சிவனுக்கு நீலகண்டன் என்றொரு பெயரும் உண்டு.வழக்கில் கருமையை நீலம் என்றும் பச்சை என்றும் சொல்வதுண்டு.திருமாலைப் பச்சைமேனியன் என்றும் இராமனை நீல நிறத்தவன் என்றும் கூறுவது கருமையையே குறிக்கும்.அது போலவே சிவனின் கழுத்து கறுத்த காரணத்தால் அவர் நீலகண்டன் என அழைக்கப்பட்டார்.
சிவனின் கழுத்து கறுத்ததற்குக் காரணமாக ஒரு கதை உண்டு.பாற்கடலைத் தேவர்களும் அசுரரும் சேர்ந்து கடைந்தபோது அதிலிருந்து நஞ்சு தோன்ற, மற்றவர் நலன் கருதிச் சிவன் அதை உண்டதாகவும்,பார்வதி தேவி அவர் கழுத்தைப் பிடித்து நஞ்சு உள்ளே செல்லாமல் நிறுத்த,சிவனது கழுத்து கறுத்ததாகவும் கதை சொல்வர்.
இது பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார்--
”அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடையோற்கே”
வெண்மையான தலைமாலையை அணிந்த சிவபெருமானுக்கு அண்டங்களையும் எட்டுத் திசைகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் அதோ முகத்தின் கழுத்து கரிய நிறம் உடையதாய் இருப்பதை அறியார் எவருமிலர்.அவர் நஞ்சை உண்டதால் கருமை அடைந்தது என்று உரைப்பவர் அறிவற்றவர்.
பாடலின் பொருள் இவ்வளவே.
ஆனால் இது மட்டுமா திருமூலர் சொல்வார்?
உட்கருத்து என்ன எனப் பார்த்தால்,---
சுக்கிலத்தை கீழ்நோகிச் செலுத்தி வீணாக்குவது கருமையின்,அறியாமையின் குறியீடு. ஆனால் அதை மேல் நோக்கிச் செலுத்துதல்,விந்து மறித்தல் அறிவின் குறியீடு .தொண்டைக் குக் கீழ் உள்ள உடற்பகுதி அறியாமைக்கும்,தொண்டைக்குமேல்,புருவ நடுவும் அதற்கு மேலும் உள்ள பகுதி ஒளிமயமான அறிவின் குறியீடு ஆகும்.நஞ்சு உண்ணுதல் என்பது சுக்கில சக்தியை மடைமாற்றி ஆக்ஞாசக்கரத்திற்கு மேல் செலுத்துதல் என்பதே இதன் உட்பொருள். இதுவே சிவன் உண்ட நஞ்சின் தத்துவம்
ஆனால் இக்கருத்து குண்டலினி பயிலும் மனிதர்க்குப் பொருந்தினும்,தலைவனான சிவனுக்குப் பொருந்துமா?
எனவே பஞ்சாக்ஷர தீபத்தில் வேறு பொருள் கொள்ளப் பட்டிருக்கிறது
பாற்கடல் என்பது மூவகையாருயிர் வர்க்கம்;
தேவர்கள் என்பது நல்வினை
அசுரர்கள் என்பது தீவினை
ஆன்மபோதம் என்னும் மலையினால் பாச ஞானம் என்னும் அமுதம் பெறும் பொருட்டுக் கடையும்போது ஆணவத்தின் காரியமாகிய,அஞ்ஞானம்,மோகம்,மதம்,மாற்சரியம் ஆகிய நஞ்சு திரண்டு உயிர்கள் மறைக்குங்காலத்து இறைவன் அந்த நஞ்சை விழுங்கி,”இவ்வண்ணம் எப்போதும் காப்போம்”என்பதற்கு அறிகுறியாகக் கண்டத்தில் வைத்தான்,எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
அதோ முகம் என்பது இறைவனின் ஆறாவது முகம்.அவனது முகங்கள் பற்றிப் பிறிது ஒரு சமயம் பார்ப்போம்.
Monday, December 10, 2012
Monday, April 30, 2012
இறைவன் எங்கு இருக்கிறான்?எங்கு இல்லை?
வழ்க்கம் போல் ஞானியார் முன் ஊர் மக்கள் பலர் அமர்ந்து அவரது அறிவுரையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.தியானம் முடிந்து கண் விழித்த ஞானியார் அனைவரையும் பார்த்துச் சிரித்து ஆசி வழங்கினார்.
சொக்கன் ஞானியைப் பார்த்து,அடக்கத்துடன் பேசத் தொடங்கினான்.
“சாமி,எங்க வீட்டு மாடத்திலே,பிடாரி அம்மன் இருக்குதுன்னு பரம்பரையாக் கும்பிட்டுக் கிட்டு வரோம்.இன்னிக்கு ஆத்தாவுக்குப் படையல் வச்சோம்,அந்தப் பிரசாதங்கள் சாமிக்காகக் கொண்டு வந்திருக்கிறேன்.”
ஞானி பிரசாதங்களைப் பார்த்தார்.பின் சொக்கனைப் பார்த்தார்.சிரித்தார் .பின் கேட்டார் ”.படையல் எல்லாம் வைத்து இறைவனிடம் என்ன வேண்டிக் கொண்டாய்.? இன்னும் காடு,கழனி வாங்க வேண்டும்,சொத்து பெருக வேண்டும் இது போன்ற உன் பல ஆசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றுகேட்டாய் அல்லவா?நீ மட்டுமல்ல. அனைவருமே அப்படித்தான். ஆனால் இறைவன் உன் வீட்டு மாடத்திலும் மண்டபத்திலும், கூடத்திலும் கோவிலிலும்,வேடம் அணிந்த ஆஷாடபூதிகளிடமும் இருக்கிறான் என்றா எண்ணுகிறாய்.இல்லை. ஆசையை விட்டவர் யாரோ அவருடைய நெஞ்சத்தில் இருக்கிறான். நெஞ்சம் என்பது ஆசைகளால் நிரம்பியிருந்தால் அந்த ஆசைகள் மூலம் வரும் மற்றவை--கோபம், பொறமை, வெறுப்பு இப்படிப் பலவும்- நிரம்பி அதனால் ஏற்படும் குப்பைகளும் சேர்ந்து நிரம்பியிருக்கும்.ஏற்கனவே நிரம்பியிருக்கும் ஒரு இடத்தில் எப்படி வேறு ஏதாவது புக முடியும்.எனவே மனதை ஆசைகளற்றுத் தூய்மையாக வைத்துக் கொண்டால் அந்தக் காலி இடத்தில் இறைவன் அமர்ந்து கொள்வான்”
”மாடத் துளானலன் மண்டபத் துளானலன்
கூடத் துளானலன் கோயி லுளானலன்
வேடத் துளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத் துளேநின்று முத்திதந் தானே”-- (திருமந்திரம்)
(இறைவன் வீடுகளின் மாடத்திலும், மண்டபத்திலும், கூடத்திலும்,கோவிலிலும்,திரு வேடத்திலும் அணுக்கமாக இருப்பவன் அலன்.அவாவறுத்தார் நெஞ்சில் மறைந்திருந்து,வீடு பேறு அளிப்பவன்) .
Thursday, April 26, 2012
சூனிய சம்பாஷணை-மூச்சுப் பயிற்சி.
ஓம் நமசிவாய
மீண்டும் ஒரு நீண்ட இடைவெளி!
திருமூலர் இன்றுதான் மீண்டும் அழைத்திருக்கிறார்.
இன்றைய பாடல்--
”ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள
மூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர்
பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்
கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே ”
நேரடியான பொருள் என்று பார்த்தால் மிக அற்பமான ஒரு செய்தியாகவே தோன்றும்
ஏழு கிணறுகள்,இரண்டு ஏற்றங்கள் உள்ளன.ஏற்றத்தில் மூத்தவன் நீர் இறைக்க, இளையவன் பாய்ச்ச ,நீர்,வயலுக்குப் பாயாமல் வெறுமனே சென்று கெடுமாகில்,அது பயனின்றிப் போகும்;எவ்வாறெனில்,ஒரு விலைமாது வளர்த்த பையனைப்போல.
இதன் மூலம் என்ன சொல்கிறார் திருமூலர்.?
இங்கு ஏழு துரவுள என்பது உடலில் உள்ள ஏழு சக்கரங்களை--மூலாதாரம்,சுவாதிட்டானம்,மணிபூரகம்,அநாகதம்,விசுத்தி,ஆக்ஞை,சகஸ்ராரம் என்பன--குறிக்கின்றது.
ஏற்றம் இரண்டுள என்பது மூச்சு இயங்கும் வழிகளான,இடகலை.பிங்கலை இரண்டையும் குறிக்கும்.
மூத்தான் இறைக்க என்பது ,இடகலை வழியாக(சந்திரகலை) மூச்சை வெளி விடுவதையும்,இளையான் படுத்த என்பது பிங்கலை(சூரியகலை) வழியாக மூச்சை உள்ளிழுப்பதையும் குறிக்கும்.
சாதாரணமாக மூச்சு அவ்வாறுதான் இயங்குகிறது.இதனால் சக்தி வீணாகிறது. பயனின்றிப் போகிறது.அவ்வாறன்றி.இவ்விரு கலைகளும் சமமாகப் பங்கேற்குமாறு, மூச்சு நடு நாடியாகிய சுழு முனையில் இயங்கினால்,ஞானமாகிய ஒளி பிறக்கும்.
கூத்தி வளர்த்ததோர் கோழிப் புள்ளாமே என்பதைப் பலவிதமாப் பலர் பொருள் கொண்டாலும்,அடிப்படைக் கருத்து அங்கு ஒன்றுதான்.-பயனின்றிப் போவது.
வேறு ஒரு உரையில் வேறு விதமாகவும் பொருள் கொள்ளப் பட்டுள்ளது.
ஏற்றம் இரண்டுள என்பது புண்ணிய பாவங்களைக் குறிப்பதாகவும்,ஏழு துரவுள என்பது சீவன் விரும்பும் ஏழு தோற்றங்களைக் --உடல்,மனம், தனம்,ராச்சியம்,உலகம்,உயர்வு ,சேவகம்-- குறிக்கும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.இந்த ஏழு ஆசைகளில் அல்லல்பட்டு மாயையில் உழலும் சீவனுக்கு உடையாளி யாரும் இல்லை, கணிகையின் மகனை யாரும் உடமை கொள்ளாதது போல் .
பஞ்சாட்சர தீப உரை விதமாகப் பொருள் கொள்கிறது.உயிர்ப்பின் செயலை நெறிப்படுத்தும் மூக்குத் துளைகளாகிய இரண்டு ஏற்றங்கள் உள்ளன.உடம்பின் ஆற்றல் குவிந்துள்ள கிணறுகள் ஏழுள்ளன.மூத்தவனாய ஆங்காரம் என்னும் தத்துவம் அம்மூச்சை நடத்துகிறது.அவ்வாங்காரத்தினின்று தோன்றிய மனம் விழைவு வடிவத்தில் நின்று அம்மூச்சுப் பயனை உலக விடயங்களில் சேர்ப்பிக்கின்றதுஇதனால் பெற வரும் நீர் போன்ற உயிர்ப்பு ஆற்றல்பயனை வளர்த்துகொள்ள உதவாமல் வீணே செலவாகின்றது.
Subscribe to:
Posts (Atom)