வழ்க்கம் போல் ஞானியார் முன் ஊர் மக்கள் பலர் அமர்ந்து அவரது அறிவுரையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.தியானம் முடிந்து கண் விழித்த ஞானியார் அனைவரையும் பார்த்துச் சிரித்து ஆசி வழங்கினார்.
சொக்கன் ஞானியைப் பார்த்து,அடக்கத்துடன் பேசத் தொடங்கினான்.
“சாமி,எங்க வீட்டு மாடத்திலே,பிடாரி அம்மன் இருக்குதுன்னு பரம்பரையாக் கும்பிட்டுக் கிட்டு வரோம்.இன்னிக்கு ஆத்தாவுக்குப் படையல் வச்சோம்,அந்தப் பிரசாதங்கள் சாமிக்காகக் கொண்டு வந்திருக்கிறேன்.”
ஞானி பிரசாதங்களைப் பார்த்தார்.பின் சொக்கனைப் பார்த்தார்.சிரித்தார் .பின் கேட்டார் ”.படையல் எல்லாம் வைத்து இறைவனிடம் என்ன வேண்டிக் கொண்டாய்.? இன்னும் காடு,கழனி வாங்க வேண்டும்,சொத்து பெருக வேண்டும் இது போன்ற உன் பல ஆசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றுகேட்டாய் அல்லவா?நீ மட்டுமல்ல. அனைவருமே அப்படித்தான். ஆனால் இறைவன் உன் வீட்டு மாடத்திலும் மண்டபத்திலும், கூடத்திலும் கோவிலிலும்,வேடம் அணிந்த ஆஷாடபூதிகளிடமும் இருக்கிறான் என்றா எண்ணுகிறாய்.இல்லை. ஆசையை விட்டவர் யாரோ அவருடைய நெஞ்சத்தில் இருக்கிறான். நெஞ்சம் என்பது ஆசைகளால் நிரம்பியிருந்தால் அந்த ஆசைகள் மூலம் வரும் மற்றவை--கோபம், பொறமை, வெறுப்பு இப்படிப் பலவும்- நிரம்பி அதனால் ஏற்படும் குப்பைகளும் சேர்ந்து நிரம்பியிருக்கும்.ஏற்கனவே நிரம்பியிருக்கும் ஒரு இடத்தில் எப்படி வேறு ஏதாவது புக முடியும்.எனவே மனதை ஆசைகளற்றுத் தூய்மையாக வைத்துக் கொண்டால் அந்தக் காலி இடத்தில் இறைவன் அமர்ந்து கொள்வான்”
”மாடத் துளானலன் மண்டபத் துளானலன்
கூடத் துளானலன் கோயி லுளானலன்
வேடத் துளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத் துளேநின்று முத்திதந் தானே”-- (திருமந்திரம்)
(இறைவன் வீடுகளின் மாடத்திலும், மண்டபத்திலும், கூடத்திலும்,கோவிலிலும்,திரு வேடத்திலும் அணுக்கமாக இருப்பவன் அலன்.அவாவறுத்தார் நெஞ்சில் மறைந்திருந்து,வீடு பேறு அளிப்பவன்) .