Monday, November 26, 2007

புலன் மயக்கம்

ஒரு ஊரில் ஒரு அந்தணன் இருந்தான்.அவனிடம் ஐந்து கறவைப் பசுக்கள் இருந்தன.நல்ல உயர்ந்த ரகப் பசுக்கள்.நன்கு,அதிகமாகப் பால் தரக்கூடிய பசுக்கள்.ஆனால் அப் பசுக்களை மேய்ப்பதற்கு எந்த விதமான எற்பாடும் அவன் செய்யவில்லை.அப்பசுக்கள் தம் மனம் போல தினமும் எங்கெங்கோ மேய்ந்து திரிந்து பாலைச் சொரிந்து விட்டு வீடு திரும்பி வந்தன . அப்பசுக்களின் பயன் அதன் உரிமையாளனுக்குக் கிடைக்காமல் போயிற்று. அப்பசுக்களைச் சரியான முறையில் தினமும் மேய்ப்பதற்கு அவன் ஏற்பாடு செய்திருந்தால் நல்ல பயன் அடைந்திருப்பான்.அந்தப் பசுக்கள் ஐந்தும் பாலாய்ச் சொரிந்திருக்கும்.

"பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரு முண்டாய் வெறியு மடங்கினால்
பார்ப்பான் பசுவைந்தும் பாலாச் சொரியுமே"--(திருமூலர்)
( பார்ப்பான்-ஆன்மா; அகம்-உடல்; ஐந்து பசுக்கள்-ஐம்புலன்கள் )
ஆன்மா என்ற பார்ப்பானின் உடலில் ஐம் பொறிகளான கறைவைப் பசுக்கள் ஐந்து உள்ளன.அவை மேய்ப்பவர் இன்றி விருப்பம் போல் திரிவன.(புலன்கள் அடக்கப் படாமல் இன்பம் தேடி அலைகின்றன.)புலன் நுகர் பொருட்கள் மீதுள்ள ஆசையை அறுத்து இறைவன் பால் மனத்தைச் செலுத்தினால் பொறிகள் என்ற பசுக்கள் பேரின்பம் என்ற பாலைத் தரும்.

"சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு."-திருக்குறள்

4 comments:

இரண்டாம் சொக்கன்...! said...

நீங்களும் சொக்கனா...

ஹி..ஹி...

வாழ்த்துக்கள்....

மதுரை சொக்கன் said...

வாழ்த்துக்கு நன்றி இரண்டாம் சொக்கன் அவர்களே

புரட்சி தமிழன் said...

ஐந்து புலமும் அடக்கி பார்க்கவேண்டியது தானே

மதுரை சொக்கன் said...

புரட்ச்சி தமிழன் அவர்களே,
புலன்களை அடக்குவது என்பது அவற்றின் இயக்கத்தை நிறுத்துவது அல்ல.அவற்றை நல்வழிப் படுத்துவது.இது உங்களாலும் இயலும்.திருமூலரே சொல்கிறார்
"அஞ்சும் அடக்கு,அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை;
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே."

வருகைக்கு நன்றி