அவன் அந்த ஆற்றங்கரைக் கோவில் மண்டபத்திலேயே தங்க ஆரம்பித்தான்.அவனது பெரும்பகுதி நேரம் தியானத்திலேயே கழிந்தது.பசிக்கும்போது ஊருக்குள் சென்று யாரிடமாவது உணவு கேட்டுச் சாப்பிடுவான்.அந்த ஊரில் யாரும் அவனுக்கு உணவிட மறுப்பதில்லை.அனைவருக்கும் அவனிடம் ஒரு மரியாதை இருந்தது.
ஒரு நாள் அவன் சென்று கொண்டிருக்கும் போது ஒருவன் கையில் கற்களுடன் எதையோ தேடுவது போல்
நின்று கொண்டிருந்தான்.அவனைப்பார்த்ததும் அந்த ஒருவன் சொன்னான்"சாமி,ஒரு நாயி எப்பப்பார்த்தாலும் என்னைக் கண்டா கொலச்சுக்கிட்டே இருக்கு.அந்த சமயத்தில அத அடிக்கக் கல்லத் தேடினா கல்லு கெடைக்க மாட்டேங்குது.இப்ப கல்ல எடுத்து வச்சுக்கிட்டு நாயத் தேடினா அதக்காணும்.அந்தக்காலப் பெரியவங்க சரியாத்தான் சொன்னாங்க"நாயக்கண்டாக் கல்லக்காணும்,கல்லக்கண்டா நாயக்காணும்"அப்படின்னு".அவன் சிரித்தான்."இந்த மக்கள் உண்மையான பொருளை விட்டு விட்டு வேறு ஏதோ பொருளைக்கற்பித்துக்கொள்கிறார்களே"என்று நினைத்தான்.பின் சொன்னான்."அதற்குப்பொருள் அப்படியல்ல.கல்லில் செய்யப்பட்ட ஒரு நாயின் சிலையில் நாயின் உருவத்தை ரசித்துப்பார்க்கும்போது கல் கண்ணுக்குத்தெரிவ்தில்லை.அது என்ன கல்,செங்கல்லா,கருங்கல்லா என்று ஆராயும்போது நாய் தெரிவதில்லை.அதுதான் பொருள்."
மற்றவன் சொன்னான்"இதெல்லாம் எங்களுக்கு என்ன சாமி தெரியும்?நீங்க சொன்னாத் தெரிஞ்சுக்கறோம்."
அவன் நினைத்தான்."இறைத்தத்துவமும் இது போலத்தானே.ஐந்து பூதங்களாகிய நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் இவற்றை வியந்து அவற்றில் லயிக்கும் போது இறைவன் மறைந்து விடுகிறான்.பஞ்ச பூதங்களுக்கும் காரணமான பரம்பொருளை நினைக்கும் போது அவை மறைந்து இறைவனே நிற்கிறான்.'
அவன் கோவில் மண்டபத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார் முதல் பூதமே.-(திருமூலர்)
2 comments:
அன்பின் மதுரைச் சொக்கன் - மாமத யானை தெரியும் - ஆனால் பார்மூலப்பூதம் தெரியாது - இரண்டுமே திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் ஒரே பாடலில் இருந்தும் - ஒன்று மட்டுமே தெரியக் - அறியக் காரணம் என்ன ? - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ஒன்றை ஒன்று மறைத்து விடுகிறதே!அதற்குக் காரணம் நம் அறியாமைதானே!
நன்றி சீனா
Post a Comment