Wednesday, November 20, 2013

இறைவனின் இயல்புகள்!



நீண்ட நாட்களாக பயணம் சென்றிருந்த  ஞானி அன்றுதான் திரும்பி வந்திருந்தார்.அவர் முன் ஊர் மக்கள் காத்திருந்தனர்.தன் பயம் பற்றியெல்லாம் ஞானி விரிவாக எடுத்துச் சொன்னார். பல கோவில்களுக்குச் சென்ற அனுபவத்தை விவரித்தார்.

ஒருவன் கேட்டான்”ஸ்வாமி!இறைவன் என்பவன் ஒருவனா?இருவரா?பல பேரா? விளக்குங்கள்” என்றான்.

ஞானி விளக்க ஆரம்பித்தார்......

திருமந்திரத்தின் முதல் பாடல் சிவம் பற்றி அழகாகச் சொல்கிறது.பாடலை முதலில் சொல்கிறேன் கேளுங்கள்..

“ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
 நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
 வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
 சென்றனன் தானிருந் தானுர்ணந் தெட்டே”

சிவம் ஒன்றாகவும்,அவனும் அவனுடைய இன்னருளும் என இரண்டாகவும்,அயன்,அரி,அரன் என மூன்றாகவும்,நான்கு நிலைகளாக உணரப் பெற்றும் ஐம்பொறிகளை வென்றும்,
அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய்,ஆறாதாரங்களைக் கடந்தும்,
ஏழாவதாகிய துவாத சாந்தப் பெருவெளியில் சென்றும் அட்டமூர்த்திச் சொருபமாய் உணரப் பெற்றவர்.

ஒன்று என்று சொன்னால் அது என வரவேண்டும்.அல்லது ஒருவன் அவன் என வரவேண்டும். அவ்வாறில்லாமல் ஏன் ஒன்றவன்தானே எனச் சொன்னார் ?

அவன் உயர் திணை அஃறிணைப் பொருள்கள் அனைத்திலும் கலந்து அனைத்தையும் கடந்து இருப்பவன்.ஞானசம்பந்தர் கூறுவார்”எல்லாத் த்துவங்களையும் கடந்து வாக்கு மதிட்கு எட்டாமலிருந்துள்ள தற்சொரூபம்” என்ரு

இரண்டு என்றது அவனும் அவனது அருளுமென இரண்டு.தன்னிலிருந்து அருளைப் பிரித்து அதற்குச் சக்தியெனப் பெயர் அமைத்து இரண்டாயினன்.

மூன்று என்றதுபலவகையாகப் பொருள் கொள்ளப்படலாம்.படைத்தல்(பிரம்மா) காத்தல்
(விஷ்ணு) அழித்தல்(ருத்திரன்),என்றோ ஆன்மா, சிவம்,சக்தி என்றோ,அவன்,அவள்,அது என்றோ சாத்வீகம், ராஜசம்,தாமசம் ஆகிய முக்குணங்களையோ ,பதி,பசு,பாசம்  என்பவற்
றையோ,இச்சா சக்தி,கிரியா சக்தி,ஞான சக்திகளையோ குறிப்பதாக்கொள்ளலாம்.

நான்கு என்பது நான்கு வேதங்களையோ,சரியை,கிரியை,யோகம்,ஞானம் ஆகிய நான்கு அனுபவங்களையோ குறிப்பதாக கொள்ளலாம்.இதையே வேறு விதமாகவும் கொள்ளலாம். விசுவாதிகன்,விசுவ காரணன்,அந்தர்யாமி,விசுவரூபி என நான்காக உணரப் படுபவர்.

ஐந்து என்பது,ஐந்து புலன்களையோ,ஆக்கல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் ஆகிய செயல்களையோ குறிப்பதாக் கொள்ளலாம்.

ஆறு என்பது  மூலாதாரம்,சுவாதிட்டானம்,மணிபூரகம்,அநாகதம்,விசுத்தி,ஆக்கினை,ஆகிய ஆறு ஆதாரங்களைக் குறிப்பதாகவோ,(இவற்றுக்கான மூர்த்தி சொரூபங்கள் விநாயகர், பிரமன், திருமால்,ருத்திரன்,மகேசுவரன்,சதாசிவன்) மந்திரம்,பதம்,வண்ணம், கலை, புவனம், தத்துவம் ஆகிய ஆறு அத்துவாக்கள் எனவும் கொள்ளலாம்.

ஏழு என்பது ஆறாதாரங்களைக் கடந்த சஹஸ்ராரமாகவோ, ஏழுமேல் உலகம் ,ஏழு கீழ் உலகம் ஆகியவற்றையோ கொள்ளலாம்.

எட்டு உணர்ந்தான் என்பது,நிலம்,நீர்,நெருப்பு,காற்று ஆகாயம்,சூரியன்,சந்திரன்,சீவன் ஆகிய வற்றைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.தமிழில் ’அ’ என்பது எட்டைக் குறிக்கும்.எனவே அவன் அகரமாக உணரப் பெற்றவன் எனவும் கொள்ளலாம்.(அகர,உகர,மகரச் சேர்க்கையே ’ஓம்’)

எவ்வாறு நோக்கினும் இறைவன் ஒருவனே!அவன் தோற்றம் பல!



7 comments:

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான பாடலை
அருமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம்
பகிர்ந்தவிதம் மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Unknown said...



நீண்ட நாட்களாக பயணம் சென்றிருந்த சொக்கன் இன்றுதான் திரும்பி வந்தார்.

வருக !தருக!

வே.நடனசபாபதி said...

அருமையான விளக்கம். இறைவன் ஒன்றா அல்லது பலரா என்ற கேள்விக்கு இதைவிட அழகாக பதில் சொல்லமுடியாது. ஆனால் நீங்கள் தந்துள்ள எளிய விளக்கம் இல்லையென்றால் திருமந்திரத்தில் உள்ள இந்த பாடலின் பொருள் புரிந்திருக்காது. வாழ்த்துக்கள்! இனி குறைந்தது, வாரம் ஒரு பதிவாவது சொக்கன் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கலாமா?

பால கணேஷ் said...

இறைவன் ஒருவன் எனில் அவனுக்கு எதற்கு பல சொரூபங்கள் என்ற ஐயப்பாடு என்னிடமும் இருந்தது. அழகான, தெளிவான விளக்கம்! நன்றி சொக்கரே! திருமந்திரப் பாடலைப் புரிந்து மகிழ்ந்தேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_8.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Unknown said...

அருமையான விளக்கம்...
சொக்கநாதர் எழுந்தருளிய
மதுரை சொக்கன் அவர்களுக்கு
அன்பு வாழ்த்துகள்..

Ramesh DGI said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News