Monday, August 6, 2007

இரண்டல்ல(அத்வைதம்)

அவன் மிகவும் களைத்திருந்தான்.பல நாட்களாய் அலைந்து உடலும் தேடலுக்கு விடை கிடைக்காமல் மனமும் சோர்ந்திருந்தான்.கையில் பணமில்லாததால் இரண்டு நாட்களாக ஒன்றும் உண்ணாமல் துவண்டிருந்தான்.ஊர் ஊராய் ஒவ்வொரு கோவிலாய் இறைவனைத் தேடித் தேடி அலுத்திருந்தான்.அந்த ஊர் கோவிலில் தெய்வம் சக்தி நிறைந்தது, இந்த ஊர்க் கோவிலில் இறைவன் விசேடமானவர் என்றெல்லாம் ஒவ்வொருவர் சொல்வதையும் கேட்டு ஒவ்வொரு ஊராய் அலைந்து அவன் தேடும் கடவுளைக்காணாமல் ஏமாற்றம் அடைந்திருந்தான்.இப்போது அந்தக் கிராமத்தின் ஆள் அரவமற்ற ஆற்றங்கரைக் கோவில் வாசலில் பசியின் காரணமாக கண்கள் இருண்டு மயக்கமடைந்து கீழே விழுந்தான்.
தன் முகத்தில் விழுந்த நீரின் குளிர்ச்சியில் அவன் கண் விழித்தான்.எதிரே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.அரையில் ஒரு துண்டு,தலையில் முண்டாசு,கையில் ஒரு கோல்.சிறுவனைப்பார்த்த அவன் முனகினான்"பசி".சிறுவன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த சில பழங்களை அவனிடம் நீட்டினான்.பழங்களைத்தின்று சிறிது பசியாறிய அவன் சொன்னான்"கடவுள் மாதிரி வந்து காப்பாற்றி விட்டாயப்பா".சிறுவன் கேட்டான் "என்னங்க ஆச்சு?"அவன் சொன்னான்"கடவுளைத்தேடி ஊர் ஊராய் சுற்றினேன்.காண இயலவில்லை."
சிறுவன் சிரித்தான்"இப்பதான் என்னைப்பார்த்து கடவுள் மாதிரின்னு சொன்னீங்க.அப்ப எங்கிட்ட கடவுள் இருந்தா ,எல்லார் கிட்டயும் இருக்கணும்,உங்க கிட்டயும் இருக்கணும்.ஆனால் கடவுளைத்தேடி ஊரெல்லாம் அலஞ்சேனு சொல்றீங்களே.சிரிப்புதான் வருது சாமி"
அவனுக்குப் பளார் என்று அறைந்தது போல் இருந்தது.கண்களை மூடித்திறந்தான்.சிறுவனைக் காணவில்லை.உண்மை உணர்ந்தான்.தான் வேறு கடவுள் வேறில்லை என்பதை உணர்ந்தான்.பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி புலன்களைக்குவித்து உள்ளே இருக்கும் கடவுளோடு ஒன்றினான்."அஹம் ப்ரம்ஹாஸ்மி"

"சீவன் என்ன சிவனார் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரைஅறிகிலர்
சிவனார் சிவனாரைஅறிந்த பின்
சீவனார் சிவனாயிட்டிருப்பரே"-(திருமூலர்)

7 comments:

ஜீவி said...

உங்கள் எழுத்து, ஆக்கபூர்வமாக இருக்கிறது.
அதுவே, மேலும் மேலும் படிக்கத்
தூண்டுகிறது.
இப்படி நிறைய எழுத வேண்டுகிறேன்.

மாசிலா said...

உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்தேனுங்க. சும்மா நச்சுன்னு இருக்குது ஐயா.

தொடருங்க. வாழ்த்துக்கள் மதுரை சொக்கன்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

மதுரை சொக்கன் said...

நன்றி ஜீவி, நன்றி மாசிலா,
தொடர்ந்து எழுத உங்கள் கருத்துக்கள் எனக்கு புதிய பலம் தந்திருக்கின்றன

உண்மைத்தமிழன் said...

ஐயா ஆன்மிகம் என்பதை கிண்டல் செய்துதான் வலைப்பதிவுகளில் நிறைய பதிவுகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் தங்களைப் போன்ற ஆன்மிகவாதிகளின் வருகை எங்களைப் போன்ற தெய்வ நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு பலமாக இருக்கக்கூடும். வருக.. வருக.. வரவேற்கிறேன்..

மதுரை சொக்கன் said...

உண்மைத்தமிழன் அவர்களே ஆன்மீகம் என்பது ஒரு நல்ல வாழ்க்கை நிலை,வாழ்க்கை முறை,வாழ்க்கையின் ஆதாரம்.அதை ஒரு அசிங்கமான சொல்லாக நினைப்பவர்களும் ஒரு நாள் உண்மையை உணர்வர்.
உங்கள் வரவேற்புக்கு நன்றி,

cheena (சீனா) said...

அன்பின் மதுரை சொக்கன்

கண்களை மூடி புலன்களைக் குவித்து நம்முள்ளே இருக்கும் கடவுளோடு ஒன்ற வேண்டுமா ? அஹம் ப்ரம்ஹாஸ்மி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

வலைச்சரம் வழியாக வந்தேன் - பின் தொடர்வதற்காக இம்மொழி