Friday, August 7, 2009

அம்மாவை வணங்காது உயர்வில்லயே !

உறவுகள் அனைத்திலும் உயர்ந்த உறவு,தாய் என்ற உறவு. தாய்ப் பாசம் என்பது சன்னியாசியையும் விடுவதில்லை. தனது தாயின் மரணத்தை எண்ணிக் கலங்கி ஐந்து ஸ்லோகங்களால் தன் மன உணர்வுகளை வெளியிடுகிறார் ஜகத்குரு ஆதிசங்கரர்.நம்மையும் கலங்கச்செய்கிறார்.அந்த ஸ்லோகங்களின் தமிழாக்கம் இதோ:-

ஸ்லோகம்-1

எனது தாயார் என்னைக் கர்ப்பத்தில் வைத்து ஒவ்வொரு நிமிஷமும் என்னைத் தாங்கும் போது பட்ட கஷ்டத்துக்கு நான் பிரதியுபகாரம் ஏதாவது செய்திருக்கிறேனா?

அது இருக்கட்டும்.பிரசவ சமயத்தில்,போக்க முடியாததும்,பொறுத்துக் கொள்ள முடியாததுமான சூலைவலி என்கிற கொடுமையான ஒரு வலிக்கு நான் பதில் உபகாரம் செய்திருக்கிறேனா?

அதுவுமிருக்கட்டும்.என்னைப் பெற்றதும்,என்னை ரட்சிக்க ருசியில்லாத பொருட்களைச் சாப்பிட்டு வாழ்ந்த என் தாய்க்கு ஏதாவது செய்திருக்கிறேனா?

தனது உடலை இளைக்கச் செய்தும்,தூக்கமில்லாமலும்,எனது மலத்திலேயே படுத்து ஓராண்டு என்னை காத்த தாயாருக்கு ஏதாவது செய்திருக்கிறேனா?

யாராலும் தாய்க்குப் பிரதியுபகாரம் செய்ய முடியாது.எனவே அம்மா, உனக்கு நமஸ்காரம் செய்கின்றேன்,ஏற்றுக்கொள்.

ஸ்லோகம்-2

நான் கல்வி கற்கச் சென்றிருந்த சமயம்,தன்னை மறந்து தூங்கிய தாங்கள் நான் சன்னியாசியானதுபோல் கனவு கண்டு,அழுதவண்ணமாய் குருகுலம் வந்து கதறி,அங்கிருந்த எல்லோரையும் கதறி அழச்செய்த என் அம்மா,உனக்கு நமஸ்காரம்.

ஸ்லோகம்-3

அம்மா! நீ முக்தியடையும் சமயத்தில் கொஞ்சம் நீராவது உன் வாயில் விட்டேனா?பிறகும் ச்வதா மந்திரத்தினால் ச்ராத்தம்,தர்ப்பணமாவது செய்தேனா?உனது முக்தி சமயத்தில் தாரக மந்திரமாவது உன் காதில் ஓதினேனா?அச்சமயம் எனக்குக் கிடைக்காமலும்,எதுவும் செய்ய அதிகாரமில்லாததாலும்,சன்னியாசியானதால் எந்த வைதீகமும் கடைப் பிடிக்க முடியாது போனதால்,மனம் தவிக்கின்ற உன் மகனான என்னிடம் தயவு செய்ய வேண்டுமம்மா!உனது சரண கமலத்தைப் பிடித்து வேண்டுகிறேன்.

ஸ்லோகம்-4

அம்மா! என்னைக் காணும்போதெல்லாம் என் முத்தே கண்ணே,ராஜா, சிரஞ்சீவியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி,என்னிடம் கருணை, அன்பு, தயைகலந்த அமுதமான சொற்களால் என்னைச் சீராட்டி,,பாலூட்டி,தாலாட்டி வளர்த்த என் அன்னைக்கா வேகாத அரிசியை வாயிலே சமர்ப்பிப்பேன்?இதைப் பொறுக்க முடியவில்லையே! அம்மா நீயே சரண்.

ஸ்லோகம்-5

அம்மா,என்னைப் பெற்றபோது பொறுக்க முடியாத வேதனையுடன் அம்மா!அப்பா!சிவபெருமானே!கிருஷ்ணா!கோவிந்தா,ஹரே முகுந்தா என்றழைத்த வாக்கோடு கூடிய என் கருணைத் தெய்வமே!என் இரு கைகளையும் தூக்கி உனக்கு அஞ்சலி செய்து,உன்னைச் சரணடைகிறேன்.

Tuesday, July 7, 2009

குரு பூர்ணிமா

இன்று குரு பூர்ணிமா.வியாச பூர்ணிமா என்றும் அழைக்கப்படும் தினம்.இன்று நமது குருவுக்கு நன்றி தெரிவித்து அவருக்கு மரியாதை செய்தல் வேண்டும்.

ஒருவருக்கு நல்ல குரு வாய்ப்பதும் அந்தச் சிவகுரு அருளே.

எல்லோரும் பால் பிரண்டன் போல் அதிர்ஷ்டசாலிகள் அல்ல.அவர் தம் குருவைத்தேடும் காலத்துக் காஞ்சி மகாப் பெரியவரே உன் குரு திருவண்ணாமலையில் இருக்கிறார் என்று ரமண மகரிஷியிடம் அனுப்பி வைத்தார்.

இன்றைய அவசர வாழ்க்கையில்,இன்ஸ்டண்ட் காஃபி போல்,உடனடியாக ஆன்மிக முன்னேற்றம் எற்பட உதவக் கூடிய குருவாகத்தேடிப் பிடித்து,அவரிடம் சரண் அடைகிறோம்.அவர் நமது உண்மையான ஆன்மிக முன்னேற்றத்துக்கு உதவக்கூடியவரா,சரியான பாதையில் நம்மை நடத்திச் செல்லகூடியவரா என ஆராயாமல் கவர்ச்சியில் மயங்கி விடுகிறோம்.அதன் பலன்---?

திருமூலர் சொல்கிறார் கேளுங்கள்.

“குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்

குருடுங் குருடுங் குழிவிழு மாறே

எளிதாகப் புரிகிறதல்லவா?

Thursday, March 5, 2009

அட்டாங்க யோகம்

ஸ்வாமி ஓம்கார் அவர்கள் தமது பதிவில் ‘அட்டாங்க யோகம்பற்றி மிக எளிய முறையில் அனைவருக்கும் புரியும்படி விளக்கியுள்ளார்கள்.அதைப் படித்ததும் திருமூலர் அட்டாங்க யோகம் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்தேன்.திரு மந்திரத்தில் சொல்லப்பட்ட சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

“இயம நியமமே எண்ணிலா ஆதனம்

 நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்

 சயமிகு தாரணை தியானஞ் சமாதி

 அயமுறும் அட்டாங்க மாவது மாமே.

 

இயமம்,நியமம்,கணக்கற்ற ஆதனம்,நலம் தரும் பிராணாயாமம், பிரத்தியாகாரம்,வெற்றி மிகுந்த தாரணை,தியானம்,சமாதி ஆகியவை பிறப்பறுக்கும் வாயிலாகிய ஞானத்தைப் பயக்கும்.

 

இயமம்

 

  புலன்களினால் விளையும் இன்பம் நிலையற்றெதென உணர்ந்து,தீயவற்றில் மனம் செல்லாது கட்டுப் படுத்துதல்.

 

“கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்

 நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய

 வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்

 இல்லானியமத் திடையில்நின் றானே.

 

ஓருயிரையும் கொல்லாதவன்,பொய் சொல்லாதவன், திருடாதவன், பிறரால் மதிக்கப்படும் குணம் உடையவன், நல்லவன், அடக்கமுடையவன்,நடுநிலை தவறாதவன், பகிர்ந்துண்பவன்,குற்றமற்றவன்,கள்ளுண்ணாதவன்,காமம் இல்லாதவன், ஆகிய இந்த இலக்கணக்கங்கள் உடையவனே இயமத்தான்.

 

இது போலவே ஹடயோகப் பிரதீபிகையும் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

“அஹிம்சா,சத்யமஸ்தேயம்,ப்ரம்மசர்யம்,க்‌ஷமா,தூதி:

 தயார்ஜவம்,மிதாஹார:,சௌசம்,சைவ யமா தச.

 

கொல்லாமை, வாய்மை,கள்ளாமை,காமமின்மை, பொறையுடமை உறுதியுடமை,தயை,நேர்மை,குறைவாக உண்ணல்,தூய்மை இப்பத்தும் இயமம்.

 

நியமம்

விதிமுறைகளை வழுவாதொழுகுதல்.

 

“தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்

 சிவன்றன் விரதமே சித்தாந்தக்- கேள்வி

 மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீ ரைந்து

 நிவம்பல செய்யின் நியமத்தனாமே.

 

நியமத்தினை மேற்கொள்பவன்,தவம்,செபம்,மகிழ்ச்சி, தெய்வநம்பிக்கை,கொடை,முப்பொருள் உண்மை கேட்டல்,வேள்வி,சிவபூசை,ஒளி பொருந்திய சிவஞானமெனக் கூறப்பட்ட பத்தையும் உயர்வாய்க் கடைப் பிடிக்க வேண்டும்.

(முப்பொருள்-பதி,பசு,பாசம்)

 

பிற பின்னர்

 

Wednesday, February 11, 2009

நான் கடவுள்(அஹம் பிரஹ்மாஸ்மி)

வேதாந்த வாக்கியங்கள் நான்கு, மகா வாக்கியங்கள் என்று அழைக்கப் படுகின்றன.வேதாந்தம் என்பது வேதத்தின் அந்தம்,முடிவு.இவையே உபநிடதங்கள்.

ஐதரேய உபநிடதத்தில் காணப்படும் வாக்கியம்-”பிரஞ்ஞானம் பிரம்ம” என்பது.

பிருகதாரண்ய உபநிடதத்தில்காணப்படும் வாக்கியம்-”அஹம் பிரஹ்மாஸ்மி(பிரம்மைவாஹம் அஸ்மி)” என்பது.

சாந்தோக்கிய உபநிடதத்தில் சொல்லப்படும் வாக்கியம்-”தத்துவம் அஸி” என்பது.

மாண்டூக்ய உபநிடத்தில் வரும் வாக்கியம்-”அயமாத்மா பிரஹ்ம” என்பது.

எளிய முறையில் பொருள் சொன்னால்- 1)மெய்யுணர்வே பிரம்மம்(கடவுள்) 2)நான் கடவுள் 3)நீ அதுவாக இருக்கிறாய். 4)இந்த ஆத்மா பிரம்மன்.

இவை அனைத்தும் ஒரே பொருளையே உணர்த்துவன. நமக்குள்ளேயே கடவுள் இருப்பதை குறிக்கின்றன.

குரு சீடனுக்கு உணர்த்துகிறர்-த்வம்(நீ),தத்(அது),அஸி (இருக்கிறாய்).

இதை சீடன் உணர்ந்த நிலைதான் –அஹம் பிரஹ்மாஸ்மி.

தற்சமயம் மிகவும் பிரபலமாக இருக்கும் வாக்கியம்.

தன்னுள் இருக்கும் சிவனை உணரும்போது இந்த சீவன் சிவனாகிறான்.அதுவே அத்வைதம். இது பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார்? இதோ ஒரு மீள் பதிவு- இரண்டல்ல(அத்வைதம்)

அவன் மிகவும் களைத்திருந்தான்.பல நாட்களாய் அலைந்து உடலும் தேடலுக்கு விடை கிடைக்காமல் மனமும் சோர்ந்திருந்தான்.கையில் பணமில்லாததால் இரண்டு நாட்களாக ஒன்றும் உண்ணாமல் துவண்டிருந்தான்.ஊர் ஊராய் ஒவ்வொரு கோவிலாய் இறைவனைத் தேடித் தேடி அலுத்திருந்தான்.அந்த ஊர் கோவிலில் தெய்வம் சக்தி நிறைந்தது, இந்த ஊர்க் கோவிலில் இறைவன் விசேடமானவர் என்றெல்லாம் ஒவ்வொருவர் சொல்வதையும் கேட்டு ஒவ்வொரு ஊராய் அலைந்து அவன் தேடும் கடவுளைக்காணாமல் ஏமாற்றம் அடைந்திருந்தான்.இப்போது அந்தக் கிராமத்தின் ஆள் அரவமற்ற ஆற்றங்கரைக் கோவில் வாசலில் பசியின் காரணமாக கண்கள் இருண்டு மயக்கமடைந்து கீழே விழுந்தான்.
தன் முகத்தில் விழுந்த நீரின் குளிர்ச்சியில் அவன் கண் விழித்தான்.எதிரே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.அரையில் ஒரு துண்டு,தலையில் முண்டாசு,கையில் ஒரு கோல்.சிறுவனைப்பார்த்த அவன் முனகினான்"பசி".சிறுவன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த சில பழங்களை அவனிடம் நீட்டினான்.பழங்களைத்தின்று சிறிது பசியாறிய அவன் சொன்னான்"கடவுள் மாதிரி வந்து காப்பாற்றி விட்டாயப்பா".சிறுவன் கேட்டான் "என்னங்க ஆச்சு?"அவன் சொன்னான்"கடவுளைத்தேடி ஊர் ஊராய் சுற்றினேன்.காண இயலவில்லை."

சிறுவன் சிரித்தான்"இப்பதான் என்னைப்பார்த்து கடவுள் மாதிரின்னு சொன்னீங்க.அப்ப எங்கிட்ட கடவுள் இருந்தா ,எல்லார் கிட்டயும் இருக்கணும்,உங்க கிட்டயும் இருக்கணும்.ஆனால் கடவுளைத்தேடி ஊரெல்லாம் அலஞ்சேனு சொல்றீங்களே.சிரிப்புதான் வருது சாமி"

அவனுக்குப் பளார் என்று அறைந்தது போல் இருந்தது.கண்களை மூடித்திறந்தான்.சிறுவனைக் காணவில்லை.உண்மை உணர்ந்தான்.தான் வேறு கடவுள் வேறில்லை என்பதை உணர்ந்தான்.பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி புலன்களைக்குவித்து உள்ளே இருக்கும் கடவுளோடு ஒன்றினான்."அஹம் ப்ரம்ஹாஸ்மி"

"சீவன் என்ன சிவனார் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரைஅறிகிலர்
சிவனார் சிவனாரைஅறிந்த பின்
சீவனார் சிவனாயிட்டிருப்பரே"-(திருமூலர்)