Tuesday, February 8, 2011

சூனிய சம்பாஷணை--கூறையுஞ்சோறும்.....

கூறையுஞ் சோறும் குழாயகத் தெண்ணையும்
காறையும் நாணும் வளையலுங் கண்டவர்
பாறையி லுற்ற பறக்கின்ற சீலைபோல்
ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.----மந்திரம்.2893.

ஆடையும்,சோற்றினால் ஆய உடல் வனப்பும் ,குழலில் வைத்த எண்ணெயும், கழுத்தில் அணியும் காறையும், இடை நாணும்,கை வளையலுமாகியவற்றை அணிந்த பெண்ணைக் கண்டு மோகம் கொண்டவர்,பாறை மீது வைத்த ஆடை பறந்து அழுக்குக் குழியில் விழுவது போல்,காமம்,குரோதம்,லோபம்,மோகம், மதம்,மாற்சரியம் ஆகிய ஆறு உட்பகைகளால் கெடுவர்.

இங்கு ‘பாறையிலுற்ற பறக்கின்ற சீலை போல்’என்பதற்கு,பாறை மீது வைத்த ஆடை பறப்பது” என்று பொருள் கொள்ளப் படுகிறது.ஆனால்,இவ்வாறு அழகு படுத்தப் பட்ட பெண்,ஒரு கற்பாறைக்குப் புடவை சுற்றியது போல் இருக்கிறாள்;எவ்வாறு புடவை சுற்றிய கற்பாறை எந்த இன்பமும் கொடுக்காதோ,அதே போல் அந்தப் பெண்ணும் ஆன்மாவுக்கு இன்பம் தர மாட்டாள்,என்று மற்றொரு பொருளும் சொல்லப் படுகிறது.

ஆனால் சூனிய சம்பாஷணை என்ற தலைப்பில்,குறியீட்டு மொழி இல்லாமல் ஒரு பொருளைப் பற்றித் திருமூலர் சொல்வாரா?எனவே வேறு விதமாக யோசித்தால் தோன்றுவது---

கூறை எனபது,உடலைப் போர்த்திய தோல்.

சோறு என்பது சதை.(கத்தாழைக்குள் சோறு இருப்பது போல்)-

குழாயகத்தெண்ணை என்பது எலும்பு நரம்புகள்,குருதி-குழாய்-எலும்பு,நரம்பு;எண்ணெய்-குருதி

காறை,நாண் வளையல்-கழுத்து,இடை,கை போன்ற உடல் உறுப்புகள்.

மொத்தமாகக் குறிக்கப்படுவது.அழியும் இந்த உடல்.

இந்த உடலின் மேல் விசேட கவனம் செலுத்திப் போற்றிப் பாதுகாத்து, உடலில் உள்ள புலன்களின் மயக்கத்தால்,இந்த உடலிலுறை ஆன்மாவை மறப்பவர்கள், மீண்டும் பிறவிக் குழியில் வீழ்வர்!(ஆறைக்குழி என்பது பிறவிக் குழியைக் குறிக்கும் எனக் கொள்ளலாம்.) இது எனக்குத் தோன்றிய பொருள்.

திருக்குறளில் ’எச்சத்தால்’ என்பதை ‘மக்களால் என்று மாற்றிய பாதிரியார் போல் என் கருத்துத் தவறாகக் கூட இருக்கலாம்.ஆனால் சித்தர்களின் குறியீட்டு மொழியின் பொருளுக்கு எல்லை ஏது?

திருமூலர் என்ன நினைத்தாரோ!

28 comments:

எல் கே said...

//பாறையி லுற்ற பறக்கின்ற சீலைபோல்//

இதற்கு நீங்கள் விளக்கம் சொல்லவில்லையே

மதுரை சொக்கன் said...

எத்தனை முறை பாறையில் விரித்தாலும், சீலை பறப்பது போல், ஆத்ம பரிசோதனை இல்லாதவர்கள் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அழுந்துவர் என நேரடிப் பொருள் கொள்ள வேண்டியதுதான்.பரிபாஷை எதுவும் தெரியவில்லை.உங்களுக்கு ஏதாவது தெரிகிறதா,கார்த்திக்?
நன்றி!

Chitra said...

அருமையாக விளக்கி சொல்லி இருக்கிறீர்கள்... கருத்து செறிந்த பதிவுங்க....

Chitra said...

என்னுடைய பதிவுக்கு வருகை தந்ததற்கு நன்றிங்க. உங்கள் ப்லாக் அருமையாக இருக்கிறது. Follow பண்றேன்.

எல் கே said...

இங்கு நேரடிப் பொருள்தான் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன் . இன்னும் இருவரிடம் இந்த லிங்க் கொடுத்துள்ளேன். அவர்கள் மறுமொழிக்காக காத்திருக்கிறேன்

மதுரை சொக்கன் said...

Chitra said...
//அருமையாக விளக்கி சொல்லி இருக்கிறீர்கள்... கருத்து செறிந்த பதிவுங்க....//
முதல் வருகைக்கும்,தொடர்வதற்கும், கருத்துக்கும் நன்றி,சித்ரா அவர்களே!

மதுரை சொக்கன் said...

எல் கே said...
//இங்கு நேரடிப் பொருள்தான் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன் . இன்னும் இருவரிடம் இந்த லிங்க் கொடுத்துள்ளேன். அவர்கள் மறுமொழிக்காக காத்திருக்கிறேன்//
ஆழ்ந்து படிக்கிறீர்கள்!என் பொறுப்பு அதிகமாகிறது!.லிங்க் கொடுத்தமைக்கு நன்றி!
நன்றி!

மதுரை சொக்கன் said...

Chitra said...
// என்னுடைய பதிவுக்கு வருகை தந்ததற்கு நன்றிங்க. உங்கள் ப்லாக் அருமையாக இருக்கிறது. Follow பண்றேன்.//
இதையேதான் நானும் சொல்ல விரும்புகிறேன்.
நன்றி சித்ரா அவர்களே!

மதுரை சொக்கன் said...

Chitra said...
// என்னுடைய பதிவுக்கு வருகை தந்ததற்கு நன்றிங்க. உங்கள் ப்லாக் அருமையாக இருக்கிறது. Follow பண்றேன்.//
இதையேதான் நானும் சொல்ல விரும்புகிறேன்.
நன்றி சித்ரா அவர்களே!

எல் கே said...

there was a discussion came abt sooniya sambaashanai in sopme google groups but i dont know what happened to that thread. let me search for that

அப்பாதுரை said...

அருமையான பாடல்.
பறக்கின்ற சீலை நிலையில்லாத மனம். பாறை என்றைக்கும் நிலையான தன்னறிவு/அகம் பிர்ம்மாஸ்மி எனும் ஞானம். பறக்கின்ற சீலை நீங்கள் சொல்வது போல் தன்னறிவை மூடிய நிலை.

அப்பாதுரை said...

பறக்கின்ற சீலை எந்தப் பாறையிலும் நிலைபெறுவதில்லை. தன்னறிவு பெறும் முயற்சியில் மனமும் தொட்டுத் தொட்டுத் தடுமாறும்.

மதுரை சொக்கன் said...

உங்கள் கருத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்!
நல்ல விளக்கம்!
தெளிய வைத்தமைக்கு நன்றி!

மதுரை சொக்கன் said...

thanks for your interest in the subject LK.awaiting further inputs from u..

வே.நடனசபாபதி said...

நல்ல விளக்கம்.

இதையே குறளாசான் இவ்வாறு சொல்லுவார்.

"காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்."

காமம், வெகுளி, மயக்கம் என்னும் இவை மூன்றின் பெயர்களைக்கூட உள்ளத்திலிருந்து அறவே நீக்கிவிட்டால், பிறவித் துன்பமே இருக்காது என்று.

மதுரை சொக்கன் said...

அருமையான குறள் மேற்கோள்!
நன்றி சபாபதி அவர்களே!

அப்பாதுரை said...

வள்ளுவனின் சொல் விளையாட்டு அற்புதமாக இல்லை? நன்றி நடனசபாபதி ஐயா.

மதுரை சொக்கன் said...

அப்பாதுரை said...
//வள்ளுவனின் சொல் விளையாட்டு அற்புதமாக இல்லை? நன்றி நடனசபாபதி ஐயா.//
சந்தேகமின்றி!நன்றி அப்பாதுரை,நடனசபாபதி சார்பில்!

எல் கே said...

அப்பாதுரை நன்றி

அப்பாதுரை said...

அடுத்தது என்ன சார்?

மதுரை சொக்கன் said...

அப்பாதுரை said...

//அடுத்தது என்ன சார்?//
.மன்னிக்கவும். நீண்ட நாள் அடுத்த வீட்டிலேயே கவனம் சென்று விட்டது!
விரைவில்!

அணில் said...

கூறையுஞ் சோறும் குழாயகத் தெண்ணையும்
காறையும் நாணும் வளையலுங் கண்டவர்....

இளைஞர்களுக்கு சாபம் விடும் திருமூலருக்கு டூக்கா!!!

மதுரை சொக்கன் said...

ந.ர.செ. ராஜ்குமார் said...

கூறையுஞ் சோறும் குழாயகத் தெண்ணையும்
காறையும் நாணும் வளையலுங் கண்டவர்....

//இளைஞர்களுக்கு சாபம் விடும் திருமூலருக்கு டூக்கா!!!//

உங்கள் வயது அப்படி!
நன்றி ராஜ்குமார்.

cheena (சீனா) said...

அன்பின் சொக்க்ன - உடலின் மேல் கவனம் செலுத்தி - உடலில் உறையும் ஆன்மாவினை மறப்பவர்கள் மீண்டும் பிறவி எடுப்பர் - நல்லதொரு விளக்கம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

மதுரை சொக்கன் said...

நன்றி சீனா!

மதுரை சொக்கன் said...

நன்றி சீனா!

வல்லிசிம்ஹன் said...

ஈரம் இருக்கும் வரை சீலையும் பாறையில் ஒட்டும். காய்ந்த பிறகு பறந்துவிடும் என்றுதான் நான் நினைத்தேன்.
அருமையான பின்னூட்டங்கள் வழியில்
பாறையும் கதை சொல்லிவிட்டது.மிக அருமை.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான விளக்கம்! அருமை! நன்றி!