Tuesday, August 21, 2007

யாக்கை நிலையாமை

அந்த வீட்டுப் பெரியவர் வாழ்வின் கடைசிக்கட்டத்தில் இருந்தார்.மருத்துவர்கள் கூறி விட்டனர்,இன்றிரவோ
நாளையோ,என்று.பெரியவரின் மகன்கள்,மகள்கள்,மற்றும் நெருங்கிய உறவினர்கள் வந்து விட்டனர்.வீடு முழுவதும் சோகம்
நிறைந்திருந்தது.தவிர்க்க முடியாத ஒரு முடிவை எதிர் நோக்கி
அனைவரும் காத்திருந்தனர்.
மறு நாள் விடிந்தது.பெரியவர் வாழ்வும் முடிந்தது.வீட்டிலிருந்து
உரத்த அழு குரல்கள் எழுந்தன.ஓலமும் ஒப்பாரியும் வெளிப்பட்டது.
இறுதி யாத்திரைக்கான எற்பாடுகள் செய்யப்பட்டன.சில காரணங்களால்
எற்பாடுகள் தாமதமாகின.அந்த வீதியில் வசிக்கும் ஒரு முக்கிய நபர்
பொறுமை இழந்தவராக விசாரித்துக் கொண்டிருந்தார்."நேரமாகுதில்லே.
பொணத்த எப்ப எடுக்கப்போறாங்க?"இதே நபர் முன் தினம் விசாரித்துக் கொண்டிருந்தார்"முருகேசன்(பெரியவரின் பெயர்) எப்படிப்பா இருக்கான்.ரொம்ப நல்லவன்."
சிறிது நேரம் சென்று இறுதி யாத்திரை தொடங்கியது.ஆண்கள் சுடு
காட்டுக்குச் சென்றனர்.உடல் தகனம் செய்யப்பட்டது.அனைவரும் குளித்து வீடு திரும்பினர்.வீட்டில் இருந்த பெண்கள் குளித்து முடித்தனர்.வீடு கழுவி விடப்பட்டது.
மாலை வந்தது.மெள்ள மெள்ள அனைவரும் இயல்பு நிலைக்குத்
திரும்பிக்கொண்டிருந்தனர்.சூழ்நிலையை இயல்பாக்க யாரோ தொலைக்காட்சிப்பெட்டியை உயிர்ப்பித்தனர்.ஆரம்பமாயிற்று அவரவர் இயல்பு வாழ்க்கை.
"ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங்காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில்மூழ்கி நினைப்பொழிந்தார்களே."--(திருமூலர்)

6 comments:

Unknown said...

நன்றாக இருக்கிறது. அப்படியே பட்டினத்தார் போன்ற சித்தர்களின் பாடல்களுக்கும் விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும்.

மதுரை சொக்கன் said...

நன்றி தாமோதர் சந்துரு
முக்கியமான திருமந்திரப்பாடல்களைப் பற்றி எழுதுவதற்கே ஒரு வாழ் நாள் போதாதே.இருந்தாலும் முடிந்தால் முயல்கிறேன்.

மதுரை சொக்கன் said...

@ mani
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Vasu said...

மிக அருமை . ஒரு சிறு சம்பவம் மூலம் கூறிஇருக்கும் யுக்தி பாராட்டுக்குரியது . தொடரட்டும் உங்கள் பணி உங்கள் பாணியில். வாசுதேவன்

மதுரை சொக்கன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, திரு.வாசு அவர்களே.உங்களைப் போன்றோரின் ஆதரவுடன் என் பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

cheena (சீனா) said...

அன்பின் மதுரைச் சொக்கன் - யாக்கை நிலையாமையினை அப்படியே எடுத்துரைக்கும் திருமூலர் திருமந்திரம் எவ்வளவு எளிமையாக இருக்கிறது ......நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா