Wednesday, December 5, 2007

நமச்சிவாய

"அஞ்சு உள ஆனை அடவியுள் வாழ்வன;
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன;
அஞ்சையும் கூடத்துஅடக்கவல்லார்கட்கே
அஞ்சு ஆதி ஆதி அகம்புகலாமே."--(திருமூலர்)

உடல் என்ற காட்டுள் ஐம்பொறிகளாகிய ஐந்து யானைகள்வாழ்கின்றன.எவர்க்கும் கட்டுப் படாமல் அவை அலைந்து திரிகின்றன.அவற்றை அடக்குவதற்கு ஐந்து அங்குசங்கள் இருக்கின்றன.அவை 'நமசிவாய' என்ற ஐந்து எழுத்துக்களாகும்.அந்த ஐந்து யானைகளையும் ஐந்தெழுத்து மந்திரத்தைக் கொண்டு அடக்க வல்லவரே அந்தப் பரமாத்மாவை அடைய முடியும்.

இங்கு ஐம்பொறிகளும் ஐந்து காட்டு யானைகளாக உருவகப் படுத்தப் பட்டுள்ளன.அவை இந்த உடல் என்னும் காட்டில் வசிக்கின்றன.விருப்பம் போல் அலைந்து திரிகின்றன.காடென்பது புதர்கள் மண்டி,இருள் சுழ்ந்து காணப்படும் .அது போல இந்த உடல் அழுக்காறு,அவா,வெகுளி போன்ற புதர்கள் மண்டி,அறியாமையாகிய இருள் சூழ்ந்திருக்கிறது .நமசிவாய என்ற ஐந்தெழுத்தை ஓதுவதன் மூலம் ஐம்பொறிகளை அடக்குவதோடல்லாமல் இந்த உடலில்(மனதில்) மண்டியுள்ள புதர்களை,இருளை நீக்கி இறையருளைப் பெறவும் முடியும்.

இங்கு 'அஞ்சாதி ஆதி' என்றது ஐம்பூதங்களுக்கும் முதல்வனான சிவனை.
திருவாசகத்தின் ஆரம்பமே"நமச்சிவாய வாஅழ்க" என்பதுதான்.யஜுர் வேதத்தின் மையமாக விளங்குவது ஸ்ரீ ருத்திரம்.இந்த ஸ்ரீ ருத்திரத்தின் நடுவிலே அமைந்தது நமச்சிவாய மந்திரம்.ஸ்ரீருத்திரத்தைக் கற்று ஓதுவது என்பது எல்லோர்க்கும் சாத்தியமன்று.ஆனால் 'நமச்சிவாய"என்று சொல்வது எளிது.இதற்கு குருமுகமாக உபதேசம் எதுவும் தேவையில்லை.எனவேதான் திருமூலரும் இந்த எளிய மந்திரமே புலன்களை அடக்கி இறையருள் பெறும் வழியாகும் என்று சொல்கிறார்.

2 comments:

புரட்சி தமிழன் said...

ஓய்வு கொடுத்தா ஓய்வெடுக்கனம் இப்படி மக்கள் மனத கெடுக்க கூடாது கற்ப்பூரத்தில் பத்தவெச்சா வீடு எறியாம இருக்குமா, பஞ்சாமிர்த்துல விஷம் கலந்து சாப்பிட்டா சாகாம இருப்பியா அறிவியல் கண்டு பிடிச்ச இந்தர் நெட்ல ஆதிசிவம் வறாரு உங்க சிவனுக்கு அடுத்த நாட்டுக்கு போக விசா கெடைக்கலையோ ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை திருத்தவே முடியாதா

மதுரை சொக்கன் said...

புரட்ச்சி தமிழன் அவர்களே
உங்கள் கருத்துக்களை,உங்கள் நம்பிக்கைகளை பதிவுகளில் வெளியிட உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை மாற்றுக் கருத்து,நம்பிக்கைகள் உள்ளவர்களுக்கும் இருக்கிறது.இன்றைய ஆத்திகர் நாளை நாத்திகர் ஆகலாம்.நாளைய ஆத்திகர் இன்று நாத்திகராக இருக்கலாம்.அனைத்துக்கும் அவரவர் அனுபவங்களே ஆதாரம். இதில் நமக்குள் ஏன் சண்டை?
வருகைக்கு நன்றி