Tuesday, March 29, 2011

சூனிய சம்பாஷணை-பார்ப்பான் அகத்திலே

ஓர் ஊரில் ஒரு அந்தணன் இருந்தான்.அவனிடம் ஐந்து கறவைப் பசுக்கள் இருந்தன.நல்ல உயர்ந்த ரகப் பசுக்கள்.நன்கு,அதிகமாகப் பால் தரக்கூடிய பசுக்கள்.ஆனால் அப் பசுக்களை மேய்ப்பதற்கு எந்த விதமான எற்பாடும் அவன் செய்யவில்லை.அப்பசுக்கள் தம் மனம் போல தினமும் எங்கெங்கோ மேய்ந்து திரிந்து பாலைச் சொரிந்து விட்டு வீடு திரும்பி வந்தன . அப்பசுக்களின் பயன் அதன் உரிமையாளனுக்குக் கிடைக்காமல் போயிற்று. அப்பசுக்களைச் சரியான முறையில் தினமும் மேய்ப்பதற்கு அவன் ஏற்பாடு செய்திருந்தால் நல்ல பயன் அடைந்திருப்பான்.அந்தப் பசுக்கள் ஐந்தும் பாலாய்ச் சொரிந்திருக்கும்.

"பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரு முண்டாய் வெறியு மடங்கினால்
பார்ப்பான் பசுவைந்தும் பாலாச் சொரியுமே"--(திருமந்திரம்-2882)

ஆன்மா என்ற பார்ப்பானின் உடலில் ஐம் பொறிகளான கறைவைப் பசுக்கள் ஐந்து உள்ளன.-மெய்,வாய்,கண்,மூக்கு,செவி.அவை மேய்ப்பவர் இன்றி விருப்பம் போல் திரிவன.(புலன்கள் அடக்கப் படாமல் இன்பம் தேடி அலைகின்றன.)புலன் நுகர் பொருட்கள் மீதுள்ள ஆசையை அறுத்து இறைவன் பால் மனத்தைச் செலுத்தினால் பொறிகள் என்ற பசுக்கள் பேரின்பம் என்ற பாலைத் தரும்.

புலனடக்கம் என்பது என்ன?புலன்களின் இயற்கையான இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நிறுத்துவதா?அவ்வாறு அவற்றை அடக்கியே வைத்திருந்தால், அவை வீறு கொண்டு எழும்போது அவற்றைக் கட்டுப் படுத்த முடியாது போகும்.எனவே அவற்றை நெறிப் படுத்த வேண்டும்.இதையே பிரத்தியாகாரம் என்று சொல்வர். எனவே’மேய்ப்பாருமுண்டாய் வெறியுமடங்கினால்’ என்பதற்கு,அடக்கி நிறுத்துவது எனப் பொருள் கொள்ளாமல்,நன்னெறிப் படுத்துவது என்றே கொள்ளல் வேண்டும் .ஏனெனில்,திருமூலரே மற்றோர் இடத்தில் கூறுகிறார்---

“அஞ்சும் அடக்கு,அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை;
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே."

மற்றொரு பாடலில் சொல்கிறார்—

“தானே புலன் ஐந்துந் தன்வச மாயிடும்
தானே புலன் ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன் ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானேதனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே”

இறைவனைச் சரணடைந்தால்,ஐந்து புலன்கள் வழியே செல்லும் மனம்,அவன் வசப்படும்.அப்போது ஐம்புலன்களின் சுவை கெடும்.அந்த ஐம்புலன்களே ஆன்மாவை இறைவழி இட்டுச்செல்லும்.

பார்ப்பான் என்பதற்கு பிரம்மா என்றும்,அகம் என்பது அவன் படைத்த உடல் என்றும் பொருள் கொள்வர்.

அந்தணன் ஒருவனிடம் பசு இருந்தால் அவன் மேய்க்க இயலாதவன்.அதற்கென ஒரு மேய்ப்பவனின் உதவி நாட வேண்டும்.அவ்வாறு செய்யாவிடில் பசுக்கள் இருந்தும் அவனுக்குப் பயனில்லை என்பதால், பார்ப்பான் என்று சொல்லப் பட்டது என்றும் சொல்வர்.

"சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு."-

என்ற திருக்குறள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.