Friday, August 7, 2009

அம்மாவை வணங்காது உயர்வில்லயே !

உறவுகள் அனைத்திலும் உயர்ந்த உறவு,தாய் என்ற உறவு. தாய்ப் பாசம் என்பது சன்னியாசியையும் விடுவதில்லை. தனது தாயின் மரணத்தை எண்ணிக் கலங்கி ஐந்து ஸ்லோகங்களால் தன் மன உணர்வுகளை வெளியிடுகிறார் ஜகத்குரு ஆதிசங்கரர்.நம்மையும் கலங்கச்செய்கிறார்.அந்த ஸ்லோகங்களின் தமிழாக்கம் இதோ:-

ஸ்லோகம்-1

எனது தாயார் என்னைக் கர்ப்பத்தில் வைத்து ஒவ்வொரு நிமிஷமும் என்னைத் தாங்கும் போது பட்ட கஷ்டத்துக்கு நான் பிரதியுபகாரம் ஏதாவது செய்திருக்கிறேனா?

அது இருக்கட்டும்.பிரசவ சமயத்தில்,போக்க முடியாததும்,பொறுத்துக் கொள்ள முடியாததுமான சூலைவலி என்கிற கொடுமையான ஒரு வலிக்கு நான் பதில் உபகாரம் செய்திருக்கிறேனா?

அதுவுமிருக்கட்டும்.என்னைப் பெற்றதும்,என்னை ரட்சிக்க ருசியில்லாத பொருட்களைச் சாப்பிட்டு வாழ்ந்த என் தாய்க்கு ஏதாவது செய்திருக்கிறேனா?

தனது உடலை இளைக்கச் செய்தும்,தூக்கமில்லாமலும்,எனது மலத்திலேயே படுத்து ஓராண்டு என்னை காத்த தாயாருக்கு ஏதாவது செய்திருக்கிறேனா?

யாராலும் தாய்க்குப் பிரதியுபகாரம் செய்ய முடியாது.எனவே அம்மா, உனக்கு நமஸ்காரம் செய்கின்றேன்,ஏற்றுக்கொள்.

ஸ்லோகம்-2

நான் கல்வி கற்கச் சென்றிருந்த சமயம்,தன்னை மறந்து தூங்கிய தாங்கள் நான் சன்னியாசியானதுபோல் கனவு கண்டு,அழுதவண்ணமாய் குருகுலம் வந்து கதறி,அங்கிருந்த எல்லோரையும் கதறி அழச்செய்த என் அம்மா,உனக்கு நமஸ்காரம்.

ஸ்லோகம்-3

அம்மா! நீ முக்தியடையும் சமயத்தில் கொஞ்சம் நீராவது உன் வாயில் விட்டேனா?பிறகும் ச்வதா மந்திரத்தினால் ச்ராத்தம்,தர்ப்பணமாவது செய்தேனா?உனது முக்தி சமயத்தில் தாரக மந்திரமாவது உன் காதில் ஓதினேனா?அச்சமயம் எனக்குக் கிடைக்காமலும்,எதுவும் செய்ய அதிகாரமில்லாததாலும்,சன்னியாசியானதால் எந்த வைதீகமும் கடைப் பிடிக்க முடியாது போனதால்,மனம் தவிக்கின்ற உன் மகனான என்னிடம் தயவு செய்ய வேண்டுமம்மா!உனது சரண கமலத்தைப் பிடித்து வேண்டுகிறேன்.

ஸ்லோகம்-4

அம்மா! என்னைக் காணும்போதெல்லாம் என் முத்தே கண்ணே,ராஜா, சிரஞ்சீவியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி,என்னிடம் கருணை, அன்பு, தயைகலந்த அமுதமான சொற்களால் என்னைச் சீராட்டி,,பாலூட்டி,தாலாட்டி வளர்த்த என் அன்னைக்கா வேகாத அரிசியை வாயிலே சமர்ப்பிப்பேன்?இதைப் பொறுக்க முடியவில்லையே! அம்மா நீயே சரண்.

ஸ்லோகம்-5

அம்மா,என்னைப் பெற்றபோது பொறுக்க முடியாத வேதனையுடன் அம்மா!அப்பா!சிவபெருமானே!கிருஷ்ணா!கோவிந்தா,ஹரே முகுந்தா என்றழைத்த வாக்கோடு கூடிய என் கருணைத் தெய்வமே!என் இரு கைகளையும் தூக்கி உனக்கு அஞ்சலி செய்து,உன்னைச் சரணடைகிறேன்.