Thursday, July 21, 2011

சூனிய சம்பாஷணை-வாழ்க்கைச் சூதாட்டம்

கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பின் மீண்டும் வருகிறேன்.

கடைசிப் பதிவின் தேதி 29-03-2011.

ஏன் இத்தனை பெரிய இடைவெளி என யோசித்துப் பார்க்கிறேன்.

தனியாகக் காரணம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

நான் எழுதவில்லை என்றால் அதற்குக் காரணம் அவன் என்னை எழுத வைக்கவில்லை.

எதையும் செய்ய வைப்பவன் அவன்.செய்யாமல் இருக்க வைப்பவனும் அவனே!

இந்த வாழ்க்கைச் சூதாட்டத்தில்,என் உயிர் ஒரு ஆட்டக்காரன் என்றால் மறைந்திருந்து ஆடும் மற்ற ஆட்டக் காரன் அவன்தானே!

திருமூலர் சொல்கிறார்—

“காயம் பலகை கவறைந்து கண்மூன்றா
ஆயம் பொருவதோர் ஐம்பத்தோ ரக்கரம்
ஏய பெருமா னிருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பறி யேனே”

இதன் பொருள்--

மனித வாழ்க்கை ஒரு பகடை ஆட்டம் போன்றது.இதில் நம் உடல் சூதாட்டப் பலகை. ஐம்புலன்களும் பகடைகள்.முக்குணங்களும் இருந்தாடும் இடங்கள். ஐம்பத்தோரு அக்ஷரங்களும் சூதாட்டப் பலகையின் கட்டங்கள்.இந்த ஆட்டத்தின் நிகழ்வுகளை முடிவு செய்பவன் அவன்.எப்படிப் பகடைகள் போடப் படுகின்றன ,ஆட்டம் எப்படி நடைபெறுகிறது என்பது புரிந்து கொள்ள முடியாத புதிர்.

இங்கு கண் மூன்று என்பதற்கு முக்குணங்களை மட்டும் குறிக்காமல் வேறு பொருள்களையும் குறிப்பதாகக் கொள்வர்.—1)மனம்,புத்தி,அகங்காரம்2)புருவ நடு,கழுத்து, இதயம்(நனவு,கனவு,உறக்கம்) 3)இச்சா,கிரியா,ஞான சக்திகள் 4)அநாகதம்,விசுத்தி,ஆக்ஞா சக்கரங்கள் 5)பைசந்தி,மத்தியமா,வைகரி ஆகிய சப்த நிலைகள்.

(மனதில் ஒட்டும் எண்ணங்களை வாக்கியமாக்கி வெளிக் கொணர்தல் தூல வைகரி எனவும்,வெளியில் சொல்லாமல் மனதுக்குள் இருத்தும்போது அது சூக்கும வைகரி எனவும் சொல்லப்படும்.
சொல் வடிவம் பெறாத ஒரு எண்ணக் கரு, மத்தியமா எனப்படும்.இதை யோக நூல்கள் மயில் முட்டைக்கு ஒப்பிடும்.முட்டையினுள்ளே இருக்கும் கருதான் மயிலாக உருவாகிறது.எனவே வைகரி மயில்;மத்தியமா முட்டை.

இதற்கும் அடிப்படையான,எண்ணம் கருவாவதற்கு முந்தைய நிலையே பைசந்தி.)

”கவறைந்து” என்பது ஐம்புலன்களைக் குறிக்கும்.கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந் திரியங்கள் ஐந்து.(ஞானேந்திரியங்கள் என்பவை, மெய், வாய், கண், மூக்கு, செவி; கர்மேந்திரியங்கள் பாணி, பாதம்,வாக்கு,பாயுரு,உபஸ்தம்-கை, கால், வாய், எருவாய், கருவாய்)

”மறைப்பறியேனே” என்பது எவ்வாறெனில்,சீவன்,சிவன் இரண்டு ஆட்டக் காரர்களில்,சிவன் மறைந்து ஆடுகிறார்.அவர் சீவனுக்குச் சாதகமாக ஆடுகிறாரா அல்லது பாதகமாக ஆடுகிறாரா என்பது தெரிவதில்லை.எனவே சீவனுக் குள்ளேயே மறைந்துள்ள சிவனை சீவன் அறிந்து கொண்டு,சலனமற்று இருத்தல் வேண்டும்(சீவன் என்ன சிவன் என்ன வேறில்லை).ஆட்டத்தின் வெற்றி தோல்விகளால் பாதிக்கப் படாமல் இருக்கும் ஒரு நிலையே அது.சீவன் சிவனை அறிந்துகொள்ளும்போது சீவனும் சிவனும் ஒன்றாகின்றனர்.

Tuesday, March 29, 2011

சூனிய சம்பாஷணை-பார்ப்பான் அகத்திலே

ஓர் ஊரில் ஒரு அந்தணன் இருந்தான்.அவனிடம் ஐந்து கறவைப் பசுக்கள் இருந்தன.நல்ல உயர்ந்த ரகப் பசுக்கள்.நன்கு,அதிகமாகப் பால் தரக்கூடிய பசுக்கள்.ஆனால் அப் பசுக்களை மேய்ப்பதற்கு எந்த விதமான எற்பாடும் அவன் செய்யவில்லை.அப்பசுக்கள் தம் மனம் போல தினமும் எங்கெங்கோ மேய்ந்து திரிந்து பாலைச் சொரிந்து விட்டு வீடு திரும்பி வந்தன . அப்பசுக்களின் பயன் அதன் உரிமையாளனுக்குக் கிடைக்காமல் போயிற்று. அப்பசுக்களைச் சரியான முறையில் தினமும் மேய்ப்பதற்கு அவன் ஏற்பாடு செய்திருந்தால் நல்ல பயன் அடைந்திருப்பான்.அந்தப் பசுக்கள் ஐந்தும் பாலாய்ச் சொரிந்திருக்கும்.

"பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரு முண்டாய் வெறியு மடங்கினால்
பார்ப்பான் பசுவைந்தும் பாலாச் சொரியுமே"--(திருமந்திரம்-2882)

ஆன்மா என்ற பார்ப்பானின் உடலில் ஐம் பொறிகளான கறைவைப் பசுக்கள் ஐந்து உள்ளன.-மெய்,வாய்,கண்,மூக்கு,செவி.அவை மேய்ப்பவர் இன்றி விருப்பம் போல் திரிவன.(புலன்கள் அடக்கப் படாமல் இன்பம் தேடி அலைகின்றன.)புலன் நுகர் பொருட்கள் மீதுள்ள ஆசையை அறுத்து இறைவன் பால் மனத்தைச் செலுத்தினால் பொறிகள் என்ற பசுக்கள் பேரின்பம் என்ற பாலைத் தரும்.

புலனடக்கம் என்பது என்ன?புலன்களின் இயற்கையான இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நிறுத்துவதா?அவ்வாறு அவற்றை அடக்கியே வைத்திருந்தால், அவை வீறு கொண்டு எழும்போது அவற்றைக் கட்டுப் படுத்த முடியாது போகும்.எனவே அவற்றை நெறிப் படுத்த வேண்டும்.இதையே பிரத்தியாகாரம் என்று சொல்வர். எனவே’மேய்ப்பாருமுண்டாய் வெறியுமடங்கினால்’ என்பதற்கு,அடக்கி நிறுத்துவது எனப் பொருள் கொள்ளாமல்,நன்னெறிப் படுத்துவது என்றே கொள்ளல் வேண்டும் .ஏனெனில்,திருமூலரே மற்றோர் இடத்தில் கூறுகிறார்---

“அஞ்சும் அடக்கு,அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை;
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே."

மற்றொரு பாடலில் சொல்கிறார்—

“தானே புலன் ஐந்துந் தன்வச மாயிடும்
தானே புலன் ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன் ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானேதனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே”

இறைவனைச் சரணடைந்தால்,ஐந்து புலன்கள் வழியே செல்லும் மனம்,அவன் வசப்படும்.அப்போது ஐம்புலன்களின் சுவை கெடும்.அந்த ஐம்புலன்களே ஆன்மாவை இறைவழி இட்டுச்செல்லும்.

பார்ப்பான் என்பதற்கு பிரம்மா என்றும்,அகம் என்பது அவன் படைத்த உடல் என்றும் பொருள் கொள்வர்.

அந்தணன் ஒருவனிடம் பசு இருந்தால் அவன் மேய்க்க இயலாதவன்.அதற்கென ஒரு மேய்ப்பவனின் உதவி நாட வேண்டும்.அவ்வாறு செய்யாவிடில் பசுக்கள் இருந்தும் அவனுக்குப் பயனில்லை என்பதால், பார்ப்பான் என்று சொல்லப் பட்டது என்றும் சொல்வர்.

"சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு."-

என்ற திருக்குறள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

Tuesday, February 8, 2011

சூனிய சம்பாஷணை--கூறையுஞ்சோறும்.....

கூறையுஞ் சோறும் குழாயகத் தெண்ணையும்
காறையும் நாணும் வளையலுங் கண்டவர்
பாறையி லுற்ற பறக்கின்ற சீலைபோல்
ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.----மந்திரம்.2893.

ஆடையும்,சோற்றினால் ஆய உடல் வனப்பும் ,குழலில் வைத்த எண்ணெயும், கழுத்தில் அணியும் காறையும், இடை நாணும்,கை வளையலுமாகியவற்றை அணிந்த பெண்ணைக் கண்டு மோகம் கொண்டவர்,பாறை மீது வைத்த ஆடை பறந்து அழுக்குக் குழியில் விழுவது போல்,காமம்,குரோதம்,லோபம்,மோகம், மதம்,மாற்சரியம் ஆகிய ஆறு உட்பகைகளால் கெடுவர்.

இங்கு ‘பாறையிலுற்ற பறக்கின்ற சீலை போல்’என்பதற்கு,பாறை மீது வைத்த ஆடை பறப்பது” என்று பொருள் கொள்ளப் படுகிறது.ஆனால்,இவ்வாறு அழகு படுத்தப் பட்ட பெண்,ஒரு கற்பாறைக்குப் புடவை சுற்றியது போல் இருக்கிறாள்;எவ்வாறு புடவை சுற்றிய கற்பாறை எந்த இன்பமும் கொடுக்காதோ,அதே போல் அந்தப் பெண்ணும் ஆன்மாவுக்கு இன்பம் தர மாட்டாள்,என்று மற்றொரு பொருளும் சொல்லப் படுகிறது.

ஆனால் சூனிய சம்பாஷணை என்ற தலைப்பில்,குறியீட்டு மொழி இல்லாமல் ஒரு பொருளைப் பற்றித் திருமூலர் சொல்வாரா?எனவே வேறு விதமாக யோசித்தால் தோன்றுவது---

கூறை எனபது,உடலைப் போர்த்திய தோல்.

சோறு என்பது சதை.(கத்தாழைக்குள் சோறு இருப்பது போல்)-

குழாயகத்தெண்ணை என்பது எலும்பு நரம்புகள்,குருதி-குழாய்-எலும்பு,நரம்பு;எண்ணெய்-குருதி

காறை,நாண் வளையல்-கழுத்து,இடை,கை போன்ற உடல் உறுப்புகள்.

மொத்தமாகக் குறிக்கப்படுவது.அழியும் இந்த உடல்.

இந்த உடலின் மேல் விசேட கவனம் செலுத்திப் போற்றிப் பாதுகாத்து, உடலில் உள்ள புலன்களின் மயக்கத்தால்,இந்த உடலிலுறை ஆன்மாவை மறப்பவர்கள், மீண்டும் பிறவிக் குழியில் வீழ்வர்!(ஆறைக்குழி என்பது பிறவிக் குழியைக் குறிக்கும் எனக் கொள்ளலாம்.) இது எனக்குத் தோன்றிய பொருள்.

திருக்குறளில் ’எச்சத்தால்’ என்பதை ‘மக்களால் என்று மாற்றிய பாதிரியார் போல் என் கருத்துத் தவறாகக் கூட இருக்கலாம்.ஆனால் சித்தர்களின் குறியீட்டு மொழியின் பொருளுக்கு எல்லை ஏது?

திருமூலர் என்ன நினைத்தாரோ!

Tuesday, February 1, 2011

சூனிய சம்பாஷணை-வழுதலை வித்திட...

திருமந்திரத்தின் ஒன்பதாவது தந்திரத்தில்,’சூனிய சம்பாஷணை
என்று ஒரு பகுதி உள்ளது.இதில் மொத்தம் எழுபது பாடல்கள் (மந்திரங்கள்) உள்ளன. எளிதில் பொருள் விளங்காத குறியீட்டு மொழியில் இப்பாடல்கள் அமைந்துள்ளன. இம்மந்திரங்களின் கருத்து இதுதான் என்று வரையறுக்கமுடியாதபடி அவை அவரவர் அனுபவத்துக்குத் தக்க வெவ்வேறு பொருள்களைக் கொண்டுள்ளன. சூனியம் என்பது ஒன்றும் இல்லாதது.இங்கு இதுதான் பொருள் என்று வரையறுக்க முடியாத நிலையைக் குறிக்கிறது.சித்தர்களின் குறியீட்டு மொழி புரிவது கடினம்.இங்கு நான் புரிந்துகொண்டு எழுதுகிறேன் என்று சொன்னால் அது பொய்.அந்த அளவுக்குப் பக்குவமும் ஞானமும் எனக்கில்லை.பல உரைகளில் படித்ததை அடிப்படையாகக் கொண்டே இதை எழுதுகிறேன். இதைப் படிக்கும் உங்களுக்குப் புதிய கருத்துக்கள் தோன்றலாம்.வேறு சில விளக்கங்கள் படித்திருக்கலாம்.அவ்வாறெனில் தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

இங்கு நான் சில பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளேன்.ஒரு சிறிய முயற்சி.
மந்திரம்.2868.
”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.”

இதை அப்படியே பொருள் கொண்டால்” தோட்டத்தில் புழுதியைத் தோண்டினேன்.அக்குழியில் கத்தரிக்காய்(வழுதல்) விதை விதைத்தேன்.அதிலிருந்து பாகற்கொடி படர்ந்தது.அதில் பூசணி பூத்தது.அதைக் கண்ட,அங்கிருந்த தோட்டக் குடிகளெல்லாம் பயந்து,தம் சிறு தெய்வங்களைத் தொழுது கொண்டு ஓடினார்கள்.அதன் பின் அக்கொடியில் வாழைக்கனி முற்றிலுமாகப் பழுத்தது”

நேரடியாகப் பார்த்தால் பொருளற்ற ஒரு பாடல்.ஆனால் அறிஞர்கள் இதன் கருத்தை அனுபவ பூர்வமாக விளக்கும்போது வியப்பாக இருக்கிறது. நடக்கமுடியாத ஒரு நிகழ்ச்சி மூலம் தத்துவங்கள் விளக்கப் படுகின்றன..

இங்கு தோட்டம் என்பது நமது உணர்வாகிய நெஞ்சக் கமலம். புழுதியைத் தோண்டுதலாவது,அவ்வுணர்வுகளைப் பயந்து வரும் தத்துவங்களின் இயல்பை ஆராய்ந்து காணுதல்.வழுதலை வித்திடல் என்பது ஐந்தெழுத்தை உள் ஊன்றி நிறுத்துதல்.பாகல் என்பது நிலையில்லாப் பொருள்களில் பற்றற்று இருத்தல்.பூசனி பூத்தது என்பது திருவருள் விளக்கம்.தோட்டக் குடிகள் என்பது நம் அஞ்ஞானம்.வாழை பழுத்தது என்பது இறை அருட்பேறு.

இதையே வேறு முறையில் காணும்போது இவ்வாறு கொள்ளப் படுகிறது...... வழுதலை வித்திடல்-குண்டலினி யோகப் பயிற்சி;பாகல் முளைத்தது-வைராக்கியம் கிடைத்தது;புழுதியைத் தோண்டினேன்-ஆன்மா பற்றிய தத்துவ விசாரம்;பூசனி பூத்தது-சிவ தத்துவத்தைத் தெரிந்து கொள்ளல்;தோட்டக் குடிகள் ஓடினர்-புலனுணர்வுகள் அகலுதல்;பழுத்தது வாழைக்கனி--சிவானுபவம் கிட்டல்.

குண்டலினி யோகமாவது,மூலாதரத்தில் உறங்கும் சக்தியை மேலேற்றி சஹஸ்ராரத்தை அடையச் செய்தல்......சிற்றின்பத்தில் செலவிடும் சுக்கிலத்தை மூலக்கனல் ஆக்கிப் புருவ மத்தியாகிய ஆக்ஞைக்கு ஏற்ற,அங்கு தோன்றும் அருட்சக்தி அருளால், தத்துவப் பிணிப்பு நீங்கி உணர்வுகள் தூய்மை அடைந்து, சஹஸ்ராரம் அடைகிறது.சீவ கரணங்கள்,சிவ கரணங்களாகி சிவானுபவம் விளைகிறது.

வேறு விதமாகச் சொன்னால்...வழுதல் என்பது துறவையும்,பாகல் என்பது உலக மறுப்பையும்,பூசனி என்பது சிவபெருமானையும், தோட்டக் குடிகள் என்பது,ஐம்புலன்களையும்,மும்மலங்களையும்,வாழை பழுத்தல் என்பது முத்தியையும் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

சித்தர்களின் கருத்தை யாரால் அறிந்து கொள்ள முடியும்?