அங்கிருந்த எல்லோரையும் கதறி அழச்செய்த என் அம்மா,உனக்கு நமஸ்காரம்.
ஸ்லோகம்-3
அம்மா! நீ முக்தியடையும் சமயத்தில் கொஞ்சம் நீராவது உன் வாயில் விட்டேனா?பிறகும் ச்வதா மந்திரத்தினால் ச்ராத்தம்,தர்ப்பணமாவது செய்தேனா?உனது முக்தி சமயத்தில் தாரக மந்திரமாவது உன் காதில் ஓதினேனா?அச்சமயம் எனக்குக் கிடைக்காமலும்,எதுவும் செய்ய அதிகாரமில்லாததாலும்,சன்னியாசியானதால் எந்த வைதீகமும் கடைப் பிடிக்க முடியாது போனதால்,மனம் தவிக்கின்ற உன் மகனான என்னிடம் தயவு செய்ய வேண்டுமம்மா!உனது சரண கமலத்தைப் பிடித்து வேண்டுகிறேன்.
ஸ்லோகம்-4
அம்மா! என்னைக் காணும்போதெல்லாம் என் முத்தே கண்ணே,ராஜா, சிரஞ்சீவியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி,என்னிடம் கருணை, அன்பு, தயைகலந்த அமுதமான சொற்களால் என்னைச் சீராட்டி,,பாலூட்டி,தாலாட்டி வளர்த்த என் அன்னைக்கா வேகாத அரிசியை வாயிலே சமர்ப்பிப்பேன்?இதைப் பொறுக்க முடியவில்லையே! அம்மா நீயே சரண்.
ஸ்லோகம்-5
அம்மா,என்னைப் பெற்றபோது பொறுக்க முடியாத வேதனையுடன் அம்மா!அப்பா!சிவபெருமானே!கிருஷ்ணா!கோவிந்தா,ஹரே முகுந்தா என்றழைத்த வாக்கோடு கூடிய என் கருணைத் தெய்வமே!என் இரு கைகளையும் தூக்கி உனக்கு அஞ்சலி செய்து,உன்னைச் சரணடைகிறேன்.
Thursday, March 5, 2009
அட்டாங்க யோகம்
ஸ்வாமி ஓம்கார் அவர்கள் தமது பதிவில் ‘அட்டாங்க யோகம்’ பற்றி மிக எளிய முறையில் அனைவருக்கும் புரியும்படி விளக்கியுள்ளார்கள்.அதைப் படித்ததும் திருமூலர் அட்டாங்க யோகம் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்தேன்.திரு மந்திரத்தில் சொல்லப்பட்ட சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
“இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.”
இயமம்,நியமம்,கணக்கற்ற ஆதனம்,நலம் தரும் பிராணாயாமம், பிரத்தியாகாரம்,வெற்றி மிகுந்த தாரணை,தியானம்,சமாதி ஆகியவை பிறப்பறுக்கும் வாயிலாகிய ஞானத்தைப் பயக்கும்.
இயமம்
புலன்களினால் விளையும் இன்பம் நிலையற்றெதென உணர்ந்து,தீயவற்றில் மனம் செல்லாது கட்டுப் படுத்துதல்.
“கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லானியமத் திடையில்நின் றானே.”
ஓருயிரையும் கொல்லாதவன்,பொய் சொல்லாதவன், திருடாதவன், பிறரால் மதிக்கப்படும் குணம் உடையவன், நல்லவன், அடக்கமுடையவன்,நடுநிலை தவறாதவன், பகிர்ந்துண்பவன்,குற்றமற்றவன்,கள்ளுண்ணாதவன்,காமம் இல்லாதவன், ஆகிய இந்த இலக்கணக்கங்கள் உடையவனே இயமத்தான்.
இது போலவே ஹடயோகப் பிரதீபிகையும் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
“அஹிம்சா,சத்யமஸ்தேயம்,ப்ரம்மசர்யம்,க்ஷமா,தூதி:
தயார்ஜவம்,மிதாஹார:,சௌசம்,சைவ யமா தச.”
கொல்லாமை, வாய்மை,கள்ளாமை,காமமின்மை, பொறையுடமை உறுதியுடமை,தயை,நேர்மை,குறைவாக உண்ணல்,தூய்மை இப்பத்தும் இயமம்.
நியமம்
விதிமுறைகளை வழுவாதொழுகுதல்.
“தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக்- கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீ ரைந்து
நிவம்பல செய்யின் நியமத்தனாமே.”
நியமத்தினை மேற்கொள்பவன்,தவம்,செபம்,மகிழ்ச்சி, தெய்வநம்பிக்கை,கொடை,முப்பொருள் உண்மை கேட்டல்,வேள்வி,சிவபூசை,ஒளி பொருந்திய சிவஞானமெனக் கூறப்பட்ட பத்தையும் உயர்வாய்க் கடைப் பிடிக்க வேண்டும்.
(முப்பொருள்-பதி,பசு,பாசம்)
பிற பின்னர்
Wednesday, February 11, 2009
நான் கடவுள்(அஹம் பிரஹ்மாஸ்மி)
வேதாந்த வாக்கியங்கள் நான்கு, மகா வாக்கியங்கள் என்று அழைக்கப் படுகின்றன.வேதாந்தம் என்பது வேதத்தின் அந்தம்,முடிவு.இவையே உபநிடதங்கள்.
ஐதரேய உபநிடதத்தில் காணப்படும் வாக்கியம்-”பிரஞ்ஞானம் பிரம்ம” என்பது.
பிருகதாரண்ய உபநிடதத்தில்காணப்படும் வாக்கியம்-”அஹம் பிரஹ்மாஸ்மி(பிரம்மைவாஹம் அஸ்மி)” என்பது.
சாந்தோக்கிய உபநிடதத்தில் சொல்லப்படும் வாக்கியம்-”தத்துவம் அஸி” என்பது.
மாண்டூக்ய உபநிடத்தில் வரும் வாக்கியம்-”அயமாத்மா பிரஹ்ம” என்பது.
எளிய முறையில் பொருள் சொன்னால்- 1)மெய்யுணர்வே பிரம்மம்(கடவுள்) 2)நான் கடவுள் 3)நீ அதுவாக இருக்கிறாய். 4)இந்த ஆத்மா பிரம்மன்.
இவை அனைத்தும் ஒரே பொருளையே உணர்த்துவன. நமக்குள்ளேயே கடவுள் இருப்பதை குறிக்கின்றன.
குரு சீடனுக்கு உணர்த்துகிறர்-த்வம்(நீ),தத்(அது),அஸி (இருக்கிறாய்).
இதை சீடன் உணர்ந்த நிலைதான் –அஹம் பிரஹ்மாஸ்மி.
தற்சமயம் மிகவும் பிரபலமாக இருக்கும் வாக்கியம்.
தன்னுள் இருக்கும் சிவனை உணரும்போது இந்த சீவன் சிவனாகிறான்.அதுவே அத்வைதம். இது பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார்? இதோ ஒரு மீள் பதிவு- இரண்டல்ல(அத்வைதம்)
அவன் மிகவும் களைத்திருந்தான்.பல நாட்களாய் அலைந்து உடலும் தேடலுக்கு விடை கிடைக்காமல் மனமும் சோர்ந்திருந்தான்.கையில் பணமில்லாததால் இரண்டு நாட்களாக ஒன்றும் உண்ணாமல் துவண்டிருந்தான்.ஊர் ஊராய் ஒவ்வொரு கோவிலாய் இறைவனைத் தேடித் தேடி அலுத்திருந்தான்.அந்த ஊர் கோவிலில் தெய்வம் சக்தி நிறைந்தது, இந்த ஊர்க் கோவிலில் இறைவன் விசேடமானவர் என்றெல்லாம் ஒவ்வொருவர் சொல்வதையும் கேட்டு ஒவ்வொரு ஊராய் அலைந்து அவன் தேடும் கடவுளைக்காணாமல் ஏமாற்றம் அடைந்திருந்தான்.இப்போது அந்தக் கிராமத்தின் ஆள் அரவமற்ற ஆற்றங்கரைக் கோவில் வாசலில் பசியின் காரணமாக கண்கள் இருண்டு மயக்கமடைந்து கீழே விழுந்தான்.
தன் முகத்தில் விழுந்த நீரின் குளிர்ச்சியில் அவன் கண் விழித்தான்.எதிரே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.அரையில் ஒரு துண்டு,தலையில் முண்டாசு,கையில் ஒரு கோல்.சிறுவனைப்பார்த்த அவன் முனகினான்"பசி".சிறுவன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த சில பழங்களை அவனிடம் நீட்டினான்.பழங்களைத்தின்று சிறிது பசியாறிய அவன் சொன்னான்"கடவுள் மாதிரி வந்து காப்பாற்றி விட்டாயப்பா".சிறுவன் கேட்டான் "என்னங்க ஆச்சு?"அவன் சொன்னான்"கடவுளைத்தேடி ஊர் ஊராய் சுற்றினேன்.காண இயலவில்லை."
சிறுவன் சிரித்தான்"இப்பதான் என்னைப்பார்த்து கடவுள் மாதிரின்னு சொன்னீங்க.அப்ப எங்கிட்ட கடவுள் இருந்தா ,எல்லார் கிட்டயும் இருக்கணும்,உங்க கிட்டயும் இருக்கணும்.ஆனால் கடவுளைத்தேடி ஊரெல்லாம் அலஞ்சேனு சொல்றீங்களே.சிரிப்புதான் வருது சாமி"
அவனுக்குப் பளார் என்று அறைந்தது போல் இருந்தது.கண்களை மூடித்திறந்தான்.சிறுவனைக் காணவில்லை.உண்மை உணர்ந்தான்.தான் வேறு கடவுள் வேறில்லை என்பதை உணர்ந்தான்.பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி புலன்களைக்குவித்து உள்ளே இருக்கும் கடவுளோடு ஒன்றினான்."அஹம் ப்ரம்ஹாஸ்மி"
"சீவன் என்ன சிவனார் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரைஅறிகிலர்
சிவனார் சிவனாரைஅறிந்த பின்
சீவனார் சிவனாயிட்டிருப்பரே"-(திருமூலர்)
Wednesday, December 17, 2008
மருந்தீசன் பதிகம்
மருந்தீசன் பதிகம்
வேத மேஅ றிந்தி லாமெய் ஞான ரூப மானவன்
ஓத மாக்க டல்பு ரத்து ஔட தீசன் பால்வண
நாதன் நாதன் வான்மி யூரன் நல்ல டிக்கு வந்தனம் 1
எல்லை யற்ற சோதி யாய் அ கண்ட மெங்கும் நிற்பவன்
பல்லு யிர்க்கு ளேயும் அன்புப் பால மாய்ப் பிணைத்தவன்
சொல்ல வொண்ணா வான்மி யூரன் தூம லர்த்தாள் வந்தனம் 2
மாய்ந்த மன்ம தற்கு மீண்டும் வாழ்வு தந்த வள்ளலான்
ஆய்ந்த றிந்த ஞானி கட்கு அகத்து ளே நி றைந்தவன்
தேய்ந்த திங்கள் வான்மி யூரன் சேவ டிக்கு வந்தனம் 3
ஒன்றி ஆதி அற்ற வோர்அ னந்த மாய்ப்ப ரந்தவன்
அன்றி லாயெம் குற்றம் நீக்கி அன்பு மட்டும் ஏற்பவன்
நன்றி நன்றி வான்மி யூரன் நல்ல டிக்கு வந்தனம் 4
அருள் உ மைக்கி டம்ப கிர்ந்தே அம்மை யப்பன் ஆனவன்
இருள்ம லிந்த குகை நிகர்த்த எங்கள் நெஞ்சில் தீபமாய்
மருள் அ கற்றும் வான்மி யூரன் மலர டிக்கு வந்தனம் 5
அருள் உ மைக்கி டம்ப கிர்ந்தே அம்மை யப்பன் ஆனவன் :
(By sharing his physique with Parvathi, demonstrates that He Is Manifest as Matter and Energy in the Cosmos)
நீல கண்ட னான வன் வெண் ணீரணிந்த நின்மலன்
மால் அ யற்கும் காண்கி லாஅ நந்த மாய் அ மைந்தவன்
பால் அ ணிந்த வான்மி யூரன் பதம லர்க்கு வந்தனம் 6
வந்த தாலே உழலும் நந்தம் வாழ்வைச் சீர்ப்ப டுத்துவோன்
இந்தி ரன்,பி ருங்கி, காலன், ஏனை தேவர், நான்மறை
வந்த னஞ்செய் வான்மி யூரன் மலர்ப்ப தங்கள் வந்தனம் 7
கந்த வேளை நெற்றிக் கண்ணின் கனலி ருந்து யிர்த்தவன்
சுந்த ரர்க்குத் தோழன் எங்கும் சோதி யாய் நி றைந்தவன்
எந்தன் ஈசன் வான்மி யூரன் இணைய டிக்கு வந்தனம் 8
இன்புடன் நடாத்தி பத்தர் ஈர டிக்குள் ஏற்றவன்
என்பும் ஓடும் மாலை யாக்கி யாக்கை அற்பம் காட்டுவோன்
தென்பு லத்து வான்மி யூரன் சேவ டிக்கு வந்தனம் 9
இன்புடன் நடாத்தி பத்தர் ஈர டிக்குள் ஏற்றவன் ::
(அறுபத்து மூன்று திருவிளையாடல்கள் அன்பருக்காக நடத்தினவன் )
பூத மைந்து மாகி யாளும் பூர ணத்தின் பூரணன்
நாத ரூபன் மூச்சி லேஓங் கார நாத மானவன்
வேத நாதன் பால்வ ணந்தன் மெய்ய டிக்கு வந்தனம் 10
சு. பட்டாபிராமன் மார்ச் ஏழு, 2003
--
Monday, September 1, 2008
செயல் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி-உபநிடத வழி.
ச்ரத்தா ஏவ சிர:
------------------
முதன்மையானது,அக்கறை.செய்யும் செயலை மதித்தல்;நேசித்தல்(சிர: என்றால் தலை.ச்ரத்தா என்பது ஈடுபாடு,அக்கறை). சிறப்பாகச் செயல் புரிய வேண்டுமெனில் செய்கின்ற செயலை வெறுப்புடன் செய்யக்கூடாது; தயக்கத்துடன் செய்யக் கூடாது;அரை மனதுடன் செய்யக்கூடாது.எல்லாச் செயல்களும் நாமே தேர்ந்தெடுத்துச் செய்பவை அல்ல.சில செயல்களை நாம் தேர்ந்தெடுத்துச் செய்கிறோம்.சில செயல்கள் நாம் ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கேற்ப செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.ஒரு குடும்பத்தலைவனாக,ஒரு அலுவலக ஊழியனாக,ஒரு பொறுப்புள்ள குடிமகனாகப் பல செயல்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவ்வாறு எந்தச்செயல் செய்தாலும் அதன் மீது விருப்பம் இருக்க வேண்டும்;குறைந்த பட்சம் வெறுப்பாவது இல்லாமல் இருக்க வேண்டும்."என் தலையெழுத்து,என் போதாதகாலம்" என்றெல்லாம் குறை கூறிக்கொண்டே எந்தச் செயலையும் செய்யக்கூடாது. செயலை விரும்பக் கற்றுக் கொள்ள வேண்டும்.நாம் செய்யும் செயல்களை விரும்பக் கற்றுக்கொண்டால், அச்செயலைச் செய்வதே நமக்கு மகிழ்ச்சியைத்தரும். ஒரு முறை அலுவலகத்தில் என்னைப் பார்க்க வந்த ஒரு நண்பர் என் செயல்பாடுகளைப் பார்த்து விட்டுக் கூறினார்"நான் நினைக்கிறேன்,நீங்கள் உங்கள் வேலையை மிகவும் நேசிக்கிறீர்கள் என்று".நான் சொன்னேன்"ஆம்,நண்பரே, அவ்வாறு நேசிப்பதால்தான் என்னால் சிறப்பாகச் செயலாற்ற முடிகிறது".எனவே முதன்மையானது செய்யும் செயலிடம் விருப்பம்,மரியாதை,ஈடுபாடு,அக்கறை.
ருதம் தக்ஷிண:பக்ஷ:
---------------------------
அடுத்தது செய்யும் செயல் பற்றிய அறிவு.செய்ய வேண்டிய செயலைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.எதைச் செய்ய வேண்டும்,எப்படிச் செய்ய வேண்டும்,ஏன் செய்ய வேண்டும்,எங்கு செய்ய வேண்டும்,எப்போது செய்ய வேண்டும் என்பவற்றை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும், 'ருதம்' என்பதற்குச் செய்கின்ற செயலைப்பற்றிய சரியான அறிவு எனப் பொருள் கொள்ளவேண்டும்."யதா சாஸ்திரம்,ததா கர்தவ்யம் ஞானம்" என்கிறார் ஆதி சங்கரர்.விதிகள் என்ன சொல்கின்றனவோ,அதை அப்படியே செய்ய வேண்டும். இரவில் ஒருவர் சுப்ரபாதம் படித்தால் அவரைப் பற்றி என்ன சொல்வது? தேர்வுக்குச் செல்லும் மாணவன் நன்கு படித்துவிட்டுச் செல்லவேண்டும்.எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர்,இருபது ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர்,இன்றும் வகுப்புக்குச் செல்லும் முன் தயார் செய்து கொண்டுதான் செல்கிறார்.(ஈடுபாடு+அறிவு).ஒரு செயலில் ஒரு தவறு செய்தால் அதிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டும் அத்தவறைச் செய்யாமல் இருக்க வேண்டும்.அதுவே செயல் முன்னேற்றத்துக்கான வழி.
செயல்கள் மட்டுமன்று.வாழ்வில் நாம் ஏற்கும் ஒவ்வொரு பாத்தி்ரமுமே பல விதமான செயல்பாடுகள் உடையதாகிறது.ஒருவரே,மகனாய்,கணவனாய், சகோதரனாய்,தந்தையாய் பல நிலைப்பாடுகளில் செயல் புரிய வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் திறம்படச் செய்ய,அது பற்றி முழுமையான அறிவு தேவை.
ஸத்யம் உத்தர:பக்ஷ:
--------------------------
செய்யும் செயல் பற்றி முழுமையாக அறிந்த பின் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
" யதா சாஸ்திரம் ததா கர்தவ்யம் ஞானம்
யதா ஞானம் ததா அனுஷ்டானம்."
எனக்கு ஒரு செயலை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியும்,ஆனால் செய்ய மாட்டேன் என்ற நிலை இருக்கக்கூடாது.அறிவுக்கும்,செயலுக்கும் இடையே பிளவு இருக்கக் கூடாது என்பதையே ஸத்யம் என்ற சொல் உணர்த்துகிறது.ஒரு செயல் பற்றிய நம் முழுமையான அறிவைப் பயன்படுத்தி அச் செயலைச் செய்யும்போது செம்மையாகச் செய்து விட்டோம் என்ற திருப்தி கிடைக்கிறது.எனவே மூன்றாவது,அறிந்தவற்றைச் செயல் படுத்துவது.
யோக ஆத்மா
-----------------
யோக என்பதற்கு இங்கே பொருள் ஒருமுகப்படுத்துதல்(concentration,focus).நாம் தியானத்தில் இருக்கும்போது நம் மனம் ஒருமுகப்படுகிறது. அதைப்போல, செயலைத் தியானமாகப் பாவித்துமனதை ஒரு முகப்படுத்திச் செய்யும்போது செயல் செம்மையாக முடிக்கப்படுகிறது.இயந்திரம் போல் செயலாற்றினால் செய்த செயலையே திரு்ம்பச் செய்ய நேரிடும்.அலுவலகம் சென்றால் நம் சிந்தனை அங்கு செய்கின்ற செயல்களின் மீதுதான் இருக்க வேண்டும். அவ்வாறின்றி, விட்டைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் செயல் எவ்வாறு செம்மையாக முடியும்?எனவே,நமது கடமைகளைச் செய்யும்போது,"கருமமே கண்ணாயினார்"என்பது போல,மனதை ஒரு முகப்படுத்திச் செய்ய வேண்டும்.
மஹ:புச்சம் ப்ரதிஷ்டா.
----------------------------
" நான் செய்யும் ஒவ்வொரு செயலுமெவ்வளவு அதிகமான மனிதர்களுக்குப் பயன் படுகிறதோ அவ்வளவு பயன் படட்டும்"என்று எண்ண வேண்டும். கென்னடி சொன்னார்"இந்த நாடு எனக்கு என்ன செய்தது என்று கேட்காதே,நான் இந்த நாட்டுக்கு என்ன செய்தேன் என்று கேள்"எனவே நமது பார்வையை விரிவடையச் செய்ய வேண்டும்.நமக்குக் கிடைக்கும் பயனை விட,அச் செயலால் மற்றவர்கள் எவ்வறு பயனடைகிறார்கள் என்பதை நினைக்க வேண்டும்.
ஆக, ஐந்து விதிகளாவன:-செயலை விரும்பு,அது பற்றி முழுமையாய் அறிந்து கொள்,செயல்படுத்து,ஒருமுகமாய் செயலாற்று,பார்வையை விரிவாக்கு.
இவையே தைத்திரீய உபநிடதம் சொல்லும் செய்தி.
(ஆதாரம்:பரம பூஜ்யஸ்ரீ ஸ்வாமி பரமார்த்தானந்தா அவர்களின் உரை)
Monday, July 28, 2008
ஒன்றே குலம்,ஒருவனே தேவன்.
"இறைவன் படைப்பில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை ஆறு விதமாக உயிர்கள் படைக்கப் பட்டிருக்கின்றன.கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்த நாம் ஆறறிவு உள்ளவர்களாகவா நடந்து கொள்கிறோம்?இம் மதங்களை, சாதிகளை,அதன் பிரிவுகளை,உட்பிரிவுகளை எல்லாம் இறைவனா படைத்தான்?மனிதனே இவற்றையெல்லாம் படைத்து விட்டுத் தான் படைத்த மதத்தின் பெயரால்,இறைவனை முன்னிறுத்திச் சண்டை, சச்சரவு , கலவரங்களில் ஈடுபடுவது அவன் வணங்கும் அந்த இறைவனையே அவமானப் படுத்தும் செயலல்லவா?இரண்டு மதங்களுக்குள்சண்டை,ஒரே மதத்தில் இரு சாதிகளுக்குள் சண்டை,ஒரே சாதிக்குள் உட்பிரிவுகளுக்குள் சண்டை இவையெல்லாம் அறிவற்ற செயலல்லவா?"
"அனைத்து உயிர்களுக்கும் இறைவன் ஒருவனே.மதங்களால் பிரிந்து வழிபாட்டு முறைகளால் மாறுபட்டாலும்,எல்லோரும் மனிதர்கள் என்னும் ஒரே குலமே.நமக்கு நன்மை நடக்க விரும்பும்போது அதன் காரணமாகப் பிறர்க்குத் தீமை விளைய எண்ணுதல் கூடாது.அவ்வாறு எண்ணுவதால், பகையும் போரும் மூண்டு உயிர்ச்சேதம் ஏற்படும் அல்லவா?எனவே நன்மையே நினைக்க வேண்டும்.தீய செயல் செய்வதற்குத்தான் வெட்கப் பட வேண்டும்.நல்லன எண்ணி நல்லன செய்பவர்கள் வெட்கப் பட ஏதும் இல்லை.எண்ணம்,சொல்,செயல் எல்லாம் நல்லவையாகவே இருக்கட்டும்.எந்த முறையில் வழி பட்டாலும்,பரம்பொருள் ஒருவனே என்பதை உணர்ந்து,அவனையே சிந்தையில் இருத்தி அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால் வாழ்க்கை இனியதாகவே இருக்கும்.உணருங்கள்"
ஞானியார் தியானத்தில் ஆழ்ந்தார்.
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே"----(திருமூலர்)
Tuesday, February 12, 2008
இறைவன் எங்கிருக்கிறான்?
அவன் சொன்னான் "சாமி,காசி,ராமேச்வரம் இன்னும் பல கோவில்களுக்கெல்லாம் போய் வந்தேன்.எல்லா இடங்களிலும் நல்ல தரிசனம்.எல்லாப் பூசைகளும் செய்து ஆண்டவனை வணங்கினோம்."
ஞானி புன்னகைத்தார்."இறைவனைப் பல ரூபங்களில் பல ஊர்களில் தரிசித்திருக்கிறாய்.திருப்தி அடைந்திருக்கிறாய். ஆனால் உன்னுள்ளேயே இருக்கிறானே அவன்!அதை உணர்ந்திருக்கிறாயா?உன் உடலையும் உயிரையும் சேர்த்து வைத்திருப்பவன்,உன் உடலையே தான் வாழும் நாடாகக் கொண்டவன்,உன் உடலுக்குள்ளேயே மணம் கமழ எழுந்த்ருளியிருக்கும் ஞான குரு அவன்.அதை உணராமல் கோவில் கோவிலாகச் சென்று இறைவனைத் தேடுகிறாய்.அவ்வாறு செல்வது தவறென்று நான் சொல்லவில்லை.ஆனால் உன்னுள் இருக்கும் இறைவனை உணர்ந்து விட்டால் தேடல் நின்று போகும்.உன் உள்ளத்தினுள்ளே அவனைப் பார்.வணங்கு.வேறென்ன வேண்டும்.?"
அவர்களுக்குப் புரிவது போலிருந்தது.
"காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேயெங்குந் தேடித் திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே."-----(திருமூலர்)
Thursday, January 10, 2008
பிறவிப்பயன்!
பொல்லாதவன்,நெறி நில்லாதவன்,ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன்,கல்வி கல்லாதவன் மெய்யடியவர் பால்
செல்லாதவன்,உண்மை சொல்லாதவன்,நின் திருவடிக்கன்பு
இல்லாதவன்,மண்ணிலே பிறந்தேன்! கச்சியேகம்பனே!(பட்டினத்தார்).
இங்கு பட்டினத்தார் தம்மைப் பற்றி சொல்லவில்லை.நமக்காகப் பேசுகிறார். கச்சி ஏகம்பன்தான் நமக்கெல்லாம் நல்வழி காட்ட வேண்டும்
Wednesday, December 12, 2007
தானச்சிறப்பு
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே"--(திருமூலர்)
எல்லோருக்கும் கொடுங்கள்.அவர்,இவர் என்று வேற்றுமை பாராட்டாதீர்கள்.வரும் விருந்தை எதிர்பார்த்து அவருடன் கூடி உண்ணுங்கள்.பழம் பொருளைப் பாதுகாத்து வைக்காதீர்கள்.பசி உடையவர்களாக மிக விரைந்து உண்ணாதீர்கள்.காக்கைகள் உண்ணும்போது மற்றக் காகங்களை அழைத்து உண்பதைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்.
இங்கு குறிப்பிடத் தக்கது "ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்" என்பதுதான்.இவர் உயர்ந்தவர்,அவர் தாழ்ந்தவர் என்றோ இவர் நம்மவர் அவர் அயலவர் என்றோ வேறு படுத்தாமல் வேண்டி வந்த அனைவருக்கும் ஈதல் வேண்டும் என்பது கருத்து.
இங்கு "தக்கார்க்கீதலே தானம்"மற்றும் "பாத்திரம் அறிந்து பிச்சையிடு" என்னும் வழக்கு மொழிகள் ஒப்பு நோக்கத் தக்கன.இவை தவறா?இல்லையெனில்,ஏன் இவ்வறு சொல்லப்பட்டன?
தானம் கேட்டு வருபவர்களில் சிலர் எக்காரணத்துக்காக உதவி பெறுகிறார்களோ அக்காரணத்துக்காக அதைப் பயன் படுத்தாமல் தவறான செயல்களுக்காகப் பயன் படுத்தி விடுகிறார்கள்.தானம் பெற வரும் போது அவர்கள் நோக்கமே ஏமாற்றிப் பணம் பறித்து அதைத் தவறாகப் பயன் படுதுவதுதான்.எனவே இந்த மாதிரி மனிதர்களிடம் ஏமாறாமல் இருப்பதற்குதான் மேலே குறிப்பிடப் பட்ட வழக்கு மொழிகள் சொல்லப்பட்டன.எனவே இங்கு பசியென்று வருபவர்க்கு உணவளிப்பது வேறு;பொருள் உதவி செய்யும்போது நோக்கம் அறிந்து உதவுவது என்பது வேறு என்றுணர்தல் வேண்டும்.
Monday, November 26, 2007
புலன் மயக்கம்
"பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரு முண்டாய் வெறியு மடங்கினால்
பார்ப்பான் பசுவைந்தும் பாலாச் சொரியுமே"--(திருமூலர்)
( பார்ப்பான்-ஆன்மா; அகம்-உடல்; ஐந்து பசுக்கள்-ஐம்புலன்கள் )
ஆன்மா என்ற பார்ப்பானின் உடலில் ஐம் பொறிகளான கறைவைப் பசுக்கள் ஐந்து உள்ளன.அவை மேய்ப்பவர் இன்றி விருப்பம் போல் திரிவன.(புலன்கள் அடக்கப் படாமல் இன்பம் தேடி அலைகின்றன.)புலன் நுகர் பொருட்கள் மீதுள்ள ஆசையை அறுத்து இறைவன் பால் மனத்தைச் செலுத்தினால் பொறிகள் என்ற பசுக்கள் பேரின்பம் என்ற பாலைத் தரும்.
"சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு."-திருக்குறள்
Saturday, September 22, 2007
வாழ்வியல்
முக்கியமான கேள்வி.ஞானி யோசித்தார்.அனவருக்கும் புரியும் படியாகச் சொல்ல வேண்டும்."சரியான முறையில் வாழ்வதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன.சிலவற்றைக் கொள்ள வேண்டும்;சிலவற்றைத் தள்ள வேண்டும்.கவனமாகக் கேளுங்கள்."
"கொல்லாமை வேண்டும்.கொல்லாமை என்பது ஒரு உயிரைப் போக்காமல் இருப்பது மட்டும் அல்ல.எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாதிருத்தல்.நம் மனத்தால். சொல்லால், செயலால் பிற உயிர்களை வருத்தாதிருத்தல். நாமாகவே சில சமயம் தீங்கு செய்கிறோம்.பிறரைக் கொண்டு சில நேரம் தீங்கு செய்விக்கிறோம்.பிறர் தீங்கு செய்வதோடு ஒத்து சில நேரம் மகிழ்கிறோம்.இவை எல்லாமே விலக்கப்பட வேண்டும்."
"பொய் சொல்லாதிருக்க வேண்டும்.பொய்யா விளக்கே விளக்கு என்று
வள்ளுவர் சொல்கிறார்.நாம் சொல்கின்ற பொய் நமக்கு மகிழ்ச்சியைத்தரலாம்.ஆனால் அது பிறர்க்குத் தீங்கு செய்யும்."
"திருடக்கூடாது.தன்னுடையது அல்லாத,பிறருக்குச் சொந்தமான பொருள்களைக் கவர நினைப்பதே தவறு. இதற்கு அடிப்படை தகாத ஆசை.அதை நீக்குங்கள்."
"கள்ளுண்ணுதல்,தகாத காமம் இவை விலக்கப் பட வேண்டியவை.ஒருவன் மது அருந்தினால் மதி மயக்கம் ஏற்பட்டு எல்லாத் தவறுகளும் செய்கிறான்.தன் மனையாளைத் தவிர பிற பெண்களை மனத்தாலும் நினைக்ககூடாது.இதையே 'பேராண்மை' என்கிறார் வள்ளுவர்.
"தள்ள வேண்டியவை சொன்னேன்.கொள்ள வேண்டியவை என்ன?-அடக்கத்தோடு இருக்கவேண்டும்.'தான்' என்ற அகந்தையில்லாது இருக்கவேண்டும்.அடக்கம் அமரருள் உய்க்கும்.இதை உணருங்கள்."
"நியாயத்தின் பால் நிற்க வேண்டும்.பகைவர், நண்பர்,உறவினர் எவராயிருப்பினும் நடு நிலைமை தவறாது இருக்க வேண்டும்.சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல்,தராசு போல் இருக்க வேண்டும்.அதுவே சான்றோர்க்கு அழகு ."
"இருப்பதைப் பகிர்ந்துண்ண வேண்டும்.காக்கைகளைப் பாருங்கள்.ஒரு காகம் மற்ற காகங்களையும் அழைப்பதைப் பாருங்கள்.முன்பே ஒரு முறை சொல்லியிருக்கிறேன்"யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி"என்பதை.
"தூய்மையாக இருக்க வேண்டும்.இங்கே தூய்மை என்பது மனத்தூய்மை.உடல் தூய்மை,குளிப்பதால் பெறப்படும்.மனம் தூய்மையாக இருக்க நல்ல எண்ணங்கள் வேண்டும்.பொறாமை ,ஆசை, கோபம்,காமம் ஆகியவை இன்றித் தூய்மையாக இருக்கும் மனத்தில் தான் இறைவன் இருப்பான்."
"இவ்வாறு இருப்பவன் நல்லவன்.அவன் குண நலன்கள் எல்லோராலும் எண்ணிப்போற்றப்படும்."
ஞானி கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார்.
"கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கமுடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத் திடையில் நின்றானே."--------(திருமூலர்)
Monday, September 3, 2007
பக்தி
ஞானி புன்முறுவலுடன் சொன்னார்"எதைச் செய்தாலும் உள் மனதில் மிகுந்த அன்போடு செய்ய வேண்டும்.இறைவனிடத்துக் காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி அன்போடு அகம் குழைந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.உடலை எவ்வளவு வருத்தினாலும்,உண்மையான அன்பு இல்லையெனில் பலன் இல்லை.நான் உங்களுக்கு கண்ணப்ப நாயனார்,சபரி ஆகியோர் பற்றிக் கூறியிருக்கிறேன் அல்லவா.அது போன்ற அன்பு வேண்டும்".
ஞானி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்
"என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி
என்போல் மணியினை எய்தவொண் ணாதே"--(திருமூலர்)
Friday, August 24, 2007
அறம்
ஞானி கண் விழித்தார்.அனைவரையும் ஒரு முறை கனிவோடு நோக்கினார்.அவர் பார்வை ஒருவன் மீது நின்றது.அவன் அவரை வணங்கிக் கேட்டான்"சாமி,கடவுளை எப்படி வழிபடுவதுன்னே எனக்குத் தெரியலை.பெரிசா பூசை செய்யவோ படையல் வைக்கவோ என்னால முடியாது.நான் என்ன செய்யணும் சாமி?"
"இறைவனை வழிபடுவதற்கு எந்த நியதியும் இல்லையப்பா.இதில் ஆடம்பரம் தேவையில்லை.நான் என்ற சிந்தையற்று ஆழ்ந்த பக்தியுடன்,உள்ளம் நிறை அன்புடன் ஒரு இலையைப்போட்டு வணங்கு.வில்வமோ,துளசியோ ஏதாவது ஒன்று.அவன் திருப்தி அடைவான்.உன் பூசையை ஏற்றுக்கொள்வான்"-ஞானி பதிலளித்தார்.
அவர் அடுத்தவனைப் பார்த்தார்.அவன் கேட்டான்"சாமி, நான் அதிக வசதியில்லாதவன்.தருமம் செய்யணுன்னு ஆசை இருக்கு.ஆனால் கொஞ்சமா ஏதாவது செஞ்சா எல்லாம் கேலி செய்வாங்களோன்னு பயமா இருக்கு. நான் என்ன செய்ய சாமி?"
அவர் பதில் அளித்தார்"உனக்கு நல்ல மனது இருக்கிறது.ஈதல் என்பது பெரிதாக இருக்க வேண்டியதில்லை.நேற்று நீ இங்கு வரும்போது எதிர்ப்பட்ட ஒரு பசுவுக்கு ஒரு வாய் புல் அளித்தாயே அதுவும் ஒரு தருமம்தான்.நீ உண்ணும் உணவில் சிறிது பசித்தவருக்குவழங்கினால் அது அறம்.உண்ணும் முன் காக்கைக்குச் சிறிது அன்னமிட்டால் அதுவும் தருமம்தான்."
அவர் பார்வை பட்ட அடுத்தவன் கேட்டான்"இதெல்லாம் கூட முடியலென்ன என்ன செய்ய"கொஞ்சம் இடக்குப் பிடித்த அவனது கேள்வியைச் செவியுற்று அவர் புன்னகைத்தார்."ஊரில எல்லோரும் உன்னை மிகவும் கோபக்காரன் என்று சொல்கிறார்கள்.பல நேரங்களில் நானே கவனித்திருக்கிறேன்,இனிமையாகப் பேசாமல் சுடு சொற்களையே பேசுவதை.அதை விடுத்து அனைவரிடமும் இன்சொற்கள் பேசுவாயாகில் அதுவே சிறந்த அறம்தான்-முகத்தானமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம் இன் சொலினதே அறம்."
இதைச் சொல்லிவிட்டு ஞானி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்.
"யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க் கின்னுரை தானே"-----(திருமூலர்)
Tuesday, August 21, 2007
யாக்கை நிலையாமை
நாளையோ,என்று.பெரியவரின் மகன்கள்,மகள்கள்,மற்றும் நெருங்கிய உறவினர்கள் வந்து விட்டனர்.வீடு முழுவதும் சோகம்
நிறைந்திருந்தது.தவிர்க்க முடியாத ஒரு முடிவை எதிர் நோக்கி
அனைவரும் காத்திருந்தனர்.
மறு நாள் விடிந்தது.பெரியவர் வாழ்வும் முடிந்தது.வீட்டிலிருந்து
உரத்த அழு குரல்கள் எழுந்தன.ஓலமும் ஒப்பாரியும் வெளிப்பட்டது.
இறுதி யாத்திரைக்கான எற்பாடுகள் செய்யப்பட்டன.சில காரணங்களால்
எற்பாடுகள் தாமதமாகின.அந்த வீதியில் வசிக்கும் ஒரு முக்கிய நபர்
பொறுமை இழந்தவராக விசாரித்துக் கொண்டிருந்தார்."நேரமாகுதில்லே.
பொணத்த எப்ப எடுக்கப்போறாங்க?"இதே நபர் முன் தினம் விசாரித்துக் கொண்டிருந்தார்"முருகேசன்(பெரியவரின் பெயர்) எப்படிப்பா இருக்கான்.ரொம்ப நல்லவன்."
சிறிது நேரம் சென்று இறுதி யாத்திரை தொடங்கியது.ஆண்கள் சுடு
காட்டுக்குச் சென்றனர்.உடல் தகனம் செய்யப்பட்டது.அனைவரும் குளித்து வீடு திரும்பினர்.வீட்டில் இருந்த பெண்கள் குளித்து முடித்தனர்.வீடு கழுவி விடப்பட்டது.
மாலை வந்தது.மெள்ள மெள்ள அனைவரும் இயல்பு நிலைக்குத்
திரும்பிக்கொண்டிருந்தனர்.சூழ்நிலையை இயல்பாக்க யாரோ தொலைக்காட்சிப்பெட்டியை உயிர்ப்பித்தனர்.ஆரம்பமாயிற்று அவரவர் இயல்பு வாழ்க்கை.
"ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங்காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில்மூழ்கி நினைப்பொழிந்தார்களே."--(திருமூலர்)