Wednesday, December 17, 2008

மருந்தீசன் பதிகம்

பட்டாபிராமன் என்ற என் நண்பர் பல ஆண்டுகளாக மரபுக் கவிதைகள் எழுதி வருகிறார்.கவிதை எழுதிய நோட்டுப் புத்தகங்களையெல்லாம் பத்திரமாகக் காப்பாற்றி வைத்துள்ளார்.அவரைத் தவிர அக்கவிதைகளைப் பார்த்தவர்கள் ஒரு சிலரே.உண்மையிலேயே ஆத்ம திருப்திக்காக எழுதுகிறவர்.சென்னை திருவான்மியூரில் வசிப்பவர்.மருந்தீச்வரர் மீது அவர் எழுதிய கவிதை ஒன்று கிழே--

மருந்தீசன் பதிகம்
ஆதி அந்த மென்றி லாஅ நந்த மாகி நிற்பவன்
வேத மேஅ றிந்தி லாமெய் ஞான ரூப மானவன்
ஓத மாக்க டல்பு ரத்து ஔட தீசன் பால்வண
நாதன் நாதன் வான்மி யூரன் நல்ல டிக்கு வந்தனம் 1
(( ஓத மாக்கடல்புரத்து ஔடதீசன் - குளிர்ந்த பெருங்கடல் பக்கத்தில் உள்ள ஔஷதீஸ்வரன்)
தொல் அ கத்தி யர்க்கு நோய்தொ லைக்கும் வேதம் சொன்னவன்
எல்லை யற்ற சோதி யாய் அ கண்ட மெங்கும் நிற்பவன்
பல்லு யிர்க்கு ளேயும் அன்புப் பால மாய்ப் பிணைத்தவன்
சொல்ல வொண்ணா வான்மி யூரன் தூம லர்த்தாள் வந்தனம் 2
(தொல் அ கத்தி யர்க்கு நோய்தொ லைக்கும் வேதம் சொன்னவன் - ( அகத்தியர்க்கு நோய் அகற்றும் ஆயுர் வேதம் கற்பித்தவன் )
பாய்ந்த கங்கை சென்னி தாங்கி பகீர தன்பு ரந்தவன்
மாய்ந்த மன்ம தற்கு மீண்டும் வாழ்வு தந்த வள்ளலான்
ஆய்ந்த றிந்த ஞானி கட்கு அகத்து ளே நி றைந்தவன்
தேய்ந்த திங்கள் வான்மி யூரன் சேவ டிக்கு வந்தனம் 3
( பாய்ந்த கங்கை சென்னி தாங்கி பகீர தன்பு ரந்தவன் - கங்கையைத் தலையில் தாங்கி பகீரதனுக்கு உதவியவன் )
இன்று நேற்று நாளை என்றி யங்கும் அண்டம் தன்னுளே
ஒன்றி ஆதி அற்ற வோர்அ னந்த மாய்ப்ப ரந்தவன்
அன்றி லாயெம் குற்றம் நீக்கி அன்பு மட்டும் ஏற்பவன்
நன்றி நன்றி வான்மி யூரன் நல்ல டிக்கு வந்தனம் 4
பொருளுமாய் அ தற்குளே பு தைந்த சக்தி தானுமாய்
அருள் உ மைக்கி டம்ப கிர்ந்தே அம்மை யப்பன் ஆனவன்
இருள்ம லிந்த குகை நிகர்த்த எங்கள் நெஞ்சில் தீபமாய்
மருள் அ கற்றும் வான்மி யூரன் மலர டிக்கு வந்தனம் 5
(பொருளுமாய் அ தற்குளே பு தைந்த சக்தி தானுமாய்
அருள் உ மைக்கி டம்ப கிர்ந்தே அம்மை யப்பன் ஆனவன் :
(By sharing his physique with Parvathi, demonstrates that He Is Manifest as Matter and Energy in the Cosmos)
ஆல கால நஞ்ச ருந்தி அண்டம் யாவும் காத்துதான்
நீல கண்ட னான வன் வெண் ணீரணிந்த நின்மலன்
மால் அ யற்கும் காண்கி லாஅ நந்த மாய் அ மைந்தவன்
பால் அ ணிந்த வான்மி யூரன் பதம லர்க்கு வந்தனம் 6
வந்த தேன் இ ருப்ப தேன் என் றறிந்தி லாத மாந்தராய்
வந்த தாலே உழலும் நந்தம் வாழ்வைச் சீர்ப்ப டுத்துவோன்
இந்தி ரன்,பி ருங்கி, காலன், ஏனை தேவர், நான்மறை
வந்த னஞ்செய் வான்மி யூரன் மலர்ப்ப தங்கள் வந்தனம் 7

நந்தி வாக னன்க ழுத்தில் நாக மாலை பூண்டவன்
கந்த வேளை நெற்றிக் கண்ணின் கனலி ருந்து யிர்த்தவன்
சுந்த ரர்க்குத் தோழன் எங்கும் சோதி யாய் நி றைந்தவன்
எந்தன் ஈசன் வான்மி யூரன் இணைய டிக்கு வந்தனம் 8
அன்ப ரைப்பு ரத்தல் வேண்டி ஆடல் ஆறு பத்து மூன்(று)
இன்புடன் நடாத்தி பத்தர் ஈர டிக்குள் ஏற்றவன்
என்பும் ஓடும் மாலை யாக்கி யாக்கை அற்பம் காட்டுவோன்
தென்பு லத்து வான்மி யூரன் சேவ டிக்கு வந்தனம் 9
(அன்ப ரைப்பு ரத்தல் வேண்டி ஆடல் ஆறு பத்து மூன்(று)
இன்புடன் நடாத்தி பத்தர் ஈர டிக்குள் ஏற்றவன் ::
(அறுபத்து மூன்று திருவிளையாடல்கள் அன்பருக்காக நடத்தினவன் )

ஓத நீர், நெருப்பு, பூமி, ஓங்கு வானம், காற்றுமாம்
பூத மைந்து மாகி யாளும் பூர ணத்தின் பூரணன்
நாத ரூபன் மூச்சி லேஓங் கார நாத மானவன்
வேத நாதன் பால்வ ணந்தன் மெய்ய டிக்கு வந்தனம் 10சு. பட்டாபிராமன் மார்ச் ஏழு, 2003--

Monday, September 1, 2008

செயல் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி-உபநிடத வழி.

செயல் புரிபவனாகச் சிறந்து விளங்குவது எப்படி என்ற கேள்விக்கு தைத்திரீய உபநிடதத்தில் உள்ள சில மந்திரங்கள் சில குறிப்புகளைத் தருகின்றன.
ச்ரத்தா ஏவ சிர:
------------------

முதன்மையானது,அக்கறை.செய்யும் செயலை மதித்தல்;நேசித்தல்(சிர: என்றால் தலை.ச்ரத்தா என்பது ஈடுபாடு,அக்கறை). சிறப்பாகச் செயல் புரிய வேண்டுமெனில் செய்கின்ற செயலை வெறுப்புடன் செய்யக்கூடாது; தயக்கத்துடன் செய்யக் கூடாது;அரை மனதுடன் செய்யக்கூடாது.எல்லாச் செயல்களும் நாமே தேர்ந்தெடுத்துச் செய்பவை அல்ல.சில செயல்களை நாம் தேர்ந்தெடுத்துச் செய்கிறோம்.சில செயல்கள் நாம் ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கேற்ப செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.ஒரு குடும்பத்தலைவனாக,ஒரு அலுவலக ஊழியனாக,ஒரு பொறுப்புள்ள குடிமகனாகப் பல செயல்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவ்வாறு எந்தச்செயல் செய்தாலும் அதன் மீது விருப்பம் இருக்க வேண்டும்;குறைந்த பட்சம் வெறுப்பாவது இல்லாமல் இருக்க வேண்டும்."என் தலையெழுத்து,என் போதாதகாலம்" என்றெல்லாம் குறை கூறிக்கொண்டே எந்தச் செயலையும் செய்யக்கூடாது. செயலை விரும்பக் கற்றுக் கொள்ள வேண்டும்.நாம் செய்யும் செயல்களை விரும்பக் கற்றுக்கொண்டால், அச்செயலைச் செய்வதே நமக்கு மகிழ்ச்சியைத்தரும். ஒரு முறை அலுவலகத்தில் என்னைப் பார்க்க வந்த ஒரு நண்பர் என் செயல்பாடுகளைப் பார்த்து விட்டுக் கூறினார்"நான் நினைக்கிறேன்,நீங்கள் உங்கள் வேலையை மிகவும் நேசிக்கிறீர்கள் என்று".நான் சொன்னேன்"ஆம்,நண்பரே, அவ்வாறு நேசிப்பதால்தான் என்னால் சிறப்பாகச் செயலாற்ற முடிகிறது".எனவே முதன்மையானது செய்யும் செயலிடம் விருப்பம்,மரியாதை,ஈடுபாடு,அக்கறை.ருதம் தக்ஷிண:பக்ஷ:

---------------------------

அடுத்தது செய்யும் செயல் பற்றிய அறிவு.செய்ய வேண்டிய செயலைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.எதைச் செய்ய வேண்டும்,எப்படிச் செய்ய வேண்டும்,ஏன் செய்ய வேண்டும்,எங்கு செய்ய வேண்டும்,எப்போது செய்ய வேண்டும் என்பவற்றை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும், 'ருதம்' என்பதற்குச் செய்கின்ற செயலைப்பற்றிய சரியான அறிவு எனப் பொருள் கொள்ளவேண்டும்."யதா சாஸ்திரம்,ததா கர்தவ்யம் ஞானம்" என்கிறார் ஆதி சங்கரர்.விதிகள் என்ன சொல்கின்றனவோ,அதை அப்படியே செய்ய வேண்டும். இரவில் ஒருவர் சுப்ரபாதம் படித்தால் அவரைப் பற்றி என்ன சொல்வது? தேர்வுக்குச் செல்லும் மாணவன் நன்கு படித்துவிட்டுச் செல்லவேண்டும்.எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர்,இருபது ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர்,இன்றும் வகுப்புக்குச் செல்லும் முன் தயார் செய்து கொண்டுதான் செல்கிறார்.(ஈடுபாடு+அறிவு).ஒரு செயலில் ஒரு தவறு செய்தால் அதிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டும் அத்தவறைச் செய்யாமல் இருக்க வேண்டும்.அதுவே செயல் முன்னேற்றத்துக்கான வழி.

செயல்கள் மட்டுமன்று.வாழ்வில் நாம் ஏற்கும் ஒவ்வொரு பாத்தி்ரமுமே பல விதமான செயல்பாடுகள் உடையதாகிறது.ஒருவரே,மகனாய்,கணவனாய், சகோதரனாய்,தந்தையாய் பல நிலைப்பாடுகளில் செயல் புரிய வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் திறம்படச் செய்ய,அது பற்றி முழுமையான அறிவு தேவை.

ஸத்யம் உத்தர:பக்ஷ:
--------------------------
செய்யும் செயல் பற்றி முழுமையாக அறிந்த பின் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
" யதா சாஸ்திரம் ததா கர்தவ்யம் ஞானம்
யதா ஞானம் ததா அனுஷ்டானம்."
எனக்கு ஒரு செயலை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியும்,ஆனால் செய்ய மாட்டேன் என்ற நிலை இருக்கக்கூடாது.அறிவுக்கும்,செயலுக்கும் இடையே பிளவு இருக்கக் கூடாது என்பதையே ஸத்யம் என்ற சொல் உணர்த்துகிறது.ஒரு செயல் பற்றிய நம் முழுமையான அறிவைப் பயன்படுத்தி அச் செயலைச் செய்யும்போது செம்மையாகச் செய்து விட்டோம் என்ற திருப்தி கிடைக்கிறது.எனவே மூன்றாவது,அறிந்தவற்றைச் செயல் படுத்துவது.

யோக ஆத்மா
-----------------
யோக என்பதற்கு இங்கே பொருள் ஒருமுகப்படுத்துதல்(concentration,focus).நாம் தியானத்தில் இருக்கும்போது நம் மனம் ஒருமுகப்படுகிறது. அதைப்போல, செயலைத் தியானமாகப் பாவித்துமனதை ஒரு முகப்படுத்திச் செய்யும்போது செயல் செம்மையாக முடிக்கப்படுகிறது.இயந்திரம் போல் செயலாற்றினால் செய்த செயலையே திரு்ம்பச் செய்ய நேரிடும்.அலுவலகம் சென்றால் நம் சிந்தனை அங்கு செய்கின்ற செயல்களின் மீதுதான் இருக்க வேண்டும். அவ்வாறின்றி, விட்டைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் செயல் எவ்வாறு செம்மையாக முடியும்?எனவே,நமது கடமைகளைச் செய்யும்போது,"கருமமே கண்ணாயினார்"என்பது போல,மனதை ஒரு முகப்படுத்திச் செய்ய வேண்டும்.

மஹ:புச்சம் ப்ரதிஷ்டா.
----------------------------
" நான் செய்யும் ஒவ்வொரு செயலுமெவ்வளவு அதிகமான மனிதர்களுக்குப் பயன் படுகிறதோ அவ்வளவு பயன் படட்டும்"என்று எண்ண வேண்டும். கென்னடி சொன்னார்"இந்த நாடு எனக்கு என்ன செய்தது என்று கேட்காதே,நான் இந்த நாட்டுக்கு என்ன செய்தேன் என்று கேள்"எனவே நமது பார்வையை விரிவடையச் செய்ய வேண்டும்.நமக்குக் கிடைக்கும் பயனை விட,அச் செயலால் மற்றவர்கள் எவ்வறு பயனடைகிறார்கள் என்பதை நினைக்க வேண்டும்.

ஆக, ஐந்து விதிகளாவன:-செயலை விரும்பு,அது பற்றி முழுமையாய் அறிந்து கொள்,செயல்படுத்து,ஒருமுகமாய் செயலாற்று,பார்வையை விரிவாக்கு.
இவையே தைத்திரீய உபநிடதம் சொல்லும் செய்தி.

(ஆதாரம்:பரம பூஜ்யஸ்ரீ ஸ்வாமி பரமார்த்தானந்தா அவர்களின் உரை)

Monday, July 28, 2008

ஒன்றே குலம்,ஒருவனே தேவன்.

ஒரு நாள் திடீரென்று அந்த ஊரில் மதக் கலவரம் வெடித்தது.இரு மதத்தைச் சார்ந்தவர்கள் வன்முறையில் இறங்கினர்.பொருட்சேதம்,உயிர்சேதம் ஏற்பட்டது.காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி அதில் சில உயிர்கள் பலியாகின .வழிபாட்டுத் தலங்களைச் சுற்றிப் பலத்த காவல் போடப்பட்டது.காவலுக்கு வந்த காவலர்கள் ஞானியார் இருந்த மண்டபத்தில் சில நேரம் வந்து இளைப்பாறினர்.ஊரில் நடந்தவற்றைப் பார்த்து, பார்க்காதவற்றைப் பற்றி கேட்டு,ஞானியார் மனம் நொந்து போயிருந்தார்.உணவைத்துறந்து ஓரிறு நாட்கள் பெரும் பகுதி நேரம் தியானத்திலேயே இருந்தார்.நிலைமை ஓரளவு சரியானபின்,சிலர் முன்பு போலவே அவரை நாடி வந்தனர்.அவர் அவர்களில் யாரையும் குறிப்பாகப் பார்க்காமல்,பொதுவில் தனக்குத்தானே பேசுவது போல் பேச ஆரம்பித்தார்."இறைவன் படைப்பில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை ஆறு விதமாக உயிர்கள் படைக்கப் பட்டிருக்கின்றன.கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்த நாம் ஆறறிவு உள்ளவர்களாகவா நடந்து கொள்கிறோம்?இம் மதங்களை, சாதிகளை,அதன் பிரிவுகளை,உட்பிரிவுகளை எல்லாம் இறைவனா படைத்தான்?மனிதனே இவற்றையெல்லாம் படைத்து விட்டுத் தான் படைத்த மதத்தின் பெயரால்,இறைவனை முன்னிறுத்திச் சண்டை, சச்சரவு , கலவரங்களில் ஈடுபடுவது அவன் வணங்கும் அந்த இறைவனையே அவமானப் படுத்தும் செயலல்லவா?இரண்டு மதங்களுக்குள்சண்டை,ஒரே மதத்தில் இரு சாதிகளுக்குள் சண்டை,ஒரே சாதிக்குள் உட்பிரிவுகளுக்குள் சண்டை இவையெல்லாம் அறிவற்ற செயலல்லவா?""அனைத்து உயிர்களுக்கும் இறைவன் ஒருவனே.மதங்களால் பிரிந்து வழிபாட்டு முறைகளால் மாறுபட்டாலும்,எல்லோரும் மனிதர்கள் என்னும் ஒரே குலமே.நமக்கு நன்மை நடக்க விரும்பும்போது அதன் காரணமாகப் பிறர்க்குத் தீமை விளைய எண்ணுதல் கூடாது.அவ்வாறு எண்ணுவதால், பகையும் போரும் மூண்டு உயிர்ச்சேதம் ஏற்படும் அல்லவா?எனவே நன்மையே நினைக்க வேண்டும்.தீய செயல் செய்வதற்குத்தான் வெட்கப் பட வேண்டும்.நல்லன எண்ணி நல்லன செய்பவர்கள் வெட்கப் பட ஏதும் இல்லை.எண்ணம்,சொல்,செயல் எல்லாம் நல்லவையாகவே இருக்கட்டும்.எந்த முறையில் வழி பட்டாலும்,பரம்பொருள் ஒருவனே என்பதை உணர்ந்து,அவனையே சிந்தையில் இருத்தி அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால் வாழ்க்கை இனியதாகவே இருக்கும்.உணருங்கள்"

ஞானியார் தியானத்தில் ஆழ்ந்தார்.

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே"----(திருமூலர்)

Tuesday, February 12, 2008

இறைவன் எங்கிருக்கிறான்?

அன்று ஞானியின் முன் வழக்கம்போலப் பலர் கூடியிருந்தனர். அனைவரையும் ஞானி ஒரு முறை பார்த்தார் .நீண்ட நாட்களுக்குப் பின் வந்திருந்த ஒருவனைப் பார்த்துக் கேட்டார்."என்ன,சொக்கா,பல நாட்களாக உன்னைக் காணவில்லை?எங்கு போயிருந்தாய்?"ஞானிக்குத்தெரியும் அவன் எங்கு போயிருந்தான் என்று.ஆயினும் சில விஷயங்களை அவர்களுக்கு உணர்த்துவதற்கு ஒரு வாய்ப்பாக அதைப் பயன் படுத்திக் கொண்டார்.

அவன் சொன்னான் "சாமி,காசி,ராமேச்வரம் இன்னும் பல கோவில்களுக்கெல்லாம் போய் வந்தேன்.எல்லா இடங்களிலும் நல்ல தரிசனம்.எல்லாப் பூசைகளும் செய்து ஆண்டவனை வணங்கினோம்."

ஞானி புன்னகைத்தார்."இறைவனைப் பல ரூபங்களில் பல ஊர்களில் தரிசித்திருக்கிறாய்.திருப்தி அடைந்திருக்கிறாய். ஆனால் உன்னுள்ளேயே இருக்கிறானே அவன்!அதை உணர்ந்திருக்கிறாயா?உன் உடலையும் உயிரையும் சேர்த்து வைத்திருப்பவன்,உன் உடலையே தான் வாழும் நாடாகக் கொண்டவன்,உன் உடலுக்குள்ளேயே மணம் கமழ எழுந்த்ருளியிருக்கும் ஞான குரு அவன்.அதை உணராமல் கோவில் கோவிலாகச் சென்று இறைவனைத் தேடுகிறாய்.அவ்வாறு செல்வது தவறென்று நான் சொல்லவில்லை.ஆனால் உன்னுள் இருக்கும் இறைவனை உணர்ந்து விட்டால் தேடல் நின்று போகும்.உன் உள்ளத்தினுள்ளே அவனைப் பார்.வணங்கு.வேறென்ன வேண்டும்.?"

அவர்களுக்குப் புரிவது போலிருந்தது.

"காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேயெங்குந் தேடித் திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே."-----(திருமூலர்)

Thursday, January 10, 2008

பிறவிப்பயன்!

மானிடராய்ப் பிறத்தல் அரிது என்கிறார் அவ்வையார்.இவ்வரிய மானிடப் பிறவி கிடைத்தவர் பிறவியின் பயனுற வாழ வேண்டாமா?எவ்வாறு?அனைவருக்கும் நல்லன செய்து அல்லன செய்யாது நல்லவராய்,நன்னெறியில் நின்று,புலன்களை வெறித்துதிரிய விடாது வசப்படுத்தி,கற்றுணர்ந்து(கற்பவை கசடறக் கற்று),இறையடிவர்தம் நட்புக் கொண்டு(சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்-பஜகோவிந்தம்),உண்மையே பேசி,இறையன்புடன் வாழ வேண்டும்.

பொல்லாதவன்,நெறி நில்லாதவன்,ஐம்புலன்கள்தமைவெல்லாதவன்,கல்வி கல்லாதவன் மெய்யடியவர் பால்செல்லாதவன்,உண்மை சொல்லாதவன்,நின் திருவடிக்கன்புஇல்லாதவன்,மண்ணிலே பிறந்தேன்! கச்சியேகம்பனே!(பட்டினத்தார்).இங்கு பட்டினத்தார் தம்மைப் பற்றி சொல்லவில்லை.நமக்காகப் பேசுகிறார். கச்சி ஏகம்பன்தான் நமக்கெல்லாம் நல்வழி காட்ட வேண்டும்