Monday, December 10, 2012

சிவனின் கண்டம் கறுத்ததேன்?

சிவனுக்கு நீலகண்டன் என்றொரு பெயரும் உண்டு.வழக்கில் கருமையை நீலம் என்றும் பச்சை என்றும் சொல்வதுண்டு.திருமாலைப் பச்சைமேனியன் என்றும் இராமனை நீல நிறத்தவன் என்றும் கூறுவது கருமையையே குறிக்கும்.அது போலவே சிவனின் கழுத்து கறுத்த காரணத்தால் அவர் நீலகண்டன் என அழைக்கப்பட்டார்.

சிவனின் கழுத்து கறுத்ததற்குக் காரணமாக ஒரு கதை உண்டு.பாற்கடலைத் தேவர்களும் அசுரரும் சேர்ந்து கடைந்தபோது அதிலிருந்து நஞ்சு தோன்ற,  மற்றவர் நலன் கருதிச் சிவன் அதை உண்டதாகவும்,பார்வதி தேவி அவர் கழுத்தைப் பிடித்து நஞ்சு உள்ளே செல்லாமல் நிறுத்த,சிவனது கழுத்து கறுத்ததாகவும் கதை சொல்வர்.

இது பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார்--

”அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்
 கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
 உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்
 வெண்டலை மாலை விரிசடையோற்கே”

வெண்மையான தலைமாலையை  அணிந்த சிவபெருமானுக்கு அண்டங்களையும் எட்டுத் திசைகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் அதோ முகத்தின் கழுத்து கரிய நிறம் உடையதாய் இருப்பதை அறியார் எவருமிலர்.அவர் நஞ்சை உண்டதால் கருமை அடைந்தது என்று உரைப்பவர் அறிவற்றவர்.

பாடலின் பொருள் இவ்வளவே.

ஆனால் இது மட்டுமா திருமூலர் சொல்வார்?

உட்கருத்து என்ன எனப் பார்த்தால்,---

சுக்கிலத்தை கீழ்நோகிச் செலுத்தி  வீணாக்குவது கருமையின்,அறியாமையின் குறியீடு. ஆனால் அதை மேல் நோக்கிச் செலுத்துதல்,விந்து மறித்தல் அறிவின் குறியீடு .தொண்டைக் குக் கீழ் உள்ள உடற்பகுதி அறியாமைக்கும்,தொண்டைக்குமேல்,புருவ நடுவும்  அதற்கு மேலும் உள்ள பகுதி ஒளிமயமான அறிவின் குறியீடு ஆகும்.நஞ்சு உண்ணுதல் என்பது சுக்கில சக்தியை மடைமாற்றி ஆக்ஞாசக்கரத்திற்கு மேல் செலுத்துதல் என்பதே இதன் உட்பொருள். இதுவே சிவன் உண்ட நஞ்சின் தத்துவம்

ஆனால் இக்கருத்து குண்டலினி பயிலும் மனிதர்க்குப் பொருந்தினும்,தலைவனான சிவனுக்குப்  பொருந்துமா?

எனவே பஞ்சாக்ஷர தீபத்தில் வேறு பொருள் கொள்ளப் பட்டிருக்கிறது

பாற்கடல் என்பது மூவகையாருயிர் வர்க்கம்;
தேவர்கள் என்பது நல்வினை
அசுரர்கள் என்பது தீவினை
ஆன்மபோதம் என்னும் மலையினால் பாச ஞானம் என்னும் அமுதம் பெறும் பொருட்டுக் கடையும்போது  ஆணவத்தின் காரியமாகிய,அஞ்ஞானம்,மோகம்,மதம்,மாற்சரியம் ஆகிய நஞ்சு திரண்டு உயிர்கள் மறைக்குங்காலத்து இறைவன் அந்த நஞ்சை விழுங்கி,”இவ்வண்ணம் எப்போதும் காப்போம்”என்பதற்கு அறிகுறியாகக்  கண்டத்தில் வைத்தான்,எனப் பொருள் கொள்ளப்படுகிறது.

அதோ முகம் என்பது இறைவனின் ஆறாவது முகம்.அவனது முகங்கள் பற்றிப் பிறிது ஒரு சமயம் பார்ப்போம்.2 comments:

வே.நடனசபாபதி said...

திருமந்திரமும் பஞ்சாக்ஷர தீபமும், சிவனின் கண்டம் கறுத்தது பற்றி சொல்வதை விரிவாக விளக்கியமைக்கு நன்றி!

இராஜராஜேஸ்வரி said...

சிவனின் கண்டம் கறுத்த காரணங்களை சிறப்பாகப் பதித்தமைக்குப் பாராட்டுக்கள் ஐயா..