Wednesday, December 17, 2008

மருந்தீசன் பதிகம்

பட்டாபிராமன் என்ற என் நண்பர் பல ஆண்டுகளாக மரபுக் கவிதைகள் எழுதி வருகிறார்.கவிதை எழுதிய நோட்டுப் புத்தகங்களையெல்லாம் பத்திரமாகக் காப்பாற்றி வைத்துள்ளார்.அவரைத் தவிர அக்கவிதைகளைப் பார்த்தவர்கள் ஒரு சிலரே.உண்மையிலேயே ஆத்ம திருப்திக்காக எழுதுகிறவர்.சென்னை திருவான்மியூரில் வசிப்பவர்.மருந்தீச்வரர் மீது அவர் எழுதிய கவிதை ஒன்று கிழே--

மருந்தீசன் பதிகம்
ஆதி அந்த மென்றி லாஅ நந்த மாகி நிற்பவன்
வேத மேஅ றிந்தி லாமெய் ஞான ரூப மானவன்
ஓத மாக்க டல்பு ரத்து ஔட தீசன் பால்வண
நாதன் நாதன் வான்மி யூரன் நல்ல டிக்கு வந்தனம் 1
(( ஓத மாக்கடல்புரத்து ஔடதீசன் - குளிர்ந்த பெருங்கடல் பக்கத்தில் உள்ள ஔஷதீஸ்வரன்)
தொல் அ கத்தி யர்க்கு நோய்தொ லைக்கும் வேதம் சொன்னவன்
எல்லை யற்ற சோதி யாய் அ கண்ட மெங்கும் நிற்பவன்
பல்லு யிர்க்கு ளேயும் அன்புப் பால மாய்ப் பிணைத்தவன்
சொல்ல வொண்ணா வான்மி யூரன் தூம லர்த்தாள் வந்தனம் 2
(தொல் அ கத்தி யர்க்கு நோய்தொ லைக்கும் வேதம் சொன்னவன் - ( அகத்தியர்க்கு நோய் அகற்றும் ஆயுர் வேதம் கற்பித்தவன் )
பாய்ந்த கங்கை சென்னி தாங்கி பகீர தன்பு ரந்தவன்
மாய்ந்த மன்ம தற்கு மீண்டும் வாழ்வு தந்த வள்ளலான்
ஆய்ந்த றிந்த ஞானி கட்கு அகத்து ளே நி றைந்தவன்
தேய்ந்த திங்கள் வான்மி யூரன் சேவ டிக்கு வந்தனம் 3
( பாய்ந்த கங்கை சென்னி தாங்கி பகீர தன்பு ரந்தவன் - கங்கையைத் தலையில் தாங்கி பகீரதனுக்கு உதவியவன் )
இன்று நேற்று நாளை என்றி யங்கும் அண்டம் தன்னுளே
ஒன்றி ஆதி அற்ற வோர்அ னந்த மாய்ப்ப ரந்தவன்
அன்றி லாயெம் குற்றம் நீக்கி அன்பு மட்டும் ஏற்பவன்
நன்றி நன்றி வான்மி யூரன் நல்ல டிக்கு வந்தனம் 4
பொருளுமாய் அ தற்குளே பு தைந்த சக்தி தானுமாய்
அருள் உ மைக்கி டம்ப கிர்ந்தே அம்மை யப்பன் ஆனவன்
இருள்ம லிந்த குகை நிகர்த்த எங்கள் நெஞ்சில் தீபமாய்
மருள் அ கற்றும் வான்மி யூரன் மலர டிக்கு வந்தனம் 5
(பொருளுமாய் அ தற்குளே பு தைந்த சக்தி தானுமாய்
அருள் உ மைக்கி டம்ப கிர்ந்தே அம்மை யப்பன் ஆனவன் :
(By sharing his physique with Parvathi, demonstrates that He Is Manifest as Matter and Energy in the Cosmos)
ஆல கால நஞ்ச ருந்தி அண்டம் யாவும் காத்துதான்
நீல கண்ட னான வன் வெண் ணீரணிந்த நின்மலன்
மால் அ யற்கும் காண்கி லாஅ நந்த மாய் அ மைந்தவன்
பால் அ ணிந்த வான்மி யூரன் பதம லர்க்கு வந்தனம் 6
வந்த தேன் இ ருப்ப தேன் என் றறிந்தி லாத மாந்தராய்
வந்த தாலே உழலும் நந்தம் வாழ்வைச் சீர்ப்ப டுத்துவோன்
இந்தி ரன்,பி ருங்கி, காலன், ஏனை தேவர், நான்மறை
வந்த னஞ்செய் வான்மி யூரன் மலர்ப்ப தங்கள் வந்தனம் 7

நந்தி வாக னன்க ழுத்தில் நாக மாலை பூண்டவன்
கந்த வேளை நெற்றிக் கண்ணின் கனலி ருந்து யிர்த்தவன்
சுந்த ரர்க்குத் தோழன் எங்கும் சோதி யாய் நி றைந்தவன்
எந்தன் ஈசன் வான்மி யூரன் இணைய டிக்கு வந்தனம் 8
அன்ப ரைப்பு ரத்தல் வேண்டி ஆடல் ஆறு பத்து மூன்(று)
இன்புடன் நடாத்தி பத்தர் ஈர டிக்குள் ஏற்றவன்
என்பும் ஓடும் மாலை யாக்கி யாக்கை அற்பம் காட்டுவோன்
தென்பு லத்து வான்மி யூரன் சேவ டிக்கு வந்தனம் 9
(அன்ப ரைப்பு ரத்தல் வேண்டி ஆடல் ஆறு பத்து மூன்(று)
இன்புடன் நடாத்தி பத்தர் ஈர டிக்குள் ஏற்றவன் ::
(அறுபத்து மூன்று திருவிளையாடல்கள் அன்பருக்காக நடத்தினவன் )

ஓத நீர், நெருப்பு, பூமி, ஓங்கு வானம், காற்றுமாம்
பூத மைந்து மாகி யாளும் பூர ணத்தின் பூரணன்
நாத ரூபன் மூச்சி லேஓங் கார நாத மானவன்
வேத நாதன் பால்வ ணந்தன் மெய்ய டிக்கு வந்தனம் 10



சு. பட்டாபிராமன் மார்ச் ஏழு, 2003



--

2 comments:

Prabakaran said...

மிகவும் அருமையான கவிதை.
இப்படிப்பட்ட கவிதைகளை ஒரு சிலரே எழுதுகிறார்கள்(முடியும்) .
அவர் கவிதை தொகுப்பை புத்தகமாக வெளியிடலாம்.
அவை பாதுகாக்கப்படவேண்டிய ஒன்று

மதுரை சொக்கன் said...

@Prabakaran
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.உங்கள் கருத்தை நண்பர் பட்டாபிக்குத் தெரிவித்துவிட்டேன்.