Wednesday, December 12, 2007

தானச்சிறப்பு

"ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே"--(திருமூலர்)

எல்லோருக்கும் கொடுங்கள்.அவர்,இவர் என்று வேற்றுமை பாராட்டாதீர்கள்.வரும் விருந்தை எதிர்பார்த்து அவருடன் கூடி உண்ணுங்கள்.பழம் பொருளைப் பாதுகாத்து வைக்காதீர்கள்.பசி உடையவர்களாக மிக விரைந்து உண்ணாதீர்கள்.காக்கைகள் உண்ணும்போது மற்றக் காகங்களை அழைத்து உண்பதைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்.

இங்கு குறிப்பிடத் தக்கது "ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்" என்பதுதான்.இவர் உயர்ந்தவர்,அவர் தாழ்ந்தவர் என்றோ இவர் நம்மவர் அவர் அயலவர் என்றோ வேறு படுத்தாமல் வேண்டி வந்த அனைவருக்கும் ஈதல் வேண்டும் என்பது கருத்து.

இங்கு "தக்கார்க்கீதலே தானம்"மற்றும் "பாத்திரம் அறிந்து பிச்சையிடு" என்னும் வழக்கு மொழிகள் ஒப்பு நோக்கத் தக்கன.இவை தவறா?இல்லையெனில்,ஏன் இவ்வறு சொல்லப்பட்டன?

தானம் கேட்டு வருபவர்களில் சிலர் எக்காரணத்துக்காக உதவி பெறுகிறார்களோ அக்காரணத்துக்காக அதைப் பயன் படுத்தாமல் தவறான செயல்களுக்காகப் பயன் படுத்தி விடுகிறார்கள்.தானம் பெற வரும் போது அவர்கள் நோக்கமே ஏமாற்றிப் பணம் பறித்து அதைத் தவறாகப் பயன் படுதுவதுதான்.எனவே இந்த மாதிரி மனிதர்களிடம் ஏமாறாமல் இருப்பதற்குதான் மேலே குறிப்பிடப் பட்ட வழக்கு மொழிகள் சொல்லப்பட்டன.எனவே இங்கு பசியென்று வருபவர்க்கு உணவளிப்பது வேறு;பொருள் உதவி செய்யும்போது நோக்கம் அறிந்து உதவுவது என்பது வேறு என்றுணர்தல் வேண்டும்.

Wednesday, December 5, 2007

நமச்சிவாய

"அஞ்சு உள ஆனை அடவியுள் வாழ்வன;
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன;
அஞ்சையும் கூடத்துஅடக்கவல்லார்கட்கே
அஞ்சு ஆதி ஆதி அகம்புகலாமே."--(திருமூலர்)

உடல் என்ற காட்டுள் ஐம்பொறிகளாகிய ஐந்து யானைகள்வாழ்கின்றன.எவர்க்கும் கட்டுப் படாமல் அவை அலைந்து திரிகின்றன.அவற்றை அடக்குவதற்கு ஐந்து அங்குசங்கள் இருக்கின்றன.அவை 'நமசிவாய' என்ற ஐந்து எழுத்துக்களாகும்.அந்த ஐந்து யானைகளையும் ஐந்தெழுத்து மந்திரத்தைக் கொண்டு அடக்க வல்லவரே அந்தப் பரமாத்மாவை அடைய முடியும்.

இங்கு ஐம்பொறிகளும் ஐந்து காட்டு யானைகளாக உருவகப் படுத்தப் பட்டுள்ளன.அவை இந்த உடல் என்னும் காட்டில் வசிக்கின்றன.விருப்பம் போல் அலைந்து திரிகின்றன.காடென்பது புதர்கள் மண்டி,இருள் சுழ்ந்து காணப்படும் .அது போல இந்த உடல் அழுக்காறு,அவா,வெகுளி போன்ற புதர்கள் மண்டி,அறியாமையாகிய இருள் சூழ்ந்திருக்கிறது .நமசிவாய என்ற ஐந்தெழுத்தை ஓதுவதன் மூலம் ஐம்பொறிகளை அடக்குவதோடல்லாமல் இந்த உடலில்(மனதில்) மண்டியுள்ள புதர்களை,இருளை நீக்கி இறையருளைப் பெறவும் முடியும்.

இங்கு 'அஞ்சாதி ஆதி' என்றது ஐம்பூதங்களுக்கும் முதல்வனான சிவனை.
திருவாசகத்தின் ஆரம்பமே"நமச்சிவாய வாஅழ்க" என்பதுதான்.யஜுர் வேதத்தின் மையமாக விளங்குவது ஸ்ரீ ருத்திரம்.இந்த ஸ்ரீ ருத்திரத்தின் நடுவிலே அமைந்தது நமச்சிவாய மந்திரம்.ஸ்ரீருத்திரத்தைக் கற்று ஓதுவது என்பது எல்லோர்க்கும் சாத்தியமன்று.ஆனால் 'நமச்சிவாய"என்று சொல்வது எளிது.இதற்கு குருமுகமாக உபதேசம் எதுவும் தேவையில்லை.எனவேதான் திருமூலரும் இந்த எளிய மந்திரமே புலன்களை அடக்கி இறையருள் பெறும் வழியாகும் என்று சொல்கிறார்.

Monday, November 26, 2007

புலன் மயக்கம்

ஒரு ஊரில் ஒரு அந்தணன் இருந்தான்.அவனிடம் ஐந்து கறவைப் பசுக்கள் இருந்தன.நல்ல உயர்ந்த ரகப் பசுக்கள்.நன்கு,அதிகமாகப் பால் தரக்கூடிய பசுக்கள்.ஆனால் அப் பசுக்களை மேய்ப்பதற்கு எந்த விதமான எற்பாடும் அவன் செய்யவில்லை.அப்பசுக்கள் தம் மனம் போல தினமும் எங்கெங்கோ மேய்ந்து திரிந்து பாலைச் சொரிந்து விட்டு வீடு திரும்பி வந்தன . அப்பசுக்களின் பயன் அதன் உரிமையாளனுக்குக் கிடைக்காமல் போயிற்று. அப்பசுக்களைச் சரியான முறையில் தினமும் மேய்ப்பதற்கு அவன் ஏற்பாடு செய்திருந்தால் நல்ல பயன் அடைந்திருப்பான்.அந்தப் பசுக்கள் ஐந்தும் பாலாய்ச் சொரிந்திருக்கும்.

"பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரு முண்டாய் வெறியு மடங்கினால்
பார்ப்பான் பசுவைந்தும் பாலாச் சொரியுமே"--(திருமூலர்)
( பார்ப்பான்-ஆன்மா; அகம்-உடல்; ஐந்து பசுக்கள்-ஐம்புலன்கள் )
ஆன்மா என்ற பார்ப்பானின் உடலில் ஐம் பொறிகளான கறைவைப் பசுக்கள் ஐந்து உள்ளன.அவை மேய்ப்பவர் இன்றி விருப்பம் போல் திரிவன.(புலன்கள் அடக்கப் படாமல் இன்பம் தேடி அலைகின்றன.)புலன் நுகர் பொருட்கள் மீதுள்ள ஆசையை அறுத்து இறைவன் பால் மனத்தைச் செலுத்தினால் பொறிகள் என்ற பசுக்கள் பேரின்பம் என்ற பாலைத் தரும்.

"சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு."-திருக்குறள்

Friday, November 23, 2007

மீண்டும் வருகிறேன்!

வலைப்பதிவுலகத்திலிருந்து இரண்டு மாதம் விடுப்பில் செல்ல வேண்டியதாகி விட்டது.ஒரு தேர்வுக்காகத் தயார் செய்துகொண்டிருந்தேன்.தேர்வும் எழுதி விட்டேன்.இந்த வயதில் என்ன தேர்வு என்று நீங்கள் புருவம் உயர்த்துவது தெரிகிறது.ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் சோதிடப் பட்டயப் படிப்பு முடித்து விட்ட நிலையில் கலகத்தா விஷ்வ ஜோதிஷ வித்யாபீடத்தில் ஜோதிடத்தில் ஒரு தேர்வு எழுதியுள்ளேன்.தொடர்ந்து எழுதவும் போகிறேன்.பணிஓய்வு பெற்றபின் உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா?ஜோதிடத்தை ஒரு தொழிலாக இல்லாமல் ஒரு சேவையாகச் செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம்.தற்போதும் அவ்வாறுதான் செய்து வருகிறேன்.
இப்போது விடுப்பு முடிந்து மீண்டும் வந்து விட்டேன்.திருமந்திரம் தொடரும்.
சந்திப்போம்.நல்லன சிந்திப்போம்.

Saturday, September 22, 2007

வாழ்வியல்

வழக்கம்போல் ஞானியார் முன் பலர் அமர்ந்திருந்தனர்.ஞானி,தியானம் கலைந்து அனைவரையும் பார்த்தார்.அந்தக் கூட்டத்திலேயே நன்கு படித்திருந்த ஒருவன் கேட்டான்"சாமி,வாழ்வாங்கு வாழ்வது என்றால் என்ன?அதன் நியதிகள் என்ன?சிறிது விளக்கமாகச் சொல்லுங்கள்"

முக்கியமான கேள்வி.ஞானி யோசித்தார்.அனவருக்கும் புரியும் படியாகச் சொல்ல வேண்டும்."சரியான முறையில் வாழ்வதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன.சிலவற்றைக் கொள்ள வேண்டும்;சிலவற்றைத் தள்ள வேண்டும்.கவனமாகக் கேளுங்கள்."

"கொல்லாமை வேண்டும்.கொல்லாமை என்பது ஒரு உயிரைப் போக்காமல் இருப்பது மட்டும் அல்ல.எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாதிருத்தல்.நம் மனத்தால். சொல்லால், செயலால் பிற உயிர்களை வருத்தாதிருத்தல். நாமாகவே சில சமயம் தீங்கு செய்கிறோம்.பிறரைக் கொண்டு சில நேரம் தீங்கு செய்விக்கிறோம்.பிறர் தீங்கு செய்வதோடு ஒத்து சில நேரம் மகிழ்கிறோம்.இவை எல்லாமே விலக்கப்பட வேண்டும்."

"பொய் சொல்லாதிருக்க வேண்டும்.பொய்யா விளக்கே விளக்கு என்று
வள்ளுவர் சொல்கிறார்.நாம் சொல்கின்ற பொய் நமக்கு மகிழ்ச்சியைத்தரலாம்.ஆனால் அது பிறர்க்குத் தீங்கு செய்யும்."

"திருடக்கூடாது.தன்னுடையது அல்லாத,பிறருக்குச் சொந்தமான பொருள்களைக் கவர நினைப்பதே தவறு. இதற்கு அடிப்படை தகாத ஆசை.அதை நீக்குங்கள்."

"கள்ளுண்ணுதல்,தகாத காமம் இவை விலக்கப் பட வேண்டியவை.ஒருவன் மது அருந்தினால் மதி மயக்கம் ஏற்பட்டு எல்லாத் தவறுகளும் செய்கிறான்.தன் மனையாளைத் தவிர பிற பெண்களை மனத்தாலும் நினைக்ககூடாது.இதையே 'பேராண்மை' என்கிறார் வள்ளுவர்.

"தள்ள வேண்டியவை சொன்னேன்.கொள்ள வேண்டியவை என்ன?-அடக்கத்தோடு இருக்கவேண்டும்.'தான்' என்ற அகந்தையில்லாது இருக்கவேண்டும்.அடக்கம் அமரருள் உய்க்கும்.இதை உணருங்கள்."

"நியாயத்தின் பால் நிற்க வேண்டும்.பகைவர், நண்பர்,உறவினர் எவராயிருப்பினும் நடு நிலைமை தவறாது இருக்க வேண்டும்.சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல்,தராசு போல் இருக்க வேண்டும்.அதுவே சான்றோர்க்கு அழகு ."

"இருப்பதைப் பகிர்ந்துண்ண வேண்டும்.காக்கைகளைப் பாருங்கள்.ஒரு காகம் மற்ற காகங்களையும் அழைப்பதைப் பாருங்கள்.முன்பே ஒரு முறை சொல்லியிருக்கிறேன்"யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி"என்பதை.

"தூய்மையாக இருக்க வேண்டும்.இங்கே தூய்மை என்பது மனத்தூய்மை.உடல் தூய்மை,குளிப்பதால் பெறப்படும்.மனம் தூய்மையாக இருக்க நல்ல எண்ணங்கள் வேண்டும்.பொறாமை ,ஆசை, கோபம்,காமம் ஆகியவை இன்றித் தூய்மையாக இருக்கும் மனத்தில் தான் இறைவன் இருப்பான்."

"இவ்வாறு இருப்பவன் நல்லவன்.அவன் குண நலன்கள் எல்லோராலும் எண்ணிப்போற்றப்படும்."

ஞானி கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார்.

"கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கமுடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத் திடையில் நின்றானே."--------(திருமூலர்)

Monday, September 3, 2007

பக்தி

ஒரு நாள் ஞானியாரிடம் ஒருவன் கேட்டான்"சாமி,சிலர் கடவுளுக்காக பெரிய யாகம் எல்லாம் பண்றாங்க;நெறைய செலவு செய்யறாங்க.சிலர் ஒடம்பை வருத்தித் தவம் எல்லாம் செய்யறாங்க.;வெயில்,மழை,காத்து எதையும் பாக்கிறதில்லை.சிலர் ஏகாதசி,க்ருத்திகை,ஷஷ்டி,சனிக்கிழமை,வியாழக்கிழமை இப்படிப் பல நாட்கள் பட்டினி இருந்து கடவுளை வணங்குறாங்க.சிலர் கோவில் கோவிலாப் போயி வணங்கறாங்க.அங்கப்பிரதக்ஷிணம் செய்யறாங்க.என்னை மாதிரிச் சிலர் எதுவுமே செய்யாம வெறுமனே கும்பிடுறோம்.இறைவன் அருள் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக் கிடைக்குமா?"
ஞானி புன்முறுவலுடன் சொன்னார்"எதைச் செய்தாலும் உள் மனதில் மிகுந்த அன்போடு செய்ய வேண்டும்.இறைவனிடத்துக் காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி அன்போடு அகம் குழைந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.உடலை எவ்வளவு வருத்தினாலும்,உண்மையான அன்பு இல்லையெனில் பலன் இல்லை.நான் உங்களுக்கு கண்ணப்ப நாயனார்,சபரி ஆகியோர் பற்றிக் கூறியிருக்கிறேன் அல்லவா.அது போன்ற அன்பு வேண்டும்".
ஞானி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்

"என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி
என்போல் மணியினை எய்தவொண் ணாதே"--(திருமூலர்)

Friday, August 24, 2007

அறம்

அவர்கள் காத்திருந்தனர்,ஞானியார் தியானத்தினின்று விழிப்பதற்கு.இப்போதெல்லாம் இதே வாடிக்கையாகப்போய் விட்டது.-அவர் தியானம் கலைந்து விழித்தவுடன் தங்கள் குறைகளை,கேள்விகளை அவர்முன் வைத்து, அவரது பதிலைப்பெற்று அமைதி அடைவது.ஏனென்றால் கண் விழித்த சிறிது நேரத்திலேயே ஞானி மீண்டும் ஞானத்தில் ஆழ்ந்து விடுவார்.அந்த சில மணித்துளிகளுக்காக மக்கள் காத்திருக்கத் தொடங்கினர்.
ஞானி கண் விழித்தார்.அனைவரையும் ஒரு முறை கனிவோடு நோக்கினார்.அவர் பார்வை ஒருவன் மீது நின்றது.அவன் அவரை வணங்கிக் கேட்டான்"சாமி,கடவுளை எப்படி வழிபடுவதுன்னே எனக்குத் தெரியலை.பெரிசா பூசை செய்யவோ படையல் வைக்கவோ என்னால முடியாது.நான் என்ன செய்யணும் சாமி?"
"இறைவனை வழிபடுவதற்கு எந்த நியதியும் இல்லையப்பா.இதில் ஆடம்பரம் தேவையில்லை.நான் என்ற சிந்தையற்று ஆழ்ந்த பக்தியுடன்,உள்ளம் நிறை அன்புடன் ஒரு இலையைப்போட்டு வணங்கு.வில்வமோ,துளசியோ ஏதாவது ஒன்று.அவன் திருப்தி அடைவான்.உன் பூசையை ஏற்றுக்கொள்வான்"-ஞானி பதிலளித்தார்.
அவர் அடுத்தவனைப் பார்த்தார்.அவன் கேட்டான்"சாமி, நான் அதிக வசதியில்லாதவன்.தருமம் செய்யணுன்னு ஆசை இருக்கு.ஆனால் கொஞ்சமா ஏதாவது செஞ்சா எல்லாம் கேலி செய்வாங்களோன்னு பயமா இருக்கு. நான் என்ன செய்ய சாமி?"
அவர் பதில் அளித்தார்"உனக்கு நல்ல மனது இருக்கிறது.ஈதல் என்பது பெரிதாக இருக்க வேண்டியதில்லை.நேற்று நீ இங்கு வரும்போது எதிர்ப்பட்ட ஒரு பசுவுக்கு ஒரு வாய் புல் அளித்தாயே அதுவும் ஒரு தருமம்தான்.நீ உண்ணும் உணவில் சிறிது பசித்தவருக்குவழங்கினால் அது அறம்.உண்ணும் முன் காக்கைக்குச் சிறிது அன்னமிட்டால் அதுவும் தருமம்தான்."
அவர் பார்வை பட்ட அடுத்தவன் கேட்டான்"இதெல்லாம் கூட முடியலென்ன என்ன செய்ய"கொஞ்சம் இடக்குப் பிடித்த அவனது கேள்வியைச் செவியுற்று அவர் புன்னகைத்தார்."ஊரில எல்லோரும் உன்னை மிகவும் கோபக்காரன் என்று சொல்கிறார்கள்.பல நேரங்களில் நானே கவனித்திருக்கிறேன்,இனிமையாகப் பேசாமல் சுடு சொற்களையே பேசுவதை.அதை விடுத்து அனைவரிடமும் இன்சொற்கள் பேசுவாயாகில் அதுவே சிறந்த அறம்தான்-முகத்தானமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம் இன் சொலினதே அறம்."
இதைச் சொல்லிவிட்டு ஞானி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்.
"யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க் கின்னுரை தானே"-----(திருமூலர்)

Tuesday, August 21, 2007

யாக்கை நிலையாமை

அந்த வீட்டுப் பெரியவர் வாழ்வின் கடைசிக்கட்டத்தில் இருந்தார்.மருத்துவர்கள் கூறி விட்டனர்,இன்றிரவோ
நாளையோ,என்று.பெரியவரின் மகன்கள்,மகள்கள்,மற்றும் நெருங்கிய உறவினர்கள் வந்து விட்டனர்.வீடு முழுவதும் சோகம்
நிறைந்திருந்தது.தவிர்க்க முடியாத ஒரு முடிவை எதிர் நோக்கி
அனைவரும் காத்திருந்தனர்.
மறு நாள் விடிந்தது.பெரியவர் வாழ்வும் முடிந்தது.வீட்டிலிருந்து
உரத்த அழு குரல்கள் எழுந்தன.ஓலமும் ஒப்பாரியும் வெளிப்பட்டது.
இறுதி யாத்திரைக்கான எற்பாடுகள் செய்யப்பட்டன.சில காரணங்களால்
எற்பாடுகள் தாமதமாகின.அந்த வீதியில் வசிக்கும் ஒரு முக்கிய நபர்
பொறுமை இழந்தவராக விசாரித்துக் கொண்டிருந்தார்."நேரமாகுதில்லே.
பொணத்த எப்ப எடுக்கப்போறாங்க?"இதே நபர் முன் தினம் விசாரித்துக் கொண்டிருந்தார்"முருகேசன்(பெரியவரின் பெயர்) எப்படிப்பா இருக்கான்.ரொம்ப நல்லவன்."
சிறிது நேரம் சென்று இறுதி யாத்திரை தொடங்கியது.ஆண்கள் சுடு
காட்டுக்குச் சென்றனர்.உடல் தகனம் செய்யப்பட்டது.அனைவரும் குளித்து வீடு திரும்பினர்.வீட்டில் இருந்த பெண்கள் குளித்து முடித்தனர்.வீடு கழுவி விடப்பட்டது.
மாலை வந்தது.மெள்ள மெள்ள அனைவரும் இயல்பு நிலைக்குத்
திரும்பிக்கொண்டிருந்தனர்.சூழ்நிலையை இயல்பாக்க யாரோ தொலைக்காட்சிப்பெட்டியை உயிர்ப்பித்தனர்.ஆரம்பமாயிற்று அவரவர் இயல்பு வாழ்க்கை.
"ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங்காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில்மூழ்கி நினைப்பொழிந்தார்களே."--(திருமூலர்)

Friday, August 17, 2007

ஞானம்

அவன் கொஞ்சம் கொஞ்சமாக தன் நடமாட்டத்தைக் குறைத்துக் கொண்டான்.உணவுக்காக ஊருக்குள் செல்வது கூட குறைந்து போனது.அவனைத்தேடி அவன் இருப்பிடத்துக்கே உணவு வர ஆரம்பித்தது.மக்கள் அவன் தியானம் முடியும் வரை காத்திருந்து தங்கள் குறைகளை அவ்னிடம் சொல்ல ஆரம்பித்தனர்.அவனிடம் சொல்வதனாலேயே தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைப்பதாக நம்பினர்.அவனைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் அவன் அருட்பார்வைக்காகக் காத்திருந்தது.அனைவரும் அவனுக்காகத் தின் பண்டங்களும்,பழங்களும் மற்ற உணவுப்பொருட்களும் கொண்டு வந்தனர்.அவன் அனைத்தையும் அங்கு வரும் அவர்களுக்கே பிரசாதமாகக் கொடுத்தான்.ஒரு நாய் உணவுக்காக அங்கு வந்து அவன் தரும் உணவைச்சாப்பிட்டு விட்டு அங்கேயே கிடக்க ஆரம்பித்தது.என்றாவது அந்த நாய் எங்காவது சென்று விட்டு திரும்புவதற்கு நேரமானால் அவன் கவலைப்பட ஆரம்பித்தான்.அவனையும் அறியாமலே அந்த நாயின் மீது அன்பு அதிகமாயிற்று.ஒரு நாள் காலை அவன் கண் விழித்தபோது அந்த நாய் இறந்து கிடக்கக் கண்டான்.துக்கம் மேலிடக்கண்ணீர் பெருக்கினான்.சிறிது நேரம் கழித்து துக்கம் குறைய அவன் யோசித்தான்"ஏனிந்தத் துக்கம் ?எதற்காக அழுதேன்? யாருக்காக அழுதேன்?இதற்குக்காரணம் தேவையற்று நான் வைத்த ஆசை;பற்று.இதுவன்றோ மனிதர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணம்?இனி இறைவனை நினைக்கும்போது கூட அவன் மீது ஆசையற்ற ஒரு நிலையே வேண்டும்."
அவன் ஞானியானான்.
"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனொடாயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விட விட ஆனந்தமாமே."---(திருமூலர்)

Tuesday, August 7, 2007

இறைத்தத்துவம்

அவன் அந்த ஆற்றங்கரைக் கோவில் மண்டபத்திலேயே தங்க ஆரம்பித்தான்.அவனது பெரும்பகுதி நேரம் தியானத்திலேயே கழிந்தது.பசிக்கும்போது ஊருக்குள் சென்று யாரிடமாவது உணவு கேட்டுச் சாப்பிடுவான்.அந்த ஊரில் யாரும் அவனுக்கு உணவிட மறுப்பதில்லை.அனைவருக்கும் அவனிடம் ஒரு மரியாதை இருந்தது.
ஒரு நாள் அவன் சென்று கொண்டிருக்கும் போது ஒருவன் கையில் கற்களுடன் எதையோ தேடுவது போல்
நின்று கொண்டிருந்தான்.அவனைப்பார்த்ததும் அந்த ஒருவன் சொன்னான்"சாமி,ஒரு நாயி எப்பப்பார்த்தாலும் என்னைக் கண்டா கொலச்சுக்கிட்டே இருக்கு.அந்த சமயத்தில அத அடிக்கக் கல்லத் தேடினா கல்லு கெடைக்க மாட்டேங்குது.இப்ப கல்ல எடுத்து வச்சுக்கிட்டு நாயத் தேடினா அதக்காணும்.அந்தக்காலப் பெரியவங்க சரியாத்தான் சொன்னாங்க"நாயக்கண்டாக் கல்லக்காணும்,கல்லக்கண்டா நாயக்காணும்"அப்படின்னு".அவன் சிரித்தான்."இந்த மக்கள் உண்மையான பொருளை விட்டு விட்டு வேறு ஏதோ பொருளைக்கற்பித்துக்கொள்கிறார்களே"என்று நினைத்தான்.பின் சொன்னான்."அதற்குப்பொருள் அப்படியல்ல.கல்லில் செய்யப்பட்ட ஒரு நாயின் சிலையில் நாயின் உருவத்தை ரசித்துப்பார்க்கும்போது கல் கண்ணுக்குத்தெரிவ்தில்லை.அது என்ன கல்,செங்கல்லா,கருங்கல்லா என்று ஆராயும்போது நாய் தெரிவதில்லை.அதுதான் பொருள்."
மற்றவன் சொன்னான்"இதெல்லாம் எங்களுக்கு என்ன சாமி தெரியும்?நீங்க சொன்னாத் தெரிஞ்சுக்கறோம்."
அவன் நினைத்தான்."இறைத்தத்துவமும் இது போலத்தானே.ஐந்து பூதங்களாகிய நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் இவற்றை வியந்து அவற்றில் லயிக்கும் போது இறைவன் மறைந்து விடுகிறான்.பஞ்ச பூதங்களுக்கும் காரணமான பரம்பொருளை நினைக்கும் போது அவை மறைந்து இறைவனே நிற்கிறான்.'
அவன் கோவில் மண்டபத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார் முதல் பூதமே.-(திருமூலர்)

Monday, August 6, 2007

இரண்டல்ல(அத்வைதம்)

அவன் மிகவும் களைத்திருந்தான்.பல நாட்களாய் அலைந்து உடலும் தேடலுக்கு விடை கிடைக்காமல் மனமும் சோர்ந்திருந்தான்.கையில் பணமில்லாததால் இரண்டு நாட்களாக ஒன்றும் உண்ணாமல் துவண்டிருந்தான்.ஊர் ஊராய் ஒவ்வொரு கோவிலாய் இறைவனைத் தேடித் தேடி அலுத்திருந்தான்.அந்த ஊர் கோவிலில் தெய்வம் சக்தி நிறைந்தது, இந்த ஊர்க் கோவிலில் இறைவன் விசேடமானவர் என்றெல்லாம் ஒவ்வொருவர் சொல்வதையும் கேட்டு ஒவ்வொரு ஊராய் அலைந்து அவன் தேடும் கடவுளைக்காணாமல் ஏமாற்றம் அடைந்திருந்தான்.இப்போது அந்தக் கிராமத்தின் ஆள் அரவமற்ற ஆற்றங்கரைக் கோவில் வாசலில் பசியின் காரணமாக கண்கள் இருண்டு மயக்கமடைந்து கீழே விழுந்தான்.
தன் முகத்தில் விழுந்த நீரின் குளிர்ச்சியில் அவன் கண் விழித்தான்.எதிரே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.அரையில் ஒரு துண்டு,தலையில் முண்டாசு,கையில் ஒரு கோல்.சிறுவனைப்பார்த்த அவன் முனகினான்"பசி".சிறுவன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த சில பழங்களை அவனிடம் நீட்டினான்.பழங்களைத்தின்று சிறிது பசியாறிய அவன் சொன்னான்"கடவுள் மாதிரி வந்து காப்பாற்றி விட்டாயப்பா".சிறுவன் கேட்டான் "என்னங்க ஆச்சு?"அவன் சொன்னான்"கடவுளைத்தேடி ஊர் ஊராய் சுற்றினேன்.காண இயலவில்லை."
சிறுவன் சிரித்தான்"இப்பதான் என்னைப்பார்த்து கடவுள் மாதிரின்னு சொன்னீங்க.அப்ப எங்கிட்ட கடவுள் இருந்தா ,எல்லார் கிட்டயும் இருக்கணும்,உங்க கிட்டயும் இருக்கணும்.ஆனால் கடவுளைத்தேடி ஊரெல்லாம் அலஞ்சேனு சொல்றீங்களே.சிரிப்புதான் வருது சாமி"
அவனுக்குப் பளார் என்று அறைந்தது போல் இருந்தது.கண்களை மூடித்திறந்தான்.சிறுவனைக் காணவில்லை.உண்மை உணர்ந்தான்.தான் வேறு கடவுள் வேறில்லை என்பதை உணர்ந்தான்.பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி புலன்களைக்குவித்து உள்ளே இருக்கும் கடவுளோடு ஒன்றினான்."அஹம் ப்ரம்ஹாஸ்மி"

"சீவன் என்ன சிவனார் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரைஅறிகிலர்
சிவனார் சிவனாரைஅறிந்த பின்
சீவனார் சிவனாயிட்டிருப்பரே"-(திருமூலர்)

Sunday, August 5, 2007

மொழி மாற்றம்

இன்று முதல் தமிழுக்கு மாறி விட்டேன்.என் தாய் மொழியில் எழுதுவது எனக்கு எளிது என்பதால்.இன்று சனிப்பெயர்ச்சி,நானும் பெயர்ந்து விட்டேன்!எந்த இராசிக்காரர்கள் எல்லாம் சிரமப்படப்போகிறார்களோ?