Tuesday, February 1, 2011

சூனிய சம்பாஷணை-வழுதலை வித்திட...

திருமந்திரத்தின் ஒன்பதாவது தந்திரத்தில்,’சூனிய சம்பாஷணை
என்று ஒரு பகுதி உள்ளது.இதில் மொத்தம் எழுபது பாடல்கள் (மந்திரங்கள்) உள்ளன. எளிதில் பொருள் விளங்காத குறியீட்டு மொழியில் இப்பாடல்கள் அமைந்துள்ளன. இம்மந்திரங்களின் கருத்து இதுதான் என்று வரையறுக்கமுடியாதபடி அவை அவரவர் அனுபவத்துக்குத் தக்க வெவ்வேறு பொருள்களைக் கொண்டுள்ளன. சூனியம் என்பது ஒன்றும் இல்லாதது.இங்கு இதுதான் பொருள் என்று வரையறுக்க முடியாத நிலையைக் குறிக்கிறது.சித்தர்களின் குறியீட்டு மொழி புரிவது கடினம்.இங்கு நான் புரிந்துகொண்டு எழுதுகிறேன் என்று சொன்னால் அது பொய்.அந்த அளவுக்குப் பக்குவமும் ஞானமும் எனக்கில்லை.பல உரைகளில் படித்ததை அடிப்படையாகக் கொண்டே இதை எழுதுகிறேன். இதைப் படிக்கும் உங்களுக்குப் புதிய கருத்துக்கள் தோன்றலாம்.வேறு சில விளக்கங்கள் படித்திருக்கலாம்.அவ்வாறெனில் தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

இங்கு நான் சில பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளேன்.ஒரு சிறிய முயற்சி.
மந்திரம்.2868.
”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.”

இதை அப்படியே பொருள் கொண்டால்” தோட்டத்தில் புழுதியைத் தோண்டினேன்.அக்குழியில் கத்தரிக்காய்(வழுதல்) விதை விதைத்தேன்.அதிலிருந்து பாகற்கொடி படர்ந்தது.அதில் பூசணி பூத்தது.அதைக் கண்ட,அங்கிருந்த தோட்டக் குடிகளெல்லாம் பயந்து,தம் சிறு தெய்வங்களைத் தொழுது கொண்டு ஓடினார்கள்.அதன் பின் அக்கொடியில் வாழைக்கனி முற்றிலுமாகப் பழுத்தது”

நேரடியாகப் பார்த்தால் பொருளற்ற ஒரு பாடல்.ஆனால் அறிஞர்கள் இதன் கருத்தை அனுபவ பூர்வமாக விளக்கும்போது வியப்பாக இருக்கிறது. நடக்கமுடியாத ஒரு நிகழ்ச்சி மூலம் தத்துவங்கள் விளக்கப் படுகின்றன..

இங்கு தோட்டம் என்பது நமது உணர்வாகிய நெஞ்சக் கமலம். புழுதியைத் தோண்டுதலாவது,அவ்வுணர்வுகளைப் பயந்து வரும் தத்துவங்களின் இயல்பை ஆராய்ந்து காணுதல்.வழுதலை வித்திடல் என்பது ஐந்தெழுத்தை உள் ஊன்றி நிறுத்துதல்.பாகல் என்பது நிலையில்லாப் பொருள்களில் பற்றற்று இருத்தல்.பூசனி பூத்தது என்பது திருவருள் விளக்கம்.தோட்டக் குடிகள் என்பது நம் அஞ்ஞானம்.வாழை பழுத்தது என்பது இறை அருட்பேறு.

இதையே வேறு முறையில் காணும்போது இவ்வாறு கொள்ளப் படுகிறது...... வழுதலை வித்திடல்-குண்டலினி யோகப் பயிற்சி;பாகல் முளைத்தது-வைராக்கியம் கிடைத்தது;புழுதியைத் தோண்டினேன்-ஆன்மா பற்றிய தத்துவ விசாரம்;பூசனி பூத்தது-சிவ தத்துவத்தைத் தெரிந்து கொள்ளல்;தோட்டக் குடிகள் ஓடினர்-புலனுணர்வுகள் அகலுதல்;பழுத்தது வாழைக்கனி--சிவானுபவம் கிட்டல்.

குண்டலினி யோகமாவது,மூலாதரத்தில் உறங்கும் சக்தியை மேலேற்றி சஹஸ்ராரத்தை அடையச் செய்தல்......சிற்றின்பத்தில் செலவிடும் சுக்கிலத்தை மூலக்கனல் ஆக்கிப் புருவ மத்தியாகிய ஆக்ஞைக்கு ஏற்ற,அங்கு தோன்றும் அருட்சக்தி அருளால், தத்துவப் பிணிப்பு நீங்கி உணர்வுகள் தூய்மை அடைந்து, சஹஸ்ராரம் அடைகிறது.சீவ கரணங்கள்,சிவ கரணங்களாகி சிவானுபவம் விளைகிறது.

வேறு விதமாகச் சொன்னால்...வழுதல் என்பது துறவையும்,பாகல் என்பது உலக மறுப்பையும்,பூசனி என்பது சிவபெருமானையும், தோட்டக் குடிகள் என்பது,ஐம்புலன்களையும்,மும்மலங்களையும்,வாழை பழுத்தல் என்பது முத்தியையும் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

சித்தர்களின் கருத்தை யாரால் அறிந்து கொள்ள முடியும்?

9 comments:

வே.நடனசபாபதி said...

// நான் புரிந்துகொண்டு எழுதுகிறேன் என்று சொன்னால் அது பொய்.அந்த அளவுக்குப் பக்குவமும் ஞானமும் எனக்கில்லை.//
தன்னடக்கத்தின் காரணமாக எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன் திரு மதுரை சொக்கன் அவர்களே!
விளக்கம் மிக அருமை. நான் அடிக்கடி சொல்வதுபோல 'ஆரம்பமே இப்படியென்றால் அடுத்தது எப்படியோ?'
வர இருக்கின்ற பதிவுகளை படிக்க ஆவலோடு இருக்கிறேன்.

எல் கே said...

தொடர்ந்து எழுதுங்கள். இதை பற்றி விமர்சிக்கும் அளவு எனக்கு இன்னும் அனுபவம் இல்லை. கற்றுக் கொள்கிறேன்

மதுரை சொக்கன் said...

நடனசபாபதி அவர்களே,சூனிய சம்பாஷணைப் பாடல்களை, உரையாசிரியர்கள் துணையின்றி நாமாகவே புரிந்து கொள்வது என்பது மிகக் கடினம்.அதைத்தான் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி!

மதுரை சொக்கன் said...

எல் கே said...
// தொடர்ந்து எழுதுங்கள். இதை பற்றி விமர்சிக்கும் அளவு எனக்கு இன்னும் அனுபவம் இல்லை. கற்றுக் கொள்கிறேன்//
அனுபவம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அறிவு நிச்சயம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். நானும் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.
தொடர்ந்து எழுத உங்கள் வாழ்த்துகள் உதவும்.
நன்றி!

அப்பாதுரை said...

நல்ல முயற்சி.
இதைப் படித்து எனக்குத் தோன்றியதைப் பின்னூட்டமிடலாமா?

மதுரை சொக்கன் said...

அப்பாதுரை said...
நல்ல முயற்சி.
//இதைப் படித்து எனக்குத் தோன்றியதைப் பின்னூட்டமிடலாமா?//
என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? என் மீது ஏதும் தவறிருந்தால்,நான் எழுதியதில் பிழையிருந்தால், சுட்டிக்காட்டுங்கள்,தெளிவு படுத்துங்கள்!என்னைத் திருத்திக் கொள்ள ,மேம்படுத்திக் கொள்ள உதவும். பாடலில் புதிய பொருள், கருத்துத் தோன்றினால், சொல்லுங்கள். அனைவருக்கும் பயன்படும்.
காத்திருக்கிறேன் அப்பாதுரை அவர்களே!

அப்பாதுரை said...

அடடா.. சரியாப் போச்சு போங்க! தவறோ பிழையோ இருப்பதாக நான் மனதில் துளிக்கூட நினைக்கவில்லையே. மன்னியுங்கள். நீங்கள் எழுதியிருப்பதைப் படித்து ரசித்தேன். சித்தர் பாடல்களில் எனக்கும் ஆர்வம் உண்டு; நீங்கள் சொல்லியிருப்பது போல் பரிபாஷை என்றே எனக்கும் தோன்றும். தொடர்ந்து படித்து எனக்குத் தோன்றியதை நானும் பின்னூட்டம் இடலாமா என்று தோன்றியது - எண்ணியதைத் தெளிவாக எழுதாதது என் பிழையே.

மதுரை சொக்கன் said...

அப்பாதுரை said...
// தொடர்ந்து படித்து எனக்குத் தோன்றியதை நானும் பின்னூட்டம் இடலாமா என்று தோன்றியது - எண்ணியதைத் தெளிவாக எழுதாதது என் பிழையே.//
பிழையேதும் உங்கள் மீதில்லை ஐயா!நான் பொதுவாகத்தான் எழுதினேன்.”பாடலில் புதிய பொருள், கருத்துத் தோன்றினால், சொல்லுங்கள். அனைவருக்கும் பயன்படும்.
காத்திருக்கிறேன்” என்றும் எழுதியிருக்கிறேன் அல்லவா?நிச்சயமாக உங்களிடமிருந்து பொருள் செறிந்த பின்னூட்டங்களை எதிர் பார்க்கிறேன்.(முதலில் நான் தொடர்ந்து எழுத வேண்டுமே!அதற்கு வாழ்த்துங்கள்!)

Sivamjothi said...

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4(PART-2)
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)

Online Books(Tamil- சாகாகல்வி )
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454