Monday, August 19, 2013

திருமந்திரம்-சூனிய சம்பாஷணை--”வழுதலை வித்திட......”

நேற்று வலைப் பதிவுகளில் மேய்ந்து கொண்டிருந்தபோது,ஒரு பதிவின் தலைப்பு,என்னை நிறுத்தியது.தலைப்பு-”திருமந்திரம்”;பதிவர் கோவை கார்த்திகேயன்.

என் தலையில் பித்தன்,முக்கண்ணன்,சொக்கன் ஓங்கிக் குட்டியது போல் உணர்ந்தேன்.பல மாதங்களாகத் திருமந்திர இடுகைகள் ஏதும் எழுதவில்லையே என சில நாட்களாக ஒரு உறுத்தல்;பிரதோஷ தினமாகிய நேற்று,சிவனே முன் வந்து எனக்குக் கட்டளையிட்டு விட்டான்.

பித்தனே(சென்னை அல்ல!.பித்தா,பிறைசூடி எனச் சுந்தரர் பாடியவர்) உன் கட்டளையை ஏற்றுத் திருமந்திரப்பதிவுகளை தொடர எண்ணுகிறேன்,அருள் புரி!

பித்தனே(சென்னைதான்) சற்றே விலகியிரும் பிள்ளாய்,இச் சொக்கனுக்கு இடம் விட்டு!

சூனிய சம்பாஷணை பற்றிய முதல் பதிவை பிப்ரவரி 2011 இல் எழுதினேன்.இன்று அப்பதிவை ஓர் அறிமுகப் பதிவாக மீண்டும் தந்து விட்டுப் பின் மற்றப் பாடல்களைத் தொடர எண்ணம்.
இதோ............

.//.........திருமந்திரத்தின் ஒன்பதாவது தந்திரத்தில்,’சூனிய சம்பாஷணை என்று ஒரு
பகுதி உள்ளது.இதில் மொத்தம் எழுபது பாடல்கள் (மந்திரங்கள்) உள்ளன. எளிதில் பொருள் விளங்காத குறியீட்டு மொழியில் இப்பாடல்கள் அமைந்துள்ளன.

இம்மந்திரங்களின் கருத்து இதுதான் என்று வரையறுக்கமுடியாதபடி அவை அவரவர் அனுபவத்துக்குத் தக்க வெவ்வேறு பொருள்களைக் கொண்டுள்ளன. சூனியம் என்பது ஒன்றும் இல்லாதது.இங்கு இதுதான் பொருள் என்று வரையறுக்க முடியாத நிலையைக் குறிக்கிறது.சித்தர்களின் குறியீட்டு மொழி புரிவது கடினம்.இங்கு நான் புரிந்துகொண்டு எழுதுகிறேன் என்று சொன்னால் அது பொய்.அந்த அளவுக்குப் பக்குவமும் ஞானமும் எனக்கில்லை.பல உரைகளில் படித்ததை அடிப்படையாகக் கொண்டே இதை எழுதுகிறேன். இதைப் படிக்கும் உங்களுக்குப் புதிய கருத்துக்கள் தோன்றலாம்.வேறு சில விளக்கங்கள் படித்திருக்கலாம்.அவ்வாறெனில் தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

இங்கு நான் சில பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளேன்.ஒரு சிறிய முயற்சி.

மந்திரம்.2868.
வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.

இதை அப்படியே பொருள் கொண்டால்தோட்டத்தில் புழுதியைத் தோண்டினேன். அக்குழியில் கத்தரிக்காய்(வழுதல்) விதை விதைத்தேன்.அதிலிருந்து பாகற்கொடி படர்ந்தது.அதில் பூசணி பூத்தது.அதைக் கண்ட,அங்கிருந்த தோட்டக் குடிகளெல்லாம் பயந்து,தம் சிறு தெய்வங்களைத் தொழுது கொண்டு ஓடினார்கள்.அதன் பின் அக்கொடி யில்  வாழைக்கனி முற்றிலுமாகப் பழுத்தது

நேரடியாகப் பார்த்தால் பொருளற்ற ஒரு பாடல்.ஆனால் அறிஞர்கள் இதன் கருத்தை அனுபவ பூர்வமாக விளக்கும்போது வியப்பாக இருக்கிறது. நடக்கமுடியாத ஒரு நிகழ்ச்சி மூலம் தத்துவங்கள் விளக்கப் படுகின்றன..

இங்கு தோட்டம் என்பது நமது உணர்வாகிய நெஞ்சக் கமலம். புழுதியைத் தோண்டுத லாவது,அவ்வுணர்வுகளைப் பயந்து வரும் தத்துவங்களின் இயல்பை ஆராய்ந்து காணுதல்.வழுதலை வித்திடல் என்பது ஐந்தெழுத்தை உள் ஊன்றி நிறுத்துதல்.பாகல் என்பது நிலையில்லாப் பொருள்களில் பற்றற்று இருத்தல்.பூசனி பூத்தது என்பது திருவருள் விளக்கம்.தோட்டக் குடிகள் என்பது நம் அஞ்ஞானம்.வாழை பழுத்தது என்பது இறை அருட்பேறு.

இதையே வேறு முறையில் காணும்போது இவ்வாறு கொள்ளப் படுகிறது...... வழுதலை வித்திடல்-குண்டலினி யோகப் பயிற்சி;பாகல் முளைத்தது-வைராக்கியம் கிடைத்தது;புழுதியைத் தோண்டினேன்-ஆன்மா பற்றிய தத்துவ விசாரம்;பூசனி பூத்தது-சிவ தத்துவத்தைத் தெரிந்து கொள்ளல்;தோட்டக் குடிகள் ஓடினர்-புலனுணர்வுகள் அகலுதல்;பழுத்தது வாழைக்கனி--சிவானுபவம் கிட்டல்.

குண்டலினி யோகமாவது,மூலாதரத்தில் உறங்கும் சக்தியை மேலேற்றி சஹஸ்ராரத்தை அடையச் செய்தல்......சிற்றின்பத்தில் செலவிடும் சுக்கிலத்தை மூலக்கனல் ஆக்கிப் புருவ மத்தியாகிய ஆக்ஞைக்கு ஏற்ற,அங்கு தோன்றும் அருட்சக்தி அருளால், தத்துவப் பிணிப்பு நீங்கி உணர்வுகள் தூய்மை அடைந்து, சஹஸ்ராரம் அடைகிறது.சீவ கரணங்கள்,சிவ கரணங்களாகி சிவானுபவம் விளைகிறது.

வேறு விதமாகச் சொன்னால்...வழுதல் என்பது துறவையும்,பாகல் என்பது உலக மறுப்பையும்,பூசனி என்பது சிவபெருமானையும், தோட்டக் குடிகள் என்பது, ஐம்புலன்களையும்,மும்மலங்களையும்,வாழை பழுத்தல் என்பது முத்தியையும் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

சித்தர்களின் கருத்தை யாரால் அறிந்து கொள்ள முடியும்? //
Top of Form


6 comments:

மு மாலிக் said...

ரொம்பக் கஷ்டப்பட வேண்டாம்.

அதுல என்ன எழுதியிருக்குன்னா, வழுதலைப் பயிரிட்டால், பாகல் முளைத்தது என்று எழுதியிருக்கு. பிறகு, மண்ணைத் தோன்றினால் பூசணிக்காய் கிடைச்சுச்சாம். தோட்டக் குடிகள் தொழுது கொண்டோடினர்களாம். பிறகு, நல்லா பழுத்தது வாழைக்காய் மட்டும் தானாம்.

இது தான் பொருள்.

அனர்த்தமாக இருந்தால், அனர்த்தமானது தான். இயல்பாக நாம் இருக்கப் பழகிக் கொள்ளவேண்டும்.

செங்கோவி said...

மனதிற்கு நிறைவளிக்கும் நல்ல பதிவு.நன்றி ஐயா.

மதுரை சொக்கன் said...

@மு.மாலிக்
//சூனிய சம்பாஷணை எழுதிய திருமூல நாயனாரும்,உரை எழுதிய தமிழறிஞர்களும் முட்டாள்கள்;நீங்கள் ஒருவர்தான் புத்திசாலி; காரணம்?!இது வேறு மத நூல்!//
நன்றி!

மதுரை சொக்கன் said...

@செங்கோவி
நன்றி

பால கணேஷ் said...

உட்பொருளை அறிந்து கொள்ள முனைப்பு வேண்டும்; பக்தி வேண்டும்; அஃதின்றி மேலோட்டமாகப் பார்த்தால் கிடைக்கும்‌ பொருள் அபத்தம்தான். அதைப் போய் வேலை மெனக்கெட்டு ஏன் சித்தர்கள் எழுதி வைக்க வேண்டும்? அவர்கள் அத்தனை அறிவிலிகளா என்ன..? உட்பொருளைத் தேடி அனுபவிக்க நினைப்பவர்களுக்கு சொக்கரே... நீர் எழுதுவது வரம்! நிறைய எழுதுங்கள்...! அருளமுதம் உங்களால் எங்களுக்கும் ‌கிடைக்கட்டும்! (அதற்காக பித்தரை ஓரங்கட்டி, விரட்டிவிட வேண்டாம்... அவரும் எமக்கு வேண்டும்!)

வே.நடனசபாபதி said...

திருமந்திரத்தைப் புரிந்துகொள்வது கடினம். மிகத் தெளிவாக பாடலின் பொருளை புரியவைத்தமிக்கு நன்றி. வாழ்த்துக்கள்!பணி தொடர்க!