Friday, August 24, 2007

அறம்

அவர்கள் காத்திருந்தனர்,ஞானியார் தியானத்தினின்று விழிப்பதற்கு.இப்போதெல்லாம் இதே வாடிக்கையாகப்போய் விட்டது.-அவர் தியானம் கலைந்து விழித்தவுடன் தங்கள் குறைகளை,கேள்விகளை அவர்முன் வைத்து, அவரது பதிலைப்பெற்று அமைதி அடைவது.ஏனென்றால் கண் விழித்த சிறிது நேரத்திலேயே ஞானி மீண்டும் ஞானத்தில் ஆழ்ந்து விடுவார்.அந்த சில மணித்துளிகளுக்காக மக்கள் காத்திருக்கத் தொடங்கினர்.
ஞானி கண் விழித்தார்.அனைவரையும் ஒரு முறை கனிவோடு நோக்கினார்.அவர் பார்வை ஒருவன் மீது நின்றது.அவன் அவரை வணங்கிக் கேட்டான்"சாமி,கடவுளை எப்படி வழிபடுவதுன்னே எனக்குத் தெரியலை.பெரிசா பூசை செய்யவோ படையல் வைக்கவோ என்னால முடியாது.நான் என்ன செய்யணும் சாமி?"
"இறைவனை வழிபடுவதற்கு எந்த நியதியும் இல்லையப்பா.இதில் ஆடம்பரம் தேவையில்லை.நான் என்ற சிந்தையற்று ஆழ்ந்த பக்தியுடன்,உள்ளம் நிறை அன்புடன் ஒரு இலையைப்போட்டு வணங்கு.வில்வமோ,துளசியோ ஏதாவது ஒன்று.அவன் திருப்தி அடைவான்.உன் பூசையை ஏற்றுக்கொள்வான்"-ஞானி பதிலளித்தார்.
அவர் அடுத்தவனைப் பார்த்தார்.அவன் கேட்டான்"சாமி, நான் அதிக வசதியில்லாதவன்.தருமம் செய்யணுன்னு ஆசை இருக்கு.ஆனால் கொஞ்சமா ஏதாவது செஞ்சா எல்லாம் கேலி செய்வாங்களோன்னு பயமா இருக்கு. நான் என்ன செய்ய சாமி?"
அவர் பதில் அளித்தார்"உனக்கு நல்ல மனது இருக்கிறது.ஈதல் என்பது பெரிதாக இருக்க வேண்டியதில்லை.நேற்று நீ இங்கு வரும்போது எதிர்ப்பட்ட ஒரு பசுவுக்கு ஒரு வாய் புல் அளித்தாயே அதுவும் ஒரு தருமம்தான்.நீ உண்ணும் உணவில் சிறிது பசித்தவருக்குவழங்கினால் அது அறம்.உண்ணும் முன் காக்கைக்குச் சிறிது அன்னமிட்டால் அதுவும் தருமம்தான்."
அவர் பார்வை பட்ட அடுத்தவன் கேட்டான்"இதெல்லாம் கூட முடியலென்ன என்ன செய்ய"கொஞ்சம் இடக்குப் பிடித்த அவனது கேள்வியைச் செவியுற்று அவர் புன்னகைத்தார்."ஊரில எல்லோரும் உன்னை மிகவும் கோபக்காரன் என்று சொல்கிறார்கள்.பல நேரங்களில் நானே கவனித்திருக்கிறேன்,இனிமையாகப் பேசாமல் சுடு சொற்களையே பேசுவதை.அதை விடுத்து அனைவரிடமும் இன்சொற்கள் பேசுவாயாகில் அதுவே சிறந்த அறம்தான்-முகத்தானமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம் இன் சொலினதே அறம்."
இதைச் சொல்லிவிட்டு ஞானி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்.
"யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க் கின்னுரை தானே"-----(திருமூலர்)

Tuesday, August 21, 2007

யாக்கை நிலையாமை

அந்த வீட்டுப் பெரியவர் வாழ்வின் கடைசிக்கட்டத்தில் இருந்தார்.மருத்துவர்கள் கூறி விட்டனர்,இன்றிரவோ
நாளையோ,என்று.பெரியவரின் மகன்கள்,மகள்கள்,மற்றும் நெருங்கிய உறவினர்கள் வந்து விட்டனர்.வீடு முழுவதும் சோகம்
நிறைந்திருந்தது.தவிர்க்க முடியாத ஒரு முடிவை எதிர் நோக்கி
அனைவரும் காத்திருந்தனர்.
மறு நாள் விடிந்தது.பெரியவர் வாழ்வும் முடிந்தது.வீட்டிலிருந்து
உரத்த அழு குரல்கள் எழுந்தன.ஓலமும் ஒப்பாரியும் வெளிப்பட்டது.
இறுதி யாத்திரைக்கான எற்பாடுகள் செய்யப்பட்டன.சில காரணங்களால்
எற்பாடுகள் தாமதமாகின.அந்த வீதியில் வசிக்கும் ஒரு முக்கிய நபர்
பொறுமை இழந்தவராக விசாரித்துக் கொண்டிருந்தார்."நேரமாகுதில்லே.
பொணத்த எப்ப எடுக்கப்போறாங்க?"இதே நபர் முன் தினம் விசாரித்துக் கொண்டிருந்தார்"முருகேசன்(பெரியவரின் பெயர்) எப்படிப்பா இருக்கான்.ரொம்ப நல்லவன்."
சிறிது நேரம் சென்று இறுதி யாத்திரை தொடங்கியது.ஆண்கள் சுடு
காட்டுக்குச் சென்றனர்.உடல் தகனம் செய்யப்பட்டது.அனைவரும் குளித்து வீடு திரும்பினர்.வீட்டில் இருந்த பெண்கள் குளித்து முடித்தனர்.வீடு கழுவி விடப்பட்டது.
மாலை வந்தது.மெள்ள மெள்ள அனைவரும் இயல்பு நிலைக்குத்
திரும்பிக்கொண்டிருந்தனர்.சூழ்நிலையை இயல்பாக்க யாரோ தொலைக்காட்சிப்பெட்டியை உயிர்ப்பித்தனர்.ஆரம்பமாயிற்று அவரவர் இயல்பு வாழ்க்கை.
"ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங்காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில்மூழ்கி நினைப்பொழிந்தார்களே."--(திருமூலர்)

Friday, August 17, 2007

ஞானம்

அவன் கொஞ்சம் கொஞ்சமாக தன் நடமாட்டத்தைக் குறைத்துக் கொண்டான்.உணவுக்காக ஊருக்குள் செல்வது கூட குறைந்து போனது.அவனைத்தேடி அவன் இருப்பிடத்துக்கே உணவு வர ஆரம்பித்தது.மக்கள் அவன் தியானம் முடியும் வரை காத்திருந்து தங்கள் குறைகளை அவ்னிடம் சொல்ல ஆரம்பித்தனர்.அவனிடம் சொல்வதனாலேயே தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைப்பதாக நம்பினர்.அவனைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் அவன் அருட்பார்வைக்காகக் காத்திருந்தது.அனைவரும் அவனுக்காகத் தின் பண்டங்களும்,பழங்களும் மற்ற உணவுப்பொருட்களும் கொண்டு வந்தனர்.அவன் அனைத்தையும் அங்கு வரும் அவர்களுக்கே பிரசாதமாகக் கொடுத்தான்.ஒரு நாய் உணவுக்காக அங்கு வந்து அவன் தரும் உணவைச்சாப்பிட்டு விட்டு அங்கேயே கிடக்க ஆரம்பித்தது.என்றாவது அந்த நாய் எங்காவது சென்று விட்டு திரும்புவதற்கு நேரமானால் அவன் கவலைப்பட ஆரம்பித்தான்.அவனையும் அறியாமலே அந்த நாயின் மீது அன்பு அதிகமாயிற்று.ஒரு நாள் காலை அவன் கண் விழித்தபோது அந்த நாய் இறந்து கிடக்கக் கண்டான்.துக்கம் மேலிடக்கண்ணீர் பெருக்கினான்.சிறிது நேரம் கழித்து துக்கம் குறைய அவன் யோசித்தான்"ஏனிந்தத் துக்கம் ?எதற்காக அழுதேன்? யாருக்காக அழுதேன்?இதற்குக்காரணம் தேவையற்று நான் வைத்த ஆசை;பற்று.இதுவன்றோ மனிதர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணம்?இனி இறைவனை நினைக்கும்போது கூட அவன் மீது ஆசையற்ற ஒரு நிலையே வேண்டும்."
அவன் ஞானியானான்.
"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனொடாயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விட விட ஆனந்தமாமே."---(திருமூலர்)

Tuesday, August 7, 2007

இறைத்தத்துவம்

அவன் அந்த ஆற்றங்கரைக் கோவில் மண்டபத்திலேயே தங்க ஆரம்பித்தான்.அவனது பெரும்பகுதி நேரம் தியானத்திலேயே கழிந்தது.பசிக்கும்போது ஊருக்குள் சென்று யாரிடமாவது உணவு கேட்டுச் சாப்பிடுவான்.அந்த ஊரில் யாரும் அவனுக்கு உணவிட மறுப்பதில்லை.அனைவருக்கும் அவனிடம் ஒரு மரியாதை இருந்தது.
ஒரு நாள் அவன் சென்று கொண்டிருக்கும் போது ஒருவன் கையில் கற்களுடன் எதையோ தேடுவது போல்
நின்று கொண்டிருந்தான்.அவனைப்பார்த்ததும் அந்த ஒருவன் சொன்னான்"சாமி,ஒரு நாயி எப்பப்பார்த்தாலும் என்னைக் கண்டா கொலச்சுக்கிட்டே இருக்கு.அந்த சமயத்தில அத அடிக்கக் கல்லத் தேடினா கல்லு கெடைக்க மாட்டேங்குது.இப்ப கல்ல எடுத்து வச்சுக்கிட்டு நாயத் தேடினா அதக்காணும்.அந்தக்காலப் பெரியவங்க சரியாத்தான் சொன்னாங்க"நாயக்கண்டாக் கல்லக்காணும்,கல்லக்கண்டா நாயக்காணும்"அப்படின்னு".அவன் சிரித்தான்."இந்த மக்கள் உண்மையான பொருளை விட்டு விட்டு வேறு ஏதோ பொருளைக்கற்பித்துக்கொள்கிறார்களே"என்று நினைத்தான்.பின் சொன்னான்."அதற்குப்பொருள் அப்படியல்ல.கல்லில் செய்யப்பட்ட ஒரு நாயின் சிலையில் நாயின் உருவத்தை ரசித்துப்பார்க்கும்போது கல் கண்ணுக்குத்தெரிவ்தில்லை.அது என்ன கல்,செங்கல்லா,கருங்கல்லா என்று ஆராயும்போது நாய் தெரிவதில்லை.அதுதான் பொருள்."
மற்றவன் சொன்னான்"இதெல்லாம் எங்களுக்கு என்ன சாமி தெரியும்?நீங்க சொன்னாத் தெரிஞ்சுக்கறோம்."
அவன் நினைத்தான்."இறைத்தத்துவமும் இது போலத்தானே.ஐந்து பூதங்களாகிய நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் இவற்றை வியந்து அவற்றில் லயிக்கும் போது இறைவன் மறைந்து விடுகிறான்.பஞ்ச பூதங்களுக்கும் காரணமான பரம்பொருளை நினைக்கும் போது அவை மறைந்து இறைவனே நிற்கிறான்.'
அவன் கோவில் மண்டபத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார் முதல் பூதமே.-(திருமூலர்)

Monday, August 6, 2007

இரண்டல்ல(அத்வைதம்)

அவன் மிகவும் களைத்திருந்தான்.பல நாட்களாய் அலைந்து உடலும் தேடலுக்கு விடை கிடைக்காமல் மனமும் சோர்ந்திருந்தான்.கையில் பணமில்லாததால் இரண்டு நாட்களாக ஒன்றும் உண்ணாமல் துவண்டிருந்தான்.ஊர் ஊராய் ஒவ்வொரு கோவிலாய் இறைவனைத் தேடித் தேடி அலுத்திருந்தான்.அந்த ஊர் கோவிலில் தெய்வம் சக்தி நிறைந்தது, இந்த ஊர்க் கோவிலில் இறைவன் விசேடமானவர் என்றெல்லாம் ஒவ்வொருவர் சொல்வதையும் கேட்டு ஒவ்வொரு ஊராய் அலைந்து அவன் தேடும் கடவுளைக்காணாமல் ஏமாற்றம் அடைந்திருந்தான்.இப்போது அந்தக் கிராமத்தின் ஆள் அரவமற்ற ஆற்றங்கரைக் கோவில் வாசலில் பசியின் காரணமாக கண்கள் இருண்டு மயக்கமடைந்து கீழே விழுந்தான்.
தன் முகத்தில் விழுந்த நீரின் குளிர்ச்சியில் அவன் கண் விழித்தான்.எதிரே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.அரையில் ஒரு துண்டு,தலையில் முண்டாசு,கையில் ஒரு கோல்.சிறுவனைப்பார்த்த அவன் முனகினான்"பசி".சிறுவன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த சில பழங்களை அவனிடம் நீட்டினான்.பழங்களைத்தின்று சிறிது பசியாறிய அவன் சொன்னான்"கடவுள் மாதிரி வந்து காப்பாற்றி விட்டாயப்பா".சிறுவன் கேட்டான் "என்னங்க ஆச்சு?"அவன் சொன்னான்"கடவுளைத்தேடி ஊர் ஊராய் சுற்றினேன்.காண இயலவில்லை."
சிறுவன் சிரித்தான்"இப்பதான் என்னைப்பார்த்து கடவுள் மாதிரின்னு சொன்னீங்க.அப்ப எங்கிட்ட கடவுள் இருந்தா ,எல்லார் கிட்டயும் இருக்கணும்,உங்க கிட்டயும் இருக்கணும்.ஆனால் கடவுளைத்தேடி ஊரெல்லாம் அலஞ்சேனு சொல்றீங்களே.சிரிப்புதான் வருது சாமி"
அவனுக்குப் பளார் என்று அறைந்தது போல் இருந்தது.கண்களை மூடித்திறந்தான்.சிறுவனைக் காணவில்லை.உண்மை உணர்ந்தான்.தான் வேறு கடவுள் வேறில்லை என்பதை உணர்ந்தான்.பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி புலன்களைக்குவித்து உள்ளே இருக்கும் கடவுளோடு ஒன்றினான்."அஹம் ப்ரம்ஹாஸ்மி"

"சீவன் என்ன சிவனார் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரைஅறிகிலர்
சிவனார் சிவனாரைஅறிந்த பின்
சீவனார் சிவனாயிட்டிருப்பரே"-(திருமூலர்)

Sunday, August 5, 2007

மொழி மாற்றம்

இன்று முதல் தமிழுக்கு மாறி விட்டேன்.என் தாய் மொழியில் எழுதுவது எனக்கு எளிது என்பதால்.இன்று சனிப்பெயர்ச்சி,நானும் பெயர்ந்து விட்டேன்!எந்த இராசிக்காரர்கள் எல்லாம் சிரமப்படப்போகிறார்களோ?