வேதாந்த வாக்கியங்கள் நான்கு, மகா வாக்கியங்கள் என்று அழைக்கப் படுகின்றன.வேதாந்தம் என்பது வேதத்தின் அந்தம்,முடிவு.இவையே உபநிடதங்கள்.
ஐதரேய உபநிடதத்தில் காணப்படும் வாக்கியம்-”பிரஞ்ஞானம் பிரம்ம” என்பது.
பிருகதாரண்ய உபநிடதத்தில்காணப்படும் வாக்கியம்-”அஹம் பிரஹ்மாஸ்மி(பிரம்மைவாஹம் அஸ்மி)” என்பது.
சாந்தோக்கிய உபநிடதத்தில் சொல்லப்படும் வாக்கியம்-”தத்துவம் அஸி” என்பது.
மாண்டூக்ய உபநிடத்தில் வரும் வாக்கியம்-”அயமாத்மா பிரஹ்ம” என்பது.
எளிய முறையில் பொருள் சொன்னால்- 1)மெய்யுணர்வே பிரம்மம்(கடவுள்) 2)நான் கடவுள் 3)நீ அதுவாக இருக்கிறாய். 4)இந்த ஆத்மா பிரம்மன்.
இவை அனைத்தும் ஒரே பொருளையே உணர்த்துவன. நமக்குள்ளேயே கடவுள் இருப்பதை குறிக்கின்றன.
குரு சீடனுக்கு உணர்த்துகிறர்-த்வம்(நீ),தத்(அது),அஸி (இருக்கிறாய்).
இதை சீடன் உணர்ந்த நிலைதான் –அஹம் பிரஹ்மாஸ்மி.
தற்சமயம் மிகவும் பிரபலமாக இருக்கும் வாக்கியம்.
தன்னுள் இருக்கும் சிவனை உணரும்போது இந்த சீவன் சிவனாகிறான்.அதுவே அத்வைதம். இது பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார்? இதோ ஒரு மீள் பதிவு- இரண்டல்ல(அத்வைதம்)
அவன் மிகவும் களைத்திருந்தான்.பல நாட்களாய் அலைந்து உடலும் தேடலுக்கு விடை கிடைக்காமல் மனமும் சோர்ந்திருந்தான்.கையில் பணமில்லாததால் இரண்டு நாட்களாக ஒன்றும் உண்ணாமல் துவண்டிருந்தான்.ஊர் ஊராய் ஒவ்வொரு கோவிலாய் இறைவனைத் தேடித் தேடி அலுத்திருந்தான்.அந்த ஊர் கோவிலில் தெய்வம் சக்தி நிறைந்தது, இந்த ஊர்க் கோவிலில் இறைவன் விசேடமானவர் என்றெல்லாம் ஒவ்வொருவர் சொல்வதையும் கேட்டு ஒவ்வொரு ஊராய் அலைந்து அவன் தேடும் கடவுளைக்காணாமல் ஏமாற்றம் அடைந்திருந்தான்.இப்போது அந்தக் கிராமத்தின் ஆள் அரவமற்ற ஆற்றங்கரைக் கோவில் வாசலில் பசியின் காரணமாக கண்கள் இருண்டு மயக்கமடைந்து கீழே விழுந்தான்.
தன் முகத்தில் விழுந்த நீரின் குளிர்ச்சியில் அவன் கண் விழித்தான்.எதிரே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.அரையில் ஒரு துண்டு,தலையில் முண்டாசு,கையில் ஒரு கோல்.சிறுவனைப்பார்த்த அவன் முனகினான்"பசி".சிறுவன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த சில பழங்களை அவனிடம் நீட்டினான்.பழங்களைத்தின்று சிறிது பசியாறிய அவன் சொன்னான்"கடவுள் மாதிரி வந்து காப்பாற்றி விட்டாயப்பா".சிறுவன் கேட்டான் "என்னங்க ஆச்சு?"அவன் சொன்னான்"கடவுளைத்தேடி ஊர் ஊராய் சுற்றினேன்.காண இயலவில்லை."
சிறுவன் சிரித்தான்"இப்பதான் என்னைப்பார்த்து கடவுள் மாதிரின்னு சொன்னீங்க.அப்ப எங்கிட்ட கடவுள் இருந்தா ,எல்லார் கிட்டயும் இருக்கணும்,உங்க கிட்டயும் இருக்கணும்.ஆனால் கடவுளைத்தேடி ஊரெல்லாம் அலஞ்சேனு சொல்றீங்களே.சிரிப்புதான் வருது சாமி"
அவனுக்குப் பளார் என்று அறைந்தது போல் இருந்தது.கண்களை மூடித்திறந்தான்.சிறுவனைக் காணவில்லை.உண்மை உணர்ந்தான்.தான் வேறு கடவுள் வேறில்லை என்பதை உணர்ந்தான்.பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி புலன்களைக்குவித்து உள்ளே இருக்கும் கடவுளோடு ஒன்றினான்."அஹம் ப்ரம்ஹாஸ்மி"
"சீவன் என்ன சிவனார் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரைஅறிகிலர்
சிவனார் சிவனாரைஅறிந்த பின்
சீவனார் சிவனாயிட்டிருப்பரே"-(திருமூலர்)
4 comments:
கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு பதிவு போட்டுட்டு தமிழ்மணத்துல சேக்க வந்தா, நீங்களும் ஒண்ணு போட்டுருக்கீங்க. என்ன ஒத்துமை? :)
வாழ்த்துகள் அண்ணே !!
great men think alike!உங்கள் இடுகையைப் படித்துவிட்டுப் பின்னூட்டம் இட்டபின் இங்கே மறு மொழிதரலாம் என எண்ணினேன்.ஆனால் உங்கள் இடுகையை ஆழ்ந்து படிக்க நேரமாகும் என நினைக்கிறேன்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
திரு மதுரை சொக்கன்,
உங்கள் பதிவு அருமை.
ஆனால் உங்கள் எல்லை இது இல்லை என உணர முடிகிறது.
உங்களின் முழுமையான ஆற்றல் வெளிகொணர்ந்து எழுதுவீர்கள் என எண்ணுகிறேன்.
வாழ்த்துக்கள்.
மதிப்புக்குரிய ஸ்வாமி அவர்களே,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் நம்பிக்கை பொய்க்காமல் சிறப்பாக எழுத உங்கள் ஆசியும்,எல்லாம் வல்ல இறைவன் அருளும் துணை இருக்கட்டும்.
மீண்டும் நன்றி
Post a Comment