அன்று ஞானியின் முன் வழக்கம்போலப் பலர் கூடியிருந்தனர். அனைவரையும் ஞானி ஒரு முறை பார்த்தார் .நீண்ட நாட்களுக்குப் பின் வந்திருந்த ஒருவனைப் பார்த்துக் கேட்டார்."என்ன,சொக்கா,பல நாட்களாக உன்னைக் காணவில்லை?எங்கு போயிருந்தாய்?"ஞானிக்குத்தெரியும் அவன் எங்கு போயிருந்தான் என்று.ஆயினும் சில விஷயங்களை அவர்களுக்கு உணர்த்துவதற்கு ஒரு வாய்ப்பாக அதைப் பயன் படுத்திக் கொண்டார்.
அவன் சொன்னான் "சாமி,காசி,ராமேச்வரம் இன்னும் பல கோவில்களுக்கெல்லாம் போய் வந்தேன்.எல்லா இடங்களிலும் நல்ல தரிசனம்.எல்லாப் பூசைகளும் செய்து ஆண்டவனை வணங்கினோம்."
ஞானி புன்னகைத்தார்."இறைவனைப் பல ரூபங்களில் பல ஊர்களில் தரிசித்திருக்கிறாய்.திருப்தி அடைந்திருக்கிறாய். ஆனால் உன்னுள்ளேயே இருக்கிறானே அவன்!அதை உணர்ந்திருக்கிறாயா?உன் உடலையும் உயிரையும் சேர்த்து வைத்திருப்பவன்,உன் உடலையே தான் வாழும் நாடாகக் கொண்டவன்,உன் உடலுக்குள்ளேயே மணம் கமழ எழுந்த்ருளியிருக்கும் ஞான குரு அவன்.அதை உணராமல் கோவில் கோவிலாகச் சென்று இறைவனைத் தேடுகிறாய்.அவ்வாறு செல்வது தவறென்று நான் சொல்லவில்லை.ஆனால் உன்னுள் இருக்கும் இறைவனை உணர்ந்து விட்டால் தேடல் நின்று போகும்.உன் உள்ளத்தினுள்ளே அவனைப் பார்.வணங்கு.வேறென்ன வேண்டும்.?"
அவர்களுக்குப் புரிவது போலிருந்தது.
"காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேயெங்குந் தேடித் திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே."-----(திருமூலர்)
No comments:
Post a Comment